சம்பூர்ணா ஆனந்திற்கு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் அப்பா அலைபேசியில் இருந்து வாழ்த்து அனுப்புவது உண்டு. அவனும் அவளுக்கு வாழ்த்துகள் அனுப்புவான்… சிரிப்புகள் பகிர்ந்துக் கொள்வான்.
ஆனந்த் தனது படிப்பை முடித்து விட்டு மும்பையிலேயே பணி புரிந்துக் கொண்டிருந்த நேரம் அது. தனது துறையில் தனது தனித்துவத்தை நிரூபித்து ஆக வேண்டும். தானும் மிகச்சிறந்த டிசைனராக வேண்டும் எனும் தாகம் அவனை உந்தி தள்ளிக் கொண்டிருந்தது.
மும்பை போன்ற நகரத்தில், பல்வேறு போட்டியாளர்கள் நடுவில் அவன் தன்னை நிலை நிறுத்துவது என்பது சாதாரணமான விஷயமா என்ன? அது போக அவனுக்கு தன்னை உலகளவில் சிறந்தவனாக நிலை நிறுத்த வேண்டும் எனும் முனைப்பு இருந்தது.
தனது தனித்திறமையின் மேல் அவன் அத்தனை நம்பிக்கை கொண்டவனாக இருந்தான். ஆனால், தன்னை நிரூபிக்க அவன் பல்வேறு நெருப்பாறுகளை கடந்து வர வேண்டுமே?
இப்போதும் தான் என்ன? வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. போட்டி பொறாமைகள். எத்தனை எத்தனை அவமானங்கள்? எத்தனை எத்தனை மன அழுத்தங்கள்? தனது பாப்புவிடம் பேசும் நேரங்கள் எல்லாம் அவனது இலகு நேரங்கள் தான். கூடுதலாக பிரசன்னாவும் அத்தான் அத்தான் என அழைத்துப் பேச இவனுக்கு சிரிப்பாகவும் கூடவே மகிழ்ச்சியாகவும் இருக்கும். வார இறுதிகளில் அவன் கணேசனுடன் பேசுவதும் உண்டு.
அன்றும் அந்த ஞாயிற்றுக் கிழமையில் கணேசனுக்கும் ஆனந்திற்குமிடையில் ஒரு உரையாடல்.
“ஆனந்து படிக்கிறதுக்கு அப்பா கிட்ட பணமே வாங்கிக்கலியாம். அப்பா வருத்தப்பட்டான்பா.”
“எனக்கு அப்பா அந்த நிலமெல்லாம் என் பெயர்ல மாத்தி தந்தது ரொம்ப வருத்தம் மாமா… அதனால முடிஞ்சவரைக்கும் நானே எல்லா செலவையும் பார்த்துக்கலாம்னு…”
“அது உங்க அம்மாக்காக செய்தது தம்பி, அதையெல்லாம் மனசில வச்சுக்காத.”
“என்ன இருந்தாலும் கடைசில அவங்களோட பயத்துக்காக எனக்கு சொத்து தந்து விலக்கி விட்டாப்ல… என் மனசுக்கு… கஷ்டமா போச்சு.”
“இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது தம்பி, நிலம் உன் பேர்ல இருந்தா என்ன? அவன் பெயர்ல இருந்தா என்ன? எல்லாம் உன்னுடையதுதானே.”
“ம்ம்”


Leave a Reply