Epi 6_Thurathum Nizhalgal_Jansi

குரல் எழுப்பியவனை மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்களே ஒழிய யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இனி அவன் முஷ்டி இன்னொருவளின் தனத்தின் மென்மையை ஆராயப் புறப்பட சில நாட்கள் ஆகலாம். அவன் புத்தியை அவனே அறிவார். தண்டித்த்  குரூர திருப்தியோடு தன் தமிழ் நண்பனை கவனித்தாள் ரிஷா.

இந்தர்ஜுஹீ பீச்என டிக்கெட் எடுப்பதைப் பார்த்து அவளும் அதுவே சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டாள்.

அதீத ஜன நெருக்கடியான பகுதி அது. சுற்றும் ஆட்கள் இருந்தும் கூட ஏதோ ஒரு வெறிச்சிட்ட பாலைவனத்தில் பயணித்தார் போன்று அவள் மிகவும் தனிமையாக உணர்ந்துக் கொண்டிருந்தாள்.

ஜுஹீ பீச் வந்ததும் இந்தர் இறங்கவும் அவன் பின்னே ரிஷாவும் இறங்கினாள். அது ஒரு பிரபலமான பொழுது போக்கு இடம் என பார்த்தவுடனே அறிந்துக் கொண்டாள். அவ்வளவு சுத்தம் சுகாதாரமாக பராமரிக்கப் படாவிட்டாலும் கூட அங்கே கூட்டம் நெருக்கி தள்ளியது.

வகை வகையான உணவு வகைகளும், அவைகளை சுவைப்பதற்கான கூட்டமும் அங்கே காணப்பட்டது. இரவு சூழ்ந்துக் கொண்டிருந்ததால், சுற்றிலும் செயற்கை வெளிச்சம் பளீரிட்டது. கவலையின்றி சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். கடலுக்கு கால்களைக் கொடுத்து சிலர் நின்றிருக்க, கடலுக்குள்ளாக சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தரை தவற விடக் கூடாது என்ற சிந்தனையில் அவனையே பின் தொடர்ந்துக் கொண்டிருந்த ரிஷாவுக்கு இவை எதுவுமே கருத்தில் படவில்லை. தனியாகச் செல்ல பயமாக இருந்ததால், எப்படியாவது இந்தரிடம் பேசி தனக்கு துணையாக அழைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டிய அந்த முகவரிக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருந்தது.

 அதே நேரம் சற்று நேரம் முன்பாக அவன் அவளை திட்டியிருந்தது அவள் நினைவிற்குள் நிரடியதால் அவனிடம் உடனடியாக சென்று உதவி கேட்க அவளால் முடியவில்லை.

ஆண்கள் உருப்படாமல் போவதே பெண்களால் தான், பெண்கள் எப்போதும் உதவி தேவை என்றால் ஆண்கள் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று முழங்கியவன் தானே அவன்.

சற்று நேரம் கழித்து அருகில் செல்லலாம் என அவன் தனியாக அமர்ந்திருந்த அந்த கடற்கரையில் பகுதியில் சற்று அப்பால் அவளும் அமர்ந்திருந்தாள்.

யாரோ கடலுக்கருகாமையில் தங்கள் மகளை அழைத்திருக்க வேண்டும் போலும்.

மிஷா பேட்டிஎனும் குரல் கேட்கவும் , சற்ரு முன் கேட்ட ரிஷா பாப்பா எனும் ருத்ர பாண்டி அங்கிளின் குரல் வந்து மோதியது. மனதை சோர்வுறச் செய்தது. வழக்கம் போல மனம் சோர்ந்ததும் தன் சிந்தனைக்குள்ளாக அமிழ்ந்து போனாள் அவள்.

ரிஷாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது இரு நண்பர்களான ருத்ர பாண்டி மற்றும் கனகவேல் இவர்களின் SKR Garments ல் கனகவேல் தான் தனியாக நிறுவனம் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொல்லி தன் பங்கைக் கேட்கையில் தான் ருத்ர பாண்டி அந்நாள் வரை செய்திருந்த தகிடு தித்தங்கள் தெரிய வர, தொடர்ந்த நாட்களில் கனகவேலின் ஒரே மகன் இறந்து பட ருத்ர பாண்டியின் மீது அந்த கொலையை செய்ததாக சந்தேகம் எழுந்தது.

கனகவேல் அங்கிளின் மகன் மரணித்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் ஏராளம். விசாரணையில் தனக்கு ருத்ரபாண்டி மேல் சந்தேகம் இருக்கிறது என கனகவேல் சொல்லிவிட ருத்ரபாண்டியின் வீட்டினர் மேல் விசாரணை ஆரம்பித்தது.

இப்படி ஏராளமான பிரச்சனைகளால் சண்முகத்தின் வேலைப் பளு கூடி விட்டிருந்தது.

அவரால் நண்பர்கள் இருவரில் யாரையும் விட்டுக் கொடுக்க இயலவில்லை. யார் தவறு செய்தார்? யார் தவறு செய்யவில்லை? என சிந்திக்க அவருக்கு சற்றும் நேரமில்லை. தடுமாறிப் போயிருக்கும் இரண்டு நண்பர்கள் குறித்த குழப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போமானால் தொழிலை கைவிட வேண்டி வரும் என மனதிற்குள்ளாக அபாய மணி அடித்ததே அதற்கு காரணம்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!