தனக்கு சரளமாக அரட்டை அடிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும், பிறர் பேச கேட்கும் பழக்கம் இருப்பதால் மீரா நடு நடுவே தட்டுத் தடுமாறி பதிலளித்துக் கொண்டு புன்னகை முகமாய் அமர்ந்திருந்தாள். அப்போது அந்த அறையின் கண்ணாடிக் கதவை யாரோ தட்டுவது கேட்கவும் திறந்தாள்.
ஹப்பா… எதிரில் நின்றவனைக் கண்டதும் இவளுக்கு மூச்சடைத்தது. ‘முன் தினம் தன்னைப் பார்க்க, தன்னிடம் பேச தயங்கி நின்றவனா இவன்?’ எனும் படியாக இருந்தான் கார்த்திக். அவன் முகத்தில் இப்போது தாடியை காணவில்லை. முடியையும் ட்ரிம் செய்து ஒரே நாளில் பராரி நிலையில் இருந்து ஃபெராரியில் பயணிப்பவன் போல மாறி இருந்தான்.
‘ஷப்பா அதென்ன சிரிப்பு? ஆளை விழுங்கி கபளீகரம் செய்கின்றது போல?’ பேஸ்தடித்து நின்றவள் அவன் அவளிடம் பேசாமல் அனுரேகாவிடம் தெலுங்கில் பேசுவதை கவனித்து நின்றாள்.
‘நானும் தமிழச்சி தான் நீங்க என்ன பேசினாலும் எனக்குப் புரியும்’ என்பதான பாவனை இவளிடம்.
இப்போது கார்த்திக் பதவிசாய் மீரா பக்கம் திரும்பினான். அதாவது இதுவரையில் அங்கு மீரா நிற்பதை அவன் காணவில்லையாம். நம்பித்தான் ஆக வேண்டும். இவள் மட்டும் என்ன? அவனை கண்டிருந்தாளா என்ன? இப்போதுதானே அவனை கவனிக்கின்றாள். அதாவது அப்படி காட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது அனுரேகா முன்பாக சில விஷயங்களை சொல்லிச் சென்ற கார்த்திக், மீராவிடம் தன்னை வந்து சந்திக்கச் சொன்னான். அவன் அவளின் தற்போதைய ரிப்போர்ட்டிங்க் மேனேஜர் ஆயிற்றே? அவன் அழைத்தால் இவள் அவனை சந்தித்துதானே ஆக வேண்டும்?
மீட்டிங்கிற்கு அப்புறமாக பாஸ்கரை சந்தித்து அனுரேகாவுடன் பேசியவைகளை விவரிக்க அவனும் சிலவைகளை பகிர்ந்துக் கொண்டான். மறந்தும் அவனது வாட்சப் ஸ்டேடஸில் இருந்த ஜீனியர் என் டி ஆர் குறித்து அவள் கேட்கவில்லை. அவரவருக்கு அவரவர் இரசனைகள் அல்லவா?
அன்றே மீராவிற்கு கார்த்திக் ஒரு டாகுமெண்ட் தயாரிக்கும் வேலையை கொடுத்தான். தான் எந்த வேலையாக வந்திருக்கிறோமோ அதற்கும் இந்த டாகுமெண்டேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என மீரா திணறினாலும் கூட கவனமாக அதனை தயாரித்துக் கொடுத்தாள். அதன் பின்னர் கார்த்திக்கின் மீராவிற்கான மண்டை குடைச்சல்கள் ஆரம்பித்தன.
கடந்த சில நாட்களில் மீராவிற்கு கார்த்திக் மீது இருந்த ஒரு சில எண்ணங்கள் சற்று மாறியிருந்தன. தகுதி இல்லாதவனுக்கு மேனேஜர் பதவி என ஆரம்பத்தில் அவள் எண்ணியிருக்க, அவன் பிறரை சிரித்துப் பேசியே வேலை வாங்குவதில் எமகாதகனாக இருந்தான். சும்மாவா எல்லாரும் அவனை அண்ணகாரு, அண்ணகாரு என அழைக்கின்றார்கள்?
பிறரிடம் அன்பாக பேசியே வேலை வாங்குவது ஒரு திறமை. அதிலும் புன்னகை மாறாமல் உரிமையாக, கிண்டலும் கேலியுமாக பேசி மிகச்சரியாக வேலை செய்ய வைத்து விடுவதென இவை எல்லாம் தனக்கு சுட்டுப் போட்டாலும் வராதே?
மீரா அவனளவு தனக்கு திறமை இல்லை என்றே புரிந்துக் கொண்டாள். சொன்ன வேலையை சிரமேற்றுச் செய்வாள். ஆனால், பிறரை தனது கட்டுக்குள் கொண்டு வருவது? தன் விருப்பத்திற்கு பிறரை வளைப்பது என்பது அவளுக்கு சுத்தமாக வராது. அவனைப் பார்த்து தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள எண்ணினாள்.


Leave a Reply