சிலிண்டருக்கு சொல்லி வைத்து விட்டு தான் இல்லாத நேரம் வீட்டு உரிமையாளரிடம் சென்று தனது சிலிண்டர் வந்தால் வாங்கி வைக்க சொல்ல வேண்டும் என எண்ணியவாறு தனது போனை எடுத்து சிலிண்டர் ஆர்டர் கொடுக்க நினைத்தவள் திரும்பி கட்டிலில் இருந்த மொபைலை எடுத்து காற்றாட வெளியில் நின்று அழைக்கலாம் என்று வாசல் நோக்கி நகர்ந்தாள்.
அதுவரை தனக்குள்ளாக உரையாடி சுற்றுப் புறம் அறியாதவளாக விரைந்தவள் வாசலில் குமரேஷை பார்த்து திடுக்கிட்டாள். ‘என் வீட்டின் வாசலுக்கு வரும் மட்டும் இத்தனை தைரியம் இவனுக்கு எவ்வாறு வந்தது?’ எனக் கோபம் எழுந்தது. அப்போதுதான் மேல்மாடி குடித்தனக்காரர்கள் இரண்டு குடும்பங்களும் அங்கு இல்லை என்பது அவளது எண்ணத்தில் இடறியது.பரீட்சைகள் முடிந்ததும் அடுத்த நாளே அதாவது முன் தினமே இரண்டு குடும்பங்களும் மே மாத லீவில் சில வாரங்களுக்கு தங்களது ஊர் சென்றிருந்தனர். மற்ற இரண்டு வீட்டிலும் இரவு வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியிருந்தனர். வார இறுதியில் தான் இவள் அவர்களை பார்ப்பதே.
‘மேல்மாடியில் இவள் தனியாக இருக்கிறாள் என்றதும் இவ்வளவு துணிவா இந்த குமரேஷீக்கு? குறைந்த பட்சம் அவனது மனைவிக்கு கூடவா பயமில்லை.’
“என் வாசலில் எதுக்கு வந்து நிக்கிறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”
இதுவரை அவனிடம் நேரில் எதையும் பேசியதில்லை என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். அவளது மனதின் உள்ளே பயம் மத்தளம் வாசித்தது அவனுக்கு தெரிந்து விட்டது போலும்… கேவலமான ஒரு இளிப்பை சிதற விட்டவன்
“நீ தனியா இருப்பன்னு துணைக்கு வந்தேன்” என்றான்.
“எனக்கு துணை எல்லாம் தேவையில்லை, நீங்க மரியாதையா இங்கேயிருந்து போங்க” அவளது பற்கள் நெறிப்பட்டது.
“நிஜம்மா உனக்கு துணை தேவையில்லையா இல்லை வெளியில் துணை தேடிக்கிட்டியா குட்டி?” இரட்டை அர்த்தமாய் பேச, மிகை அழுத்தத்தில் இவளது பற்கள் தெறிக்காதது ஒன்றே மிச்சம்.
இன்னும் என்னென்ன பேசியிருப்பானோ? கீழே ஏதோ சப்தம் கேட்க வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து குமரேஷ் நீங்கினான். அக்கம் பக்கம் வீடுகளில் ஆட்கள் இல்லாதபோது இத்தனை தைரியம் என்றால் அவனது குடும்பம் நாளையே ஊருக்கு பயணப் படுகின்றது என்று இருக்க, அவனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாத நாட்களில் அவனது தொல்லைகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நினைக்கவே அவளுக்கு உள்ளூர பதறியது,
கதவை அடைத்தவள் அவசரமாய் சமைத்து முடித்து கீழிறங்கி சென்றாள். அந்த வீடுகளின் சொந்தக்காரர் இல்லத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்தாள். கதவு முற்றிலும் சாத்தப்பட்டு இருக்க, கதவை தட்டியவள் உள்ளேயிருந்து ஆள் வெளிவரும் மட்டும் காத்திருந்தாள். ஓனரம்மாள்தான் வந்து கதவை விலக்கி எட்டிப் பார்த்தார். ‘வாடகை கொடுக்கும் நாளில்லையே? எதற்காக வந்திருக்கிறாள்?’ எனும் கேள்வியை ஆலிஸை நோக்கியிருந்த அவரது பார்வை தாங்கியிருந்தது.
“சாரை பார்க்கணும்” என தயங்கியவாறு அவள் கேட்க,
“வாம்மா உள்ளே வா” என அழைத்தவர் முன் அறையில் இருந்த சேரில் அமர வைத்து விட்டு சென்றார். சிறிது நேரத்தில் உண்ட வாயை துண்டால் துடைத்தவாறே எதிரில் வந்து அமர்ந்தார் அந்த பெரியவர்.


Leave a Reply