ஒன்றரை மாதங்கள் கழித்தே ஆனந்தின் தாயாரின் நலக்குறைவிற்கு காரணம் என்ன என அறிய வந்தனர். சாம்பவிக்கு இரத்த புற்றுநோய் என்றும், அது உடல் முழுவதும் ஏற்கெனவே பரவி விட்டதென்றும், அவரது உடலில் உயிர் தங்கி இருக்கப் போவது இன்னும் சில மாதங்களே எனவும் தெரியவர முத்துராஜ் மிகவும் இடிந்து போனார்.
தன் முன்னால் நடமாடிக் கொண்டிருக்கும் மனைவி சில மாதங்கள்தான் உயிரோடு இருக்கப் போகிறார் என்று தெரிந்த பின்னர் அந்த மனிதரால் அதனை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
தன்னை விடவும் தனது மகனை எண்ணினால் இன்னும் துயரமாக இருந்தது. தனது தாயே உலகம் என நினைக்கும் தங்களது செல்ல மகனால் இந்த துயரத்தை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?’ இருளடர்ந்த குகைக்குள்ளாக விடப்பட்ட மனிதரைப் போல செல்லும் திசையறியாமல் திகைத்தார்.
யாரிடம் என்ன சொல்வது? எதை தெரியப் படுத்துவது? ஒன்றும் புரியாதவராக திகைத்துப் போனார். யாரிடமும் சொல்ல முடியாத துயரம் தாங்கத்தானே நட்புக்கள் இருக்கின்றன.
கணேசனுக்கு அழைப்பு விடுத்தவர் தனது மன வேதனைகளைச் சொல்லி அழுது முடித்தார். இதனை மகனிடம் எப்படி சொல்வது என வழி அறியாதவராக ஓரிரு வாரங்களை கடத்தினார். பார்வதிக்கு விபரம் தெரியவர அவரும் மிகவே கலங்கினார். தனது சகோதரியும் தோழியுமானவரை இழப்பதா? அவரது மனம் நிலையில்லாமல் தவித்தது.
கணவனின் பிடிப்பற்ற, தவிப்பான செய்கைகளாலோ இல்லை தனது உடல் நிலை அறிந்தோ ஒரு நாள் சாம்பவிக்கு தானாகவே எல்லாம் புரிந்து போயிற்று. கணவனிடம் சண்டை போட்டு தனது உடல் நிலை குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
அவரும் எத்தனைதான் சுமப்பார்? விபரத்தை சொல்லி அழலானார். சாம்பவியால் முதலில் தன்னுடைய உடல்நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
‘ஐயோ தன் வாழ்க்கையில் என்னென்ன ஆசைகள் வைத்திருக்க, அதில் ஒன்றும் நிறைவேறாமல் செல்வதா? என் மகன் படிப்பு இப்போதுதானே முடியப் போகின்றது இனிமேல் அவன் படித்து முடித்து ஒரு நிலைக்கு வர வேண்டும். அவனுக்கு என்று ஆசை ஆசையாக தான் பெண் பார்த்து மனம் முடிக்க வேண்டும். அதன் பின்னர் எனது பேரப்பிள்ளைகளை எல்லாம் ஆசையாசையாக குளிப்பாட்டி, அவர்கள் கன்னத்தில் நெற்றியில் உச்சியில் பொட்டிட்டு, அலங்கரித்து செல்லம் கொஞ்சி… ஐயையோ எனது எத்தனை எத்தனை ஆசைகள் அத்தனையும் நிராசையாவதா?’
மனம் நொந்து வெந்து தவித்தவர் முதலில் கணவனை வாட்டி எடுத்தார். தானும் நொந்து அழவும் ஆரம்பித்தார்.
“இங்க பாருய்யா… நான் போனதுக்கு அப்புறம் நீ ரெண்டாவதா கல்யாணம் பண்ணுறியோ இல்லை பண்ணலையோ அது எனக்கு தெரியாது. ஆனால், என் பிள்ளையை மட்டும் நல்லா படிக்க வைக்கணும். பணத்தை சேர்த்து வைக்கிறேன்னு கஞ்சத்தனம் செஞ்சியோ நான் உன்னை சும்மா விட மாட்டேன்.”
“நானே நொந்து போய் இருக்கேன் என்ன பேசற நீ சாம்பவி?”
அவர் தான் சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்ல “ஆனந்த் என்ன படிக்கணும் என்றாலும் நான் படிக்க வைப்பேன். என்னை நம்பு சாம்பவி” எனச் சொல்லி மனைவிக்கு வாக்குறுதி கொடுத்த பின்னரே சாம்பவி நிம்மதி அடைந்தார்.
மனைவி இந்த நிலையில் இருக்க, உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசுகின்ற எதையும் தவறாக எடுத்துக்கொள்ளாமல் புரிந்து கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவியை பார்க்க அவருக்கு மட்டும் மகிழ்ச்சியா என்ன?
தனது படிப்பில் கால் வருட பரீட்சையின் போது ஊருக்கு வந்த ஆனந்த் அப்போதுதான் தாயின் உடல் நிலை குறித்த விபரங்கள் அறிந்தான். தனது தாய் உயிரோடு இருக்கப் போவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் எனத்தெரிய வரவும் அவன் உள்ளுக்குள்ளாக வெகுவாக நொறுங்கிப் போனான்.


Leave a Reply