அவள் செல்ல வேண்டிய விலாசத்திற்கு போக சில மணித்துளிகளே இருக்க, எதிரில் நிற்கும் டாக்ஸிகளுல் ஒன்றில் ஏறி அமராமல் அவளை அங்கிருந்து உடனே நகரச் சொன்ன உந்து சக்தி எது என அவள் அறியாள்?
அவள் செய்வது சரியா தவறாவென அவளுக்கு தெரியவில்லை. ஏதோ
ஒன்றிலிருந்து தப்பிக்கும் முகமாக எங்கு செல்ல வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் தனக்கு சில மணி நேரங்கள் முன்பே பரிச்சயம் ஆன இந்தர் ஏறிய பஸ்ஸில் அவசர அவசரமாக ஏறி விட்டாள்.
“ரிஷா பாப்பா, ரிஷா பாப்பா”, என ஒரு குரல் அவளுக்கு சில நேரம் வரை கேட்டுக் கொண்டு இருந்தது.
கூட்டத்திற்குள்ளாக நகர்ந்தாள். கூட்டத்தை தனது வாய்ப்பாகக் கொண்டு யாரோ அவளது மார்பில் தன் கையின் முட்டி வைத்து அழுத்தில் கொண்டிருப்பதை உணர்ந்ததும், விதிர் விதிர்த்துப் போனாள்.
மனதிற்குள்ளாக அந்த மாயக்குரல் ஒலித்தது.
“எனக்கு கொடுக்காம யாருக்காக வச்சிருக்கியாம், எப்படி இருந்தாலும் நான் தான உன்னைக் கட்டிக்கப் போறவன், நான் தொடக் கூடாதாக்கும்”
அந்தக் குரலின் வக்கிரத்தோடு கூட பஸ்ஸீல் தற்போது அழுந்திய முட்டியின் காரணமாகவும் ரிஷாவுக்கு வெகுவாக வியர்த்து வழிந்தது, கையிலிருந்த இரண்டு பைகள் காரணமாக தன் உடலை காம இச்சையோடு உரசும் அந்தக் கையில் முட்டியினின்று எப்படி தற்காத்துக் கொள்வது என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
இன்னும் அந்த முட்டி அவள் தனத்தினின்று அகலவில்லை. சத்தமிட்டாளென்றால் இவள் பலர் முன்பாக காட்சிப் பொருளாவாள்.
“இப்போது சத்தமிட வேண்டியது நிச்சயமாய் நானல்ல, அவன்.” ரிஷா வைராக்கியமாய் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
கைகளிலிருந்த இரண்டுப் பைகளையும் ஒரு கைக்கே மாற்றினாள். இப்போது வலக்கையில் பொருட்கள் ஏதுமில்லை, அந்த முட்டியை தள்ளி விடலாம் தான் ஆனால் அதில் என்ன கிக் இருக்கிறது. ஆமாமப்பா இடிப்பவனுக்கு கிக் வேண்டுமென்றால், அதை எதிர்ப்பவளுக்கு கிக் வேண்டாமா என்ன? தன் நான்கு விரல்களையும் முறுக்கேற்றிக் கொண்டாள்.
நீண்ட நெடிய நகங்கள் கூர்மையாய் இருந்தன, ஏதோ ஒரு ஆயுதத்தை செலுத்தினாற் போல உக்கிரமாய், வேகம் கொண்டு இன்னும் சாவகாசமாக தன் உடலை உரசிக் கொண்டிருந்த அந்த முட்டியை நோக்கிப் பாய்ச்சினாள். “ஓ” வென ஓலம் எழுந்ததைக் கண்டுக் கொள்ளாமல் தன் பையை மறுபடி கரம் மாற்றிக் கொண்டாள்.


Leave a Reply