“அப்பப்ப போயி அவனை பார்த்துட்டு வா, அவனுக்கும் உன்னை விட்டா யார் இருக்காங்க சொல்லு?”
“போகணும் மாமா, ரொம்ப நாளா முயற்சி செய்துட்டு இருந்தேன். இப்ப வெளி நாட்டில வேலை கிடைச்சிருக்கு. ஊரில் போய் இரண்டு வாரம் இருந்துட்டு அப்புறமா வேலைக்கு புறப்படலாம்னு இருக்கேன்.”
“உள் நாட்டில இருந்துட்டே உன்னை பார்க்க முடியலை. இதில் வெளி நாட்டுக்கு போயிட்டா எங்க பார்க்குறது? சரிப்பா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். முடிஞ்சா இங்கே நம்ம வீட்டுக்கு வந்திட்டு போறியா? நாங்களும் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சே?”
“சரி மாமா, என்னொட ஏஜென்சி டெல்லியில் தான் இருக்கு. எப்படியும் நான் அங்கே வந்து தான் போகணும், நானுமே நம்ம வீட்டுக்கு வரலாமேனு தான் நினைச்சேன்.”
“அடடே அப்ப நானா அழைக்கலைன்னா வராம போயிருப்ப போலவே? அதெல்லாம் அழைச்சாதான் வருவேன்னு இல்லாம உரிமையா நம்ம வீட்டுக்கு வந்து போகணும் என்ன புரியுதா? முத்துராஜ் என் நண்பன்தான் ஆனா என் இரத்த சொந்தம்லாம் அவனுக்கு அப்புறம் தான். நீயும் எனக்கு அப்படித்தான் ஆனந்து.”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மாமா, நான் நிச்சயம் நம்ம வீட்டுக்கு வருவேன்.”
அப்போது ஆனந்தின் பொருளாதார நிலைமை மிக மிக மோசமாக இருந்தது. தனது கையில் அதிக பணமில்லாமல் எண்ணி எண்ணி அவன் செலவழித்துக் கொண்டு இருக்க, மாமா வீட்டிற்கு சென்றால் ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டுமே? எனும் தயக்கத்தில் செல்லாமல் தவிர்த்து விடலாம் என எண்ணி இருந்தான். ஆனால், கணேசன் மாமா அவனை தனது வீட்டிற்கு அழைத்த விதத்தில் அவனால் அவரை தவிர்க்க முடியவில்லை.
அவனுக்கும் தான் வெகு நாட்கள் கழித்து பாப்பூவை, பிரசன்னாவை பார்க்கும் ஆவலும் இருந்தது. எனவே, அவன் டெல்லியில் அவர்கள் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்துக் கொண்டான்.
அதற்கு முன்பாக ஆனந்த் ஊருக்கு சென்ற போதோ முத்துராஜ் மகனை கண்டு வெகுவாக கலங்கி இருந்தார்.
“உங்கம்மாக்காக சொத்து மாத்தி தந்தேன் மகனே, அதுக்காக உன்னை பிரிச்சு நிறுத்தினதா அர்த்தம் இல்லைடா. அதனால அப்பாகிட்ட பணம் வாங்கக் கூடாதுன்னு வைராக்கியமா? அப்புறம் நான் சம்பாதிக்கிறதெல்லாம் யாருக்காக சொல்லு?”
“அப்படியில்லப்பா” அப்பாவை அணைத்துக் கொண்டான்.
ஆனந்தின் ஊர் தங்கலுக்கான இரு வாரங்கள் எப்படி கடந்தன என்றே சொல்ல முடியாமல் கடந்திருந்தன.
“கணேசனுக்கு இதையெல்லாம் கொடுத்திடு” என அவர் கட்டி வைத்திருந்த பார்சல் மிகப் பெரியது.
“அப்பா இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்பா விட்ருங்க.”
“ஒரே ஒரு பெட்டிதான்பா”
“இதுக்கு விமான நிலையத்தில் மூவாயிரம் ரூபா தண்டம் போடுவான் உங்களுக்கு பரவால்லியா?”
“அடப்பாவி” முத்துராஜ் மலைத்தார்.
“ட்ரெயின்ல போகிறதா இருந்தா கொண்டு போயிருப்பேன்பா. ஃப்ளைட்ல போறேன் இல்லியா ப்ளீஸ் பா.”
“சரி சரி சின்ன பையில கொஞ்சம் இனிப்பு மட்டும் தரேன், கொடுத்திடு. சம்பூர்ணாக்கு இது ரொம்ப பிடிக்கும்”
“சரிப்பா”
“தம்பி உனக்கும் வயசு இருபத்தியாறாச்சு, கல்யாணம் செஞ்சுக்கிட்டு வேலையை பார்க்கலாமில்ல?”
“நான் முதலில் என் இலட்சியத்தை அடையணும்பா. அதுக்கப்புறம் தான் என் கல்யாணம்.’
“என்ன இலட்சியமோ என்னமோ? போடா தம்பி”
“உலக மார்க்கெட்ல நான் டிசைன் செய்யற உடைக்குன்னு எனக்குன்னு ஒரு பெயரை நச்சுன்னு பதிக்கணும்பா…ம்ஹீம்” பெருமூச்செறிந்தான்.
“நீ என்ன சொல்லுறன்னு எனக்கு எதுவும் புரியலை. சரி இந்தாப்பா” அவன் கையில் வங்கி கணக்கு அட்டை ஒன்றை நீட்டினார்.
“இதில் அஞ்சு இலட்ச ரூபா இருக்கு ஆனந்தா… உனக்கு செலவுக்கு வச்சுக்க. அப்பா கிட்ட எதுக்கு உனக்கு வீம்பு? நான் இத்தனை சம்பாதிச்சும் என் புள்ளை கஷ்டப்படணும்னு என்ன தலையெழுத்து? உங்கம்மா இருந்தா இதையெல்லாம் பொறுத்துப்பாளான்னு யோசிச்சு முடிவெடு” என அவனை பேசவே விடாமல் அவன் கையில் வங்கி அட்டையை திணித்து இருந்தார்.
அவனுடைய அன்றைய சூழ்நிலைக்கு அது மிகவும் தேவையான தொகை. ஒரு பக்கம் நெருடலாக இருந்தாலும், மறுபக்கம் ஆசுவாசமாகவும் இருந்தது.


Leave a Reply