மதிய மீட்டிங் நேரம் அந்த கான்ஃபரன்ஸ் அறையில் ஒருவர் பின் ஒருவராக தத்தம் மடிக்கணிணியோடு வந்து அமர்ந்தனர். ஆலிஸ் தன்னுடைய டைரியில் காலையில் முதல் தான் சேர்த்த குறிப்புகளை சரி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அலுவலக மடிக்கணினிகள் மேனேஜர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தன.
அங்கு வந்திருந்த பலரும் அவளுக்கு அறிமுகம் ஆகாதவர்கள் ப்ராஜெக்ட் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கிளை அலுவலகங்களில் இருந்தும் சிறந்தவர்களை அனுப்பி வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் “ஹாய்” என்று சொல்லி வந்து அமர, சிலர் வெகு பிஸியாக போனில் பேசிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
பெரும்பான்மை ஆட்கள் குழுமியதும் இன்னும் சிலர் வரவிருக்கின்றனர். நேரமாவதால் நாம் இப்போது ஆரம்பிக்கலாம் என ராகவன் அறிமுக பேச்சை ஆரம்பித்தார். ப்ரொஜெக்டரில் கணக்கீடுகள் விபரங்கள் எல்லாம் திரையிடப்பட அனைவர் கவனமும் அங்கே திரும்பியது.
ஆளுமையான அவர் குரல் முன்பாக அனைவரும் சட்டென்று அமைதியானார்கள். புது ப்ரொஜெக்ட் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இதனை சிறப்பாக செய்து முடித்தால் தங்களுக்கு இதன் மூலம் வரவிருக்கும் புதிய வாய்ப்புகள் எத்தகையவை என அனைவருக்கும் ப்ரொஜெக்டரின் ஸ்லைடுகளில் இருந்த விபரங்களை மிக விளக்கமாக கூறலானார்.
தன்னுடைய இருபது நிமிடத்திற்கு மேலான உரைக்கு பின்னர் தாம் கூறியவற்றில் யாருக்கேனும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று ராகவன் சொல்லவும் அங்கிருந்த பலரும் சில பல கேள்விகள் கேட்க அவர் உரிய பதில் கொடுத்தார்.தனது குறிப்புகளிலிருந்தும் ஆலிஸ் ஒரு சில கேள்விகள் கேட்டு தெளிந்தாள்.
அடுத்ததாக வரவிருந்த அனைவரும் வந்து விட்டிருந்ததால் இணைந்து செயல்பட இருக்கும் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.
அனைவரும் தத்தம் பெயர்களும் தங்களது பொறுப்புக்களையும் கூற, ராகவன் புது ப்ரொஜெக்டில் அவர்கள் செய்யப் போகும் பணி என்ன?, யார் அந்தக் குழுவை தலைமை ஏற்கப் போகிறார் என்பதை சிறு விளக்கத்துடன் இணைத்து கூறலானார்.
அனைவரது விபரங்களை ஆலிஸ் தனக்கு ஞாபகப் படுத்திக் கொள்ளும் வண்ணமாக சிறுசிறு குறிப்புகள் எடுத்துக் கொண்டாள். தனது முறை வந்தபோது கணீரென்ற குரலில் தன்னைக் குறித்த சிறு குறிப்பொன்றைக் கூற, அவளது பொறுப்பை கூறிய ராகவனின் அறிமுகத்திற்கு அப்பால் அவளை புதுக்குழுவிற்கு உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போதுதான் தன்னை தாண்டி இடது புறத்தில் இருப்பவர்கள் தம்மை அறிமுகப்படுத்த ஆரம்பிக்க அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள். அது சின்ன கான்ஃபெரன்ஸ் அறையாக இருந்ததால் அமர இடம் கிடைக்காமல் ஓரிருவர் நின்றுக் கொண்டும் இருந்தனர்.
தனக்கு அடுத்து அமர்ந்து இருப்பது மணிவண்ணன் ஏற்கெனவே சென்னை பிராஞ்சில் வேறொரு டீமை மேனேஜ் செய்கின்றவன் அவன் தான் தன்னுடைய பாஸ் அதாவது புது ப்ரொஜெக்டின் குறிப்பிட்ட துறையின் மேனேஜர் என புரிந்துக் கொண்டாள். இருவரும் புன்முறுவல் பறிமாறிக் கொண்டனர்.
அடுத்தடுத்து நபர்கள் அறிமுகம் ஆக நின்றுக் கொண்டிருந்த நெடியவர்களில் ஒருவன்
“ஐயாம் பிரனீத்….’ என்று பேச ஆரம்பித்தான். வாய் திறந்தான் மூடினான் என்பது போல இருந்ததே தவிர சத்தமே இல்லாத மிக மென்மையான பேச்சு அவனுடையது.ஆனால், பேசிய நொடிகளில் தன்னுடைய பேச்சை அனைவரையும் கவனிக்க வைத்தான். ராகவன் பிரனீத் பெங்களூர் ஆஃபீசிலிருந்து சில மாதங்கள் புது ப்ரொஜெக்டிற்காக வருகை தந்ததாகவும் சீனியர் மேனேஜர் பதவி வகிக்கும் அவனது திறமைகளை பட்டியலிட்டு பாராட்டவும் அவனை பிறர் உற்சாகமாக வரவேற்றனர்.
அவன் பேச ஆரம்பித்ததிலிருந்து மற்றெதுவும் ஆலிஸ் மூளைக்குள் செல்லாமல் தடைப்பட்டது. அவள் பார்த்த வரையில் யாருமே குறிப்பாக ஆண்கள் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்துவதில், சுயதம்பட்டம் அடிப்பதில் முனைப்பாக இருப்பார்கள்.
சத்தமாய் அலட்டலாய் பேசுவது என்று பிறர் கவனம் கவரவே முயலுவார்கள். ஆனால், இந்த பிரனீத் எனும் பிரதினிதி…ச்சே தன் மைண்ட் வாய்ஸீம் இவனைப் பார்த்து உளறுகின்றதே மனதில் தலையை குட்டிக் கொண்டவள் பிரனீத் என்கிற பிரகிருதி கடந்த அரை மணி நேரமாக மீட்டிங்கில் இருந்தாலும் இருந்த இடமே தெரியாதது போல கலந்துரையாடலில் பங்கு கொள்ளாமல் ஊமையாய் இருந்ததென்ன?
அறிமுகப்படலத்தில் அத்தனை அமைதியாய் சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்தி கைக்கட்டி மிக இலேசாக தலையை அசைத்து பேசி முடித்ததென்ன?
ஆலிஸ் தன் மனதில் வகுத்திருந்த ஆண்களுக்கான வரையறைகளில் அவன் மாறுபட்டவனாக இருந்த காரணத்தால் அவளது கவனம் ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மீட்டிங்கிற்கு பிறகும் அவன் தன்னை பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் ஓரமாகவே நின்று கொண்டு அனைவரும் கலைந்ததும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
மீட்டிங் முடியவும் பசி தாங்காமல் ஆலிஸ் காஃபேடேரியா நோக்கி வேக எட்டுக்கள் வைத்து நடந்தாள்.இரண்டு நாட்களாக அதிக வேலைப் பளுவால் சமைக்க நேரமில்லாமல் காஃபேடேரியாவில் வாங்கி தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றாள்.மீட்டிங் முடிய நேரம் மூன்று மணியை நெருங்கி விட்டதால் உணவு தீர்ந்துப் போக மிச்சம் மீதி இருந்த சாப்பாடு தான் அவளுக்கு கிடைத்தது.
‘அதாவது கிடைத்ததே’ என அவசரமாய் உண்டு தன்னுடைய இடத்திற்கு வந்தாள் அவள். ஏனென்றால், அடுத்து அவள் கலந்துக் கொள்ள வேண்டிய மற்றோர் மீட்டிங்கும் இருந்தது.
உணவு உண்டு தங்களது இரண்டாவது மீட்டிங்கிற்கு பத்து நிமிடங்கள் முன்பு வந்து விட்டிருந்தவள் தன்னுடைய மின்னஞ்சலில் வந்த புது டீம் விபரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் பலர் ஏற்கனவே அவளுக்கு தெரிந்தவர்களாக இருந்தனர். சில புதிய ஆட்களும் இருந்தனர்.
அடுத்த நாள் காலை எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு கொண்டாள்.தன் புது மேனேஜர் மணிவண்ணன் உடனான மீட்டிங்கில் தாங்கள் செய்ய வேண்டிய வேலை குறித்து உரையாடி முடிவுகள் எடுத்துக் கொண்டனர்.
அன்றைய தினம் முழுவதும் திட்டமிடலில் கழிந்திருக்க, மிக இலகுவாக முடிவுற்றது. அன்று நேரமே வீட்டிற்கு வந்தவள் மூன்று நாட்களாக துவைக்கப்படாமல் இருந்த தனது உடைகளை துவைத்து காயப்போட்டு விட்டு, கதவை காற்றோட்டமாக திறந்து வைத்தவாறு பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.
ஸ்டவ் எரியாமல் மக்கர் செய்தது, “ஏன் ஸ்வீட்டி, என்னாச்சு உனக்கு? காலையில வர நீலக்கலர்ல தானே எரிஞ்சிட்டு இருந்த? இந்த சிலிண்டர் தடியன் இந்த தடவை என்ன சீக்கிரமா என்ன முடிஞ்சுட்டான்? சிலிண்டருக்கு ஒரு எத்துக் கொடுத்தவள் கேஸ் ஸ்டவ் பர்னரிடம் அன்பொழுக பேசிக் கொண்டு இருந்தாள்.


Leave a Reply