Epi 3_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அது என்னமோ அவள்தான் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய அகழியை வெட்டி வைத்தாள். அவளது கோட்டைக்குள் அவன் புகுந்து விட முடியாதவாறு அந்த அகழிக்குள்ளாக வெறுப்பு, துவேஷம் எனும் பெரிய பெரிய முதலைகளை உலவ விட்டாள்.

தங்கள் இருவருக்கும் இடையில் எந்த விதத்திலும் உறவு பறிமாற்றம் என்ற ஒன்று ஏற்பட விடாமல் அவள் தடுக்க, தள்ளி நிற்கின்ற அவளை நெருங்க, அவள் உருவாக்கிய அகழியை இடித்து மூடி அவர்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியை தகர்த்து உடைக்க அவனோ முயற்சி செய்து கொண்டே இருக்கின்றான்.

இரவு உணவு உண்டு படுக்கைக்கு சென்ற பிறகு வரைக்குமே ‘தனது பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?’ என புரியாமல் மனதை உழப்பிக் கொண்டதில் அன்று இரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை.

மதிய நேரம் அவளை ஆக்கிரமித்து இருந்த சிந்தனைகள் மறுபடியும் அவளை தொடர்ந்தன. அவளது வாழ்வில் அந்த ஒன்பது வயதிற்கு பிறகு நிகழ்ந்தவைகள் எதுவுமே நன்மை தராதவைதானே?

தனது குழந்தைப் பருவ சிந்தனையில் அவள் மறுபடியும் ஆழ்ந்து போனாள். ஆனந்தின் தாய் சாம்பவி மற்றும் சம்பூர்ணாவின்  தாய் பார்வதி இருவரது நட்பும் தோழமையும் அவரவர் கணவர்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பால் தொடர்ச்சிதான்.

ஆரம்பத்தில் தங்களுக்குள்ளாக நல்லது கெட்டதுகளை பரிமாற ஆரம்பித்தவர்களின் உறவு நெருங்கி இறுகி இரத்த உறவினரை போலவே ஆகி விட்டிருந்தன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கணேசனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிந்து முத்துராஜின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு புதுமணமகளாக பார்வதி வந்த போது முத்துராஜ் மற்றும் சாம்பவிக்கு ஆனந்த் பிறந்து தவழ ஆரம்பித்து இருந்தான்.

எல்லா பெண்களும் எதிர்பார்க்கும் தாய்மை பார்வதிக்கு உடனே கிட்டவில்லை. கிராமப் பகுதிகளில் குழந்தை கருவுறாத பெண்களை புண்படுத்தும் விதங்கள் நாம் அறிந்ததுதான் அல்லவா?

பார்வதி அக்கம் பக்கத்தினர் கூறும் பல்வேறு வேண்டாத வார்த்தைகளை கேட்டு மனம் சோர்ந்து இருக்கும் போதெல்லாம் அவரை தேற்றுவது சாம்பவி யாகத்தான் இருக்கும்.

“இப்போது உனக்கு உடனே குழந்தை பிறக்காவிட்டால் என்ன? உன் குழந்தை பிறக்கும் வரையில் நீ ஆனந்தை உன் பிள்ளை போல் கவனித்துக் கொள்ளேன்” என அவனை அவரிடம் தூக்கி கொடுத்து விடுவார். அவனும் கூட இரு வீட்டிற்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான்.

 இப்படியாக வெகுவான காத்திருப்பிற்கு பின்னர் பிறந்தவள்தான் சம்பூர்ணா. அதற்கடுத்து மறுபடியும் ஒன்பது வருடங்கள் கழித்து தான் மறுபடி கருவுருவோம் என்று பார்வதி எண்ணியிருக்கவில்லை. 

முன்பு கருவுறாததற்கு குறைச் சொன்ன ஊர் வாய்கள், இப்போது தாமதமாக கருவுற்றதற்கு என்னச் சொல்லுமோ? என்பது போன்ற தயக்கங்கள் பார்வதியிடம் ஆரம்பத்தில் இருந்தாலும் சாம்பவிதான் அவரது அந்த தயக்கத்தையுமே போக்கினார்.

“இப்ப இதுக்கு என்னவாம்? வீட்டுக்கு ஒவ்வொன்னு வச்சிருக்கோம், இன்னொரு பிள்ளை இருந்தால் நல்லதுதானே? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?” என்றவராக பார்வதியை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டார்.

ஆனந்த் தன்னுடைய ஃபேஷன் டிசைனிங் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க அவனுக்கு மும்பை சென்று அட்மிஷன் வாங்கி, அவனை ஹாஸ்டலில் சேர்த்து வரும் வரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

துறுதுறுவென சுறுசுறுப்பாக வளைய வரும் சாம்பவி திடீரென சோர்ந்து சோர்ந்து துவளவும் காரணம் என்ன எனப் புரியாமல் முத்துராஜ் மனைவியை அழைத்துக் கொண்டு க்ளினிக் க்ளினிக்காக அதன் பின்னர் அக்கம் பக்கம் இருக்கும் பெரிய மருத்துவமனைகள் ஒவ்வொன்றாக அலைந்தார்.

மருந்து மாத்திரைகள் கூடினவே தவிர சாம்பவி உடல் நிலையில் ஏதும் மாற்றமில்லை. மாதாந்திர பரீட்சைகள் முடிந்து பெற்றோரை பார்க்க வந்த ஆனந்துக்கும் தாயின் உடல் நிலை கவலையை அளித்தது.

மருத்துவ அறிக்கைகள் அங்கே கற்றை கற்றையாக இருக்க, அதை எடுத்து வாசித்தும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தாயின் உடல் நிலை சரியாக வேண்டும் எனும் கவலையோடு அவன் தனது படிப்பை பார்க்க திரும்பினான்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!