அத்தியாயம் 5_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 5
தன்னால் குழந்தைகளை வளர்த்து கொண்டு, வேலையையும் செய்ய முடியும் என்று கணேசன் தன்னம்பிக்கையாக சொன்ன போதிலும் அவர் அதை செயல்படுத்த முன்பாக வெகுவாக துன்புற்று போனார்.
முதல் ஐந்து வருடங்கள் எப்படி கடந்தது என சொல்லவே முடியாது. அவரது வேலை மாற்றல்கள் ஒரு பக்கம், மகளின் படிப்பு, சிறு குழந்தையான பிரசன்னாவின் வளர்ப்பு என மிக சிரமமான வருடங்கள் அவை. சமையலுக்கு ஒரு வேலையாளையும், குழந்தையை பார்த்துக் கொள்ளவென ஊரில் உறவில் இருந்த பெண்மணி ஒருவரையும் வைத்து கை நிறைய சம்பளம் கொடுத்து கவனித்துக் கொண்டார்தான்.
ஆனாலும், கிராமத்தில் இருந்து பழகிய அந்தப் பெண்மணிக்கு வேற்றூரில் போய் தங்கி இருப்பது ஒத்துவரவில்லை. அடிக்கடி லீவு எடுத்து ஊருக்கு செல்வதாக இருந்தவர் ஒரு கட்டத்தில் தான் வரப் போவதில்லை எனச் சொல்லி விட பிரசன்னாவை குழந்தைகளுக்கான க்ரஷ்ஷில் விட்டு விட்டு வேலைக்கு சென்று வந்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து கவனிப்பது என கணேசனுக்கு எல்லாம் மலைப்பாக இருந்தது.
இருந்த போதிலும் கணேசன் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க விரும்பவில்லை. ஆறு வருடங்கள் கடந்திருந்த போது தனது வேலையின் தன்மை தனது சூழ்நிலைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்தார். தனியார் ஆகினும் பரவாயில்லை கிளைக்கு கிளை மாறாத ஒரே இடத்தில் இருக்கின்ற வண்ணம் வேலை கிடைக்க வேண்டும் என முயன்றதில் புது தில்லியில் அவருக்கு வேலை கிடைத்தது.
அரசாங்க வேலையை விட்டவர் அந்த தனியார் வேலையில் பணியமர்ந்தார். தனக்கு கிடைத்த கிராஜீவிடி, பி எஃப் தொகைகளை பெருமளவு சேமித்தவர் அந்த பணத்தில் தங்களுக்கென தில்லியில் வீடொன்றை வாங்கிக் கொண்டார்.
சம்பூர்ணாவும் வளர, குடும்ப பொறுப்புணர்ந்த குழந்தை என்பதால் பதினோராம் வகுப்பில் இருக்கும் சமயம் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்க ஆரம்பித்தாள். வீட்டு வேலைகளிலும் அப்பாவிற்கு உதவ தொடங்கினாள்.
கடந்த இரு வருடங்களாக பிரசன்னா பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டிருந்ததால் அவள் வீட்டில் இருக்கும் நேரங்களில் தம்பியையும் அவளே கவனிக்க ஆரம்பித்தாள். இவர்களுக்கு துணையாக பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கும் பெண் கணேசன் வேலை முடிந்து திரும்ப வரும் வரையில் துணையாக இருப்பார்.
ஆரம்பத்தில் அந்த புது நகரம் அவர்களுக்கு மிரட்டலாக இருந்தாலும், மெதுமெதுவே பழகிக் கொண்டனர். பாதுகாப்பு கருதி கணேசன் பிள்ளைகளை எல்லோருடனும் அதிகமாக பழக விடாதிருந்தார். அதன் காரணமாகவே அவர்கள் அக்கம் பக்கம் பட்டும் படாமல் என உறவு பேணிக் கொண்டனர்.


Leave a Reply