“உனக்கு ஏராளமான விஷய ஞானம் இருக்கின்றது” எனச் சொல்ல மீரா முறுவலித்தாள்.
“அதுக்காக மொத்தத்தையும் நீ இன்னிக்கே முடிக்கணும்னு நினைக்கிறது தப்பு… நானே போன வாரம் தான் ஆஃபீஸ்ல சேர்ந்திருக்கேன்… நீ இத்தனை கற்றுக் கொடுத்தால் எப்படி? ச்சில் கர்ள்” சொல்ல மீராவின் புன்னகை விரிந்தது.
“ஹைதராபாத் சுத்தி பார்த்தியா இல்லியா?”
“இனிதான்… போகணும்”, தயங்கியே பதிலளித்தாள்.
அனுரேகாவின் பேச்சுக்கள் நிற்காமல் தொடர்ந்தன. பிறந்ததில் இருந்து ஹைதராபாதில் வசிக்கின்றவளாயிற்றே? ஒரு இண்டு இணுக்கு விடாமல் இடத்தின் விபரங்கள் சொல்ல, மீரா தங்கைகளுக்காக வாங்க இருந்த முத்து நகைகளுக்கான இடங்களை குறித்து வைத்துக் கொண்டாள்.
முத்துக்களுக்கு பெயர் போன ஹைதராபாத், சார்மினாராக்கு பெயர் போன ஹைதராபாத், பிரியாணிக்கு பெயர் போன ஹைதராபாத், நிஜாம்களுக்கு பெயர்போன ஹைதராபாத்… அப்பப்பா அனுரேகாவின் ஒவ்வொரு பேச்சிலும் எத்தனை பெருமிதம்!?
தனக்கு போரடிக்கவும் அலுவலக பேச்சை வெற்றிகரமாக மாற்றிய அனுரேகாவின் சரளமானப் பேச்சில், மீரா கொஞ்ச நேரத்தில் ஏராளமான விபரங்களை தெரிந்துக் கொண்டாள்.
கூகிளின் உதவியில் தான் அத்தனையையும் அறிந்துக் கொள்ள அவள் எண்ணி இருந்தாள். அவளாக இத்தனையும் யாரிடமும் சென்று விசாரித்து தெரிந்துக் கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லை.விபரத்தை இணையத்தில் பெற்றுக் கொள்வதற்கும், அவ்விடத்தில் வசிப்போரிடம் தெரிந்துக் கொள்வதற்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கின்றதல்லவா?


Leave a Reply