அவன் காதுக்குள் “டேய் அடி வாங்கணுமா? ஆமான்னு தலையை ஆட்டுறியா மாட்டியா?” குசுகுசுத்தாள்.
“ஹா சர்தார்ஜி ஹம் தோனோ தோஸ்த் ஹை” (நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் சர்தார்ஜி) எனச் சொன்னவன் தன் வயமில்லாமல் “நண்பேண்டா” என்றபடி அவளை தோளோடு இழுத்தணைக்க வரவும்,
‘10 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்குது பாரு பக்கி , பக்கி’
என அவனை மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டு கடினமாய் முறைத்தாள் ரிஷா.
தன் ஓவர் ஆக்டிங்கின் தவறு புரிந்து ஹி ஹி என அவன் விலகவும், அவர்களை சுற்றி இருந்தவர்கள் விலகிச் சென்றனர்.
“தேங்க்ஸ்”, என்றான் அவன்.
“ம்ம் ச்சூ ச்சூ”, என காக்கையை விரட்டுவது போல விரட்டினாள் அவள்.
“போதும் போதும், நீ தமிழ் அதனாலதான் நான் உன்னை காப்பாத்தி விட்டேன். தமிழன் தனக்குள்ள சண்டை போட்டுக்குவான், மத்தவன் முன்னாடி விட்டுக் கொடுக்க மாட்டான்னு புரிய வைக்கிறதுக்குதான் இதெல்லாம் செய்ய வேண்டியதா போச்சு.”
எதையோ பெரிதாய் சாதித்தது போல கைகளை தட்டி விட்டுக் கொண்டாள் ரிஷா.
இப்போது முறைப்பது அவனது முறையாயிற்று.
“உன்னைக் காப்பாத்துனதுக்கு எனக்கு இதெல்லாம் தேவைதான், இதுக்குத்தான் சொல்வாங்க பெண்புத்தி பின்புத்தி” ன்னு
”ஏய்…. “ உறுமினாள் ரியா.
“க்யா ஹுவா பெஹன்ஜி” (என்னாச்சு தங்கச்சி?)
இப்போது இன்னொருவன் அவளருகில் வந்து அவர்களது வாக்கு வாதத்தில் அருகே வந்து கேட்க குள்ளக் கத்தரிக்காவோ கதறினான்.
“பின் புத்தி இல்ல? முன் புத்தி தான் முன் புத்திதான்” ரிஷாவைப் பார்த்து கதறினான், இப்போதோ அவள் வாயையே திறக்கவில்லை.
“ஹம் தோஸ்த் ஹை பாய்சாப்” ( நாங்கள் நண்பர்கள்) என்று அவனே சர்தாரிடம் சொல்லிக் கொண்டான்.
“யே மதராஸி லோக் பீ ஹை நா?” (இந்த மதராஸிகள் இருக்கிறார்களே?) என ஒருவன் கடந்துச் செல்லவும்,
“இன்னொருவனும் “ஹா ரே சவுத் இண்டியன்ஸ் தோனோ பாத் கர் ரஹே ஹை.”( தென்னிந்தியர்கள் பேசிக் கொள்கிறார்கள்) எனப் பேசிச் செல்ல அவர்களை தடுத்தான் நம் குள்ளக் கத்தரிக்கா.
“வாட் மதராஸி மதராஸி? சவுத் இண்டியன் சவுத் இண்டியன்? வாட் டு யு மீன் பை மதராஸி ஆர் சவுத் இண்டியன்? தெர் ஆர் 4 டிஃபரன்ஸ் ஸ்டேட்ஸ் இன் சவுத் இண்டியா? ஆல் ஆப் தெம் ஹேஸ் டிபரெண்ட் லேங்குவேஜ் அண்ட் கல்ச்சர்.
கேரளா– மலையாளம்
ஆந்திரா– தெலுங்கு
கர்னாடகா– கன்னடா
தமிழ் நாடு – தமிழ்
அண்ட் அயாம் அ தமிழியன் நாட் மதராஸி சம்ஜே?” எனப் பொரியவும் கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு விலகிச் சென்றனர்.
சற்று நேரம் முன்னர் தமிழின் புகழ் பரப்பிய ரிஷா தன்னைப் பாராட்டுவாள் என நினைத்து அவளருகில் செல்ல, அவள் இவனை ஒரு மார்க்கமாகவே பார்த்து வைத்தாள்.
“உன் பேர் என்ன கு க?”
“கு க? அப்படின்னா?”
“அதை விடு உன் பேர் என்ன அதை சொல்லு?”
“என் பேரு இந்தர்”
“சரி இந்தர் நீ எப்பவுமே அப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமேயா?”
“எப்படி?”
“இல்ல காரணமே இல்லாம சொற்பொழிவாற்றுறியே அதைக் கேட்டேன்.”
சந்தித்த நேரம் முதலாய் கடுப்பேற்றிக் கொண்டிருப்பவளைப் பார்த்து பற்களை நற நறத்துக் கொண்டு நின்றான் இந்தர்.


Leave a Reply