Epi 8_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அதன் பின்னர் சில நாட்கள் கடந்ததும் அத்தானின் அழைப்பு வராதது குறித்தும் கூட இவளுக்கு மனதிற்குள்ளாக கொண்டாட்டம் தான், 

‘அஃது… சம்பூர்ணாவா? கொக்கா? அத்தான் எனக்கு பயந்து விட்டார் போல, உன் விருப்பத்திற்கு வீட்டின் அமைப்பை மாற்றிக் கொள் எனச் சொன்னார் அல்லவா? பொறுங்க பொறுங்க இனி எல்லாம் என் விருப்பம் தான்’ என மனதிற்கு உள்ளாக கருவிக் கொண்டு சில திட்டங்களிட்டாள், செயல்படுத்தினாள்.

ஆனந்தின் இரு ப்ளாட்டுகள் இணைந்திருந்த போதும் அவை உட்பக்கம் இரு பிரிவாக கண்டுக் கொள்ளும் வகையில் தான் இருந்தது. அவற்றுள் வாசல் பக்கத்தில் இருந்து உள்ளே வரும் ப்ளாட்டை அவன் கொடுத்த மாதிரிகளின் படி நவீனமாக அமைத்தவள் அதைக் கடந்து உட்பக்கமாக தொடர்ந்துச் செல்லவும் இணைந்திருந்த அடுத்த ப்ளாட் முழுக்க முழுக்க ஊர் பக்கத்தில் இருக்கும் அமைப்புகளை உருவாக்க வைத்தாள். குறிப்பாக அவர்கள் ஊரில் வாழ்ந்த கிராமத்து வீடுகளைப் போல அமைத்தாள்.

பழங்கால ஊர் வீடுகளில் தனியே என அலமாரிகள் இல்லாமல் தடிமனான பக்கச் சுவற்றுக்குள்ளாக சதுர வடிவங்களில் அலமாரிகள் அமைப்பது போல, சமையலறை, சாமி அறை எல்லாவற்றையும் அமைத்தாள். அங்கிருந்த அறைகளும் அதன் கட்டில் நாற்காலிகளும் அப்படியே அமைந்தன. அதனைக் கடந்து பின்பக்க வாயில் கடக்கும் முன்னே பெரிதாக ஊஞ்சல் ஒன்று அதைக் கடந்து வெளியே செல்ல சின்னதாக நீண்ட காரிடாரில் துளசி மாடமும் அமைத்திருந்தாள்.

மொத்தத்தில் வெளியே இருந்து வீட்டின் உள்ளே நுழைகின்றவர் பார்வைக்கு வரவேற்பரை, ஓய்வறைகள், அங்கிருந்த இரண்டு படுக்கையறைகள் இவையெல்லாம் நவீனமானவைகளாக இருக்க, அதனைக் கடந்து இரண்டாவது பகுதிக்குச் சென்றால் அது பழங்கால அமைப்பு போல ஃப்யூஷன் அமைப்பாக இருந்தது.

முன்னறை, சுவர்களில் இருக்கும் ஓவியங்கள் நவீனத்துவம் வாய்ந்தவைகளாக இருக்க, உட்பக்கம் அலங்கரிக்க அவள் தெரிவு செய்த கலைப் பொருட்கள் எல்லாம் பராம்பர்யமானவைகளாகவே இருந்தன.

அவற்றையெல்லாம் அவள் வேண்டுமெனச் செய்தாளா? இல்லை வேண்டாமெனச் செய்தாளா என அறியாள் ஆனால், ஏதோ ஒரு வகையில் அவை புதுமையாகவும் கண்களை கவருவனவாகவும் அமைந்து விட்டிருந்தது என்னவோ உண்மைதான்.

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!