Epi 6_Thurathum Nizhalgal_Jansi

ஆம், ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த குழப்பங்கள் வெளியே தெரியாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது இல்லையென்றால், நம்பகத் தன்மை இழந்து வாடிக்கையாளரின் விலகலையும், பெருமளவு நஷ்டத்தையும் சந்திக்க நேரிடலாம். அதனால் தான் சண்முகம் வெளியே தெரியாமல் அத்தனையும் தனியாளாய் சமாளிப்பதற்குள்ளாக இரவும் பகலுமாக உழைத்து ஒரு வழியாகினார்

அந்நேரம் மட்டும் அவரது அக்கா மகன்களான அரங்கநாதனும், சந்திரனும் இராவிட்டால் அவருக்கு வலக்கையாக இருந்து உதவிராவிட்டால் அவர் வெகுவாக சிரமப் பட்டிருப்பார்.

சண்முகத்தின் அக்கா பையன்கள் மாமா, மாமா என உயிரையே விடும் வண்ணமாக அவரிடம் பயபக்தியோடு இருந்தனர். ஒன்றுக்கும் உதவாமல், உருப்படாமல் இருந்த தங்களை சென்னைக்கு அழைத்து வந்து தொழில் கற்றுக் கொடுத்த மாமா மேல் அவர்களுக்கு வெகு பிரியம்

அவர்களைப் பொருத்தவரை அவர்களது மாமாதான் அவர்களுடைய ரோல் மாடல். அந்த பயபக்தி கூடத்தில் சமீபத்தில் இன்னொருவன் சேர்ந்திருந்தான். அவன் சுந்தர் . சண்முகத்தின் அக்காவின் மூன்றாவது மகன். ஒரு வருடம் முன்பாக அவனும் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.

சில வருடங்கள் தன் கீழ் அரங்க நாதனையும், சந்திரனையும் பணி புரிய வைத்திருந்த சண்முகம், தன் பார்ட்னர்கள் உதவியோடு அவர்களுக்கு பொறுப்பான பதவிகளை அளித்திருந்தார்

அரங்கனாதனுக்கு திருமணமாகி விட்டிருந்தது, குழந்தைகளும் இருந்தன. சந்திரன் தன் அக்கா திருமணத்திற்கு முன்பே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தகப்பனாகி இருந்தான். 

அக்கா மகன்கள் வாழ்க்கையை சீர்ப்படுத்தி இருந்த அவர் அக்காவின் மகளான லலிதா திருமண வயதிற்கு வந்தும் அக்காவின் கணவர்கண்டதே காட்சி, கொண்டதே கோலம்என்றிருக்க தகப்பனின் ஆதரவு அற்ற அந்த குடும்பத்திற்கு பெரியவராய் லலிதாவின் திருமணத்தை அரங்கநாதன் மற்றும் சந்திரன் இவர்களது சேமிப்பு பணம் மற்றும் தனது பணத்தையும் செலவழித்து மனைவி மகளோடு முன் நின்று சிறப்பாக திருமணம் செய்து வைத்தார்.

அவர்கள் ஒரு வருடம் முன்பு அந்த திருமணம் செய்வித்து திரும்பிய போது அவரோடு தொற்றிக் கொண்டு வந்து விட்டிருந்தான் சுந்தர். துரு துருப்பானவன் ஆனால் வெகுளி அமைதியாக இருப்பான். சென்னை பாஷை புரியாமல் அவன் திரு திருவென முழிப்பது ரிஷாவுக்கு வெகு ஜாலியாக இருக்கும். வேண்டுமென்றே அவனிடம் சென்னை பாஷையில் பேசுவாள் அவள்.

“அப்பாலிகா போலாம்”

“அப்பாலிக்கா… அப்படின்னா என்ன ரிஷா பாப்பா?”

பதிலே சொல்லாமல் இன்னுமாக கிண்டல் செய்வாள்.

 ”நீ  ஒரு டுபாகூரு சுந்தரு”

“டுபாகூருனா?”

“அறிவாளின்னு அர்த்தம் அத்தான், அச்சோ உங்களுக்கு இது கூட தெரியாதா?”

“அங்கினு குந்துறியாமே..”

 எதையாவது சொல்லி சுந்தரை கிண்டல் செய்வதே ரிஷாவின் வேலையாக இருக்கும். சுந்தருக்கோ ஒன்றும் புரியாமல் திரு திருப்பான்.

செல்வி தன் மகள் சுந்தரை அநாவசியமாக கிண்டல் செய்வதை கண்டித்தாலும், அம்மா அருகில் இல்லாத நேரம் அவனை தொந்தரவு செய்வதில் அவளுக்கு அலாதியான மகிழ்ச்சி.

வயதில் மிக பெரியவனானாலும் அவளிடம் அவன் பணிந்து போவான். அரங்க நாதனிடமும், சந்திரனிடமும் அவர்கள் இருவரின் மனைவிகள் குழந்தைகளிடமும் எப்போதும் லூட்டி அடிப்பது போலவே அவள் சுந்தரிடம் விளையாட்டாக நடந்துக் கொள்வாள்.

மனதிற்குள்ளாக ஆழ்ந்திருந்தவளை சுள்ளென ஒரு வலி எழுப்பியது. யாரோ கல்லை எறிந்திருக்க வேண்டும். சுற்றும் முற்றும் ஆட்களில்லா ஓரத்தில் வந்து அமர்ந்திருக்க யாராக இருக்க முடியும்?

பதிலளிப்பவன் போன்று எதிரில் வந்துக் கொண்டிருந்தான் இந்தர்.

அமர்ந்திருந்தவளுக்கு எதிராக வந்து நின்றவன், ” உனக்கு அறிவே இல்லையாநீ இன்னுமா என் பின்னாலயே வந்திட்டு இருக்க? எப்ப பாரு உன்னைய காப்பத்துறதே எனக்கு வேலையா?”

பேசிக் கொண்டிருந்தவன், திடீரென முகம் கருத்தான். நின்றபடியே பின்னால் பாதங்கள் பதித்துக் கொண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தவன், சடாரென திரும்பி ஓட ஆரம்பித்தான்.

 இவளைச் சுற்றி ஐந்து திடகாத்திரமான ஆண்கள் கவசமாய் நின்றனர்.

அவர்கள் அவளுக்கு கவசமா? இல்லை அவளை துவம்சம் செய்ய வந்திருப்பவர்களா? என்று கணிக்க முடியாமல் இரண்டுப் பைகளையும் கையில் பற்றிக் கொண்டு ஓடும் வாய்ப்பு எதிர் நோக்கி சுற்றும் கண்களைச் சுழற்றி அமர்ந்திருந்தாள் ரிஷா.

தொடரும்

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!