Epi 4_Manadhoram Unthan Ninaivugal

அதன் பின்னர் வீட்டினருக்கான நேரம்… அப்பா, அம்மா மற்றும் தங்கைகள் என அலைபேசியில் நேரம் செலவழிந்தது. அந்த கெஸ்ட் ஹவுஸ் வசதிகளை வீடியோ காலில் சுற்றிக் காட்ட அவள் வீட்டினருக்கு பரம திருப்தி.

“நாளைக்கு இங்க கடை எங்கே இருக்குன்னு பார்த்து சாமான் வாங்கி சமைக்கணும் மா…”

தாய்க்கு விபரம் சொன்னவள் அலைபேசியை துண்டித்தாள். தன் அறைக்கு வந்து உள்ளே பூட்டிக் கொண்டவளாக அந்த ஒற்றைப் படுக்கையில் தலை சாய்க்க, தன்னை ஒட்டிக் கொண்டே இருக்கும் தங்கைகளை மனம் தேடியது. இப்படி இத்தனை தனிமையாக அவள் தன்னை முன்பு ஒருபோதும் உணர்ந்ததில்லை.

‘சரி, ஒரு சில வாரங்கள் தானே? நாட்களை கடத்துவோம்’ என எண்ணி நேரம் போக்க அலைபேசியை எடுத்து வாட்சப் ஸ்டேடஸில் யார் யார் என்ன வைத்து இருக்கிறார்கள்? எனப்பார்க்க பாஸ்கரது ஸ்டேடஸ்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. 

குடும்பத்தினரோடு அவன் இருக்கும் புகைப்படங்களை வரிசையாக வர அதனடுத்து குழுவாக இருக்கும் சில புகைப்படங்கள் வர அடுத்து வந்தது அவள் எதிர்பாராதது ஜீனியர் என் டி ஆர் புகைப்படங்கள் சிலவற்றில் அந்த நடிகரோடு பாஸ்கரும் இருந்தான். 

தான் பார்த்த குழு புகைப்படங்கள் அத்தனையும் “ஜீனியர் என் டி ஆர் இரசிக மன்ற” புகைப்படங்கள் என ஒருவாறாக மீராவுக்கு புலப்பட்டது. 

மீராவுக்கு இப்போது அலுவலகத்தில் தாம் பார்த்த தாடிக் கேடிகளின் பிண்ணனிக் காரணம் புலப்பட்டது. ‘அப்பப்பப்பப்பா தமிழர்களை விட தெலுங்கர்கள் இன்னும் அதிகமான சினிமா பைத்தியமா இருப்பாங்க போலவே?’ வியந்தாள்.

பாஸ்கர் ஜீனியர் என் டி ஆர் இரசிக மன்றத்தில் பெரிய பொறுப்பில் இருக்கின்றவனாக இருக்க வேண்டும். அதனால் தான் நடிகரோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பதெல்லாம் சாத்தியமாகி இருக்கும் எனும் எண்ணம் வந்ததும் தாடியோடிருந்த மற்றொருவனது நினைவும் வந்துச் சென்றது.

‘கார்த்திக்…. ஐயோ கார்த்திக் அவனை எப்படி மறந்தேன்? அவனுக்கு என்னவாகி இருக்கும்?’ அவனை முதன் முதல் பார்த்ததும் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறுபடி உள்வாங்கினாள் மீரா.

கார்த்திக் குறித்து குழுவில் எத்தனை விவாதித்து இருப்போம் ஆனால், ஒருபோதும் யாரும் இதனை சொன்னதே இல்லையே?

அவனைக் குறித்து இவள் என்னென்னமோ நினைத்திருக்க, அவனைக் கண்ட போதோ? அவனது வலக்கண் பழுதாகி ஒளியின்றி வெள்ளை நிறமாக அந்தப் பகுதி இருக்க, அவனது தாமத வருகையும் நின்றிருந்த விதமும் அவளுக்கு சொன்னதென்ன? அவனிடத்தில் அத்தனை தயக்கம் … புதிதாய் வருகை தருகின்றவள் தன்னைப் பார்த்து அதிர்ச்சியுறுவாளோ? இல்லை பரிதாபம் கொள்வாளோ? என எண்ணியிருப்பான் போலும்.

இவளோ சாதாரணமாகப் பேசி கைகுலுக்க நீட்டியதும், பட்டும் படாமல் அவனது விரல்கள் தொட்டு விலகியதிலும் அவனிடம் பெரும் தயக்கம் வெளிப்பட்டு இருந்தது. ‘ஓ சமூக வலைத்தளங்களில் இவன் இல்லாத காரணம் இதுதானோ?’

கார்த்திக் என்றாலே மீராவின் மனதில் இருக்கும் சில கசப்புணர்வுகள் மாறாதுதான். ஆனால், இன்று அவனை கண்ட பின்னரோ தாம் இங்கு இருக்கும் சில வாரங்களில் அவனுடன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என அவள் முடிவெடுத்தாள். ஆனால், அப்படி அவள் மட்டும் முடிவெடுத்தால் போதுமா?

அடுத்த நாள் தான் கொண்டு வந்த சில பொருட்களைக் கொண்டு சமைத்து காலையும் உண்டு, மதியத்திற்கும் கொண்டு போக அலுவலகத்தில் அவள் செய்ய வேண்டிய வேலைகள் வரிசைக் கட்டி நின்றன. கார்த்திக் அவள் செய்ய வேண்டிய வேலைகள் விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தான்.

அவனை அவள் காலை முதலாக காணவில்லை. பெரும்பாலான மேனேஜர்களைப் போல தாமதமாகத்தான் வருவான் போலும் என எண்ணியவள், காலை பதினொன்று முதல் வேலைக்கான அந்த மீட்டிங்கை அனுரேகா எனும் ப்ரொஜெக்ட் லீடுடன் நடத்திக் கொண்டிருக்க அவளது சீரியஸான அணுகுமுறை அனுரேகாவை வியப்பில் ஆழ்த்தி இருக்க வேண்டும்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *