தங்கள் பிள்ளைச் செல்வம் இப்படி மனம் உடைந்து போவதை பார்க்க இயலாமல் தானே அவர்கள் முடிந்த வரையிலும் அவனிடம் உண்மையைச் சொல்லாமல் தள்ளிப் போட்டு இருந்தனர்.
ஆனந்த் சுவற்றை பார்த்தவண்ணம் வெறித்து இருந்தான். இப்போது அவனுக்கு தனது எதிர்கால கனவுகள், இலட்சியங்கள் எதுவுமே நினைவில் இல்லை.
இந்த நிகழ்கால பெரிய துன்பத்தை தாண்டினால் அல்லவா அவனுக்கு எதிர்காலம் புரியும்!
‘ஐயோ ஐயோ’ என அவனது மனம் அடித்துக் கொண்டது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்கு மட்டும் அவனது குடும்பத்தை தாண்டி என்ன ஆசை இருந்தது?
வாழ்வில் உயர்வை அடைந்து, தனது பெற்றோருடன் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றி வர வேண்டும் என அவனிடம் எத்தனை எத்தனை ஆசைகள் உண்டு.
தனது வாழ்வில் தாய் இல்லாமல் எப்படி இருக்கும்? யோசிக்கவே கும்மிருட்டாக இருந்தது. என்னென்னவோ எண்ணிப்பார்த்தும் ஒன்றுமே புரியவில்லை.
அவனது தாயோ அவனது மன ஓட்டம் அறியாதவராக அல்லது யாருடைய மனவோட்டத்தையுமே அறிய விரும்பாதவராக தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஆனந்து நீ நல்லா படிக்கணும், நீ என்ன ஆகணும் என்று நினைக்கிறாயோ அதை அடையணும். நீ நல்லா பெரிய ஆளா வந்து காண்பிக்கணும். என்ன புரியுதா ராசா?” என தான் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்த வரை மூளை மழுங்கியவனைப் போல அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
தொடரும்


Leave a Reply