‘ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம்’ திடுக்கிட்டவள்
“என்னது எனது வங்கிக் கணக்கில் இருப்பது மொத்தம் பதினைந்து இலட்சங்களா?” வாய் விட்டு புலம்பினாள். ஒன்றும் புரிபடாமல் முகம் கழுவி வந்து மறுபடி வாசித்த போதும் கூட அந்த அலைபேசி செய்தி அவளிடம் அதையேதான் கூறியது.
‘போடாங்க எவனோ என் கூட ப்ராங்க் செய்றான் போலிருக்கு, ஆனால் இதில் கூடவா ப்ராங்க் செய்வாங்க. சரி இராத்திரி வரைக்கும் பார்ப்போம். வங்கியில் இருந்து தெரியாத்தனமா உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. திரும்ப எடுத்துக் கொள்கிறோம் என சொன்னால் திரும்பக் கொடுத்து விடலாம்’ என எண்ணியவள் எதற்கும் இருக்கட்டும் என தனது வங்கிக் கணக்கின் நெட் பேங்கிங்கில் நுழைந்தாள்.
அங்கோ அந்த தொகை அவளது வங்கிக் கணக்கில் சத்தியமாக, சர்வ நிச்சயமாக தனது பற்களை காட்டி இளித்துக் கொண்டு இருந்தது. இதனை என்னச் செய்வது? எனப் புரியாமல் அவள் மிக திகைத்தாள்.
பணம் எங்கிருந்து வந்திருக்கின்றது என அவள் விபரம் தேடிய போதோ அது வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருந்து வந்திருந்தது. ‘அடப் பாவிகளா இத்தனை பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யறதுக்கே பெரிய தொகை செலவாகிருக்குமேடா… உங்களுக்கு அவ்வளவா பணம் கொழுத்து கிடக்குது? யாராக இருக்கும்?’ எனத் தேடியவளுக்கு தூக்க கலக்கத்தில் மிகத் தாமதமாகத்தான் அந்த பண வரவின் பிண்ணனியில் ஆனந்த் முத்துராஜ் எனும் பெயர் இருப்பது புலப்பட்டது.

