அவனும் அவளை பார்க்க ஆசையாக இருந்திருக்க வேண்டும். அப்பா தந்த இனிப்புகளோடு தான் அவளுக்கும் பிரசன்னாவுக்கும் வாங்கிய விளையாட்டு பொருட்களை கொடுத்தவன் விடை பெறுகையில்,
“பாப்பு நீ கொஞ்சம் வளர்ந்திருக்க ஆனால் இன்னும் அதே குட்டி பாப்பா தான்” என சொல்லி சென்றிருந்தான்.
அவர்களிடம் இருந்து விடை பெறும் போது அவன் அவள் தலையை தட்டி ஆட்டி விட்டுச் செல்ல அவளிடம் அந்த புன்னகை வெகு நாட்களாக நிலைத்திருந்தது.
‘இங்கே தான் அமர்ந்திருந்தான், இப்படி பேசினான்…இப்படிதான் சிரித்தான்’ சம்பூர்ணாவின் கண்கள் தன் வீட்டை புதிதாக பார்ப்பது போல அளந்து பார்த்தது.
‘ம்ஹீம்’ ஏனோ பெருமூச்செழ எழுந்தவள் தான் குடித்து முடித்த டீ கப்பை கையில் எடுத்தவளாக எழுந்தாள். கடிகாரம் இவளது எண்ணத்திற்கொப்ப நில்லுமா என்ன? நேரம் கடக்க பரபரப்பான காலை பணிகள் சூழ்ந்தன. தம்பியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கம் போல தனது வேலையில் மூழ்கினாள்.
மதிய நேரம் அதே தனிமை, அதே சில வேண்டிய சில வேண்டாத சிந்தனைகள் அவளுள் ஊறின. காலையில் தம்பி அவளிடம் கூறியது அவளுக்கு நினைவிற்கு வந்தது.
“சாயங்காலம் சாட் சாப்பிட போவோம்கா” வெகு ஆசையாக கேட்டிருந்தான். சாட் ஐட்டம்கள் அவர்கள் இருவருக்குமே மிக விருப்பமானவை. அங்கே போனால் வித விதமாக சாட் வகை உணவுகளை மொக்குவதில் அக்கா தம்பியை எவராலுமே மிஞ்ச முடியாது.
இவளிடம் கேட்டதோடு அப்பாவிடமும் அவன் அனுமதி கேட்டு விட்டிருந்தான். அப்பாவும் இன்று என்ன நினைத்தாரோ ஒன்றும் சொல்லாமல் சரி எனச் சொல்லி இருவரையும் வெளியில் செல்ல அனுமதித்து இருந்தார்.
‘சாயங்காலம் சுற்றச் செல்வதானால் கையில் பணம் வேண்டுமே? தனது கணக்கில் பணம் எவ்வளவு இருக்கும்?’ என அவள் மனம் கணக்கிட்டது. ‘அடுத்த மாதம் சம்பளப் பணம் வந்தால் தான் ஒரு தொகை வந்துச் சேரும் இல்லை என்றால் தன்னிடம் சில சொற்ப நூறுகள் தான் மீதமிருக்கும். அதை வைத்து என்னச் செய்வது?’ என யோசிக்க ஆரம்பித்தாள்.
ஏனென்றால், அவள் தனக்கு சில துப்பட்டாக்களும், பாட்டியாலாவும் வாங்க திட்டமிட்டு இருந்தாள். இன்று வெளியே சென்று வரும் போதே வாங்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதற்கு தன்னிடம் இருக்கும் பணம் போதாதே?
அப்பாவிடம் கேட்டால் உடனே தருவார் எனினும் அவர் அவளிடம் ஏன் எதற்கு என விபரங்கள் கேட்பதான அவரது சின்னச் சின்ன கேள்விகள் கூட இவளுக்கு பிடிக்காது. எனவே, இயன்ற வரையிலும் அவள் தனது செலவை தானே பார்த்துக் கொள்வாள். இதுவும் கூட ஒரு வகையான தன்மான உணர்வு எனலாம்.
இப்படியாக பலதும் யோசித்த வண்ணம் தன்னையறியாமல் கண்ணயர்ந்தவள் சற்று நேரத்தில் தனது அலைபேசியின் ஒலியில் தான் முழித்தாள். தூக்கக் கலக்கத்தில் அலைபேசி செய்தியை வாசித்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. செய்தியில் இருந்த தொகையை கணக்கிடுவதற்காக பள்ளியில் கற்ற கணக்குப் பாடத்தை நினைவு கூர்ந்தாள். செய்தியில் இருந்த பூஜ்யங்களை கடைசியில் இருந்து எண்ணலானாள்.

