மாதங்கள் கடந்து ஆனந்தின் பெப்ருவரி ஃபேஷன் ஷோ வேலைகள் முடிவடைந்து விட்டிருந்தன. வழக்கம் போல தான் தவற விட்டவைகளை, சிற்சில கவனிக்கப் பட வேண்டிய விஷயங்களை குறித்துக் கொண்டான்.ஒப்பந்தத்தின் படி பெரியதொரு தொகையை பெற்றுக் கொண்டு இருந்தனர். லிண்டாவிற்கும் மாடல்களுக்கும் பணம் செட்டில் செய்யவும் அவர்களுக்கும் மகிழ்ச்சியே.
லிண்டா தனது செப்டம்பர் பேஷன் ஷோவில் ஷோ ஸ்டாப்பராக வரவேண்டும் என ஆனந்த் அவளிடம் ஏற்கெனவே பேசி வைத்திருந்தான். அது குறித்து லிண்டாவிற்கு இன்னும் பெருமிதம்தான். அவன் அவளைச் சார்ந்து இன்னமும் பல விஷயங்களில் ஆனந்த் முடிவெடுப்பது குறித்து அவளுக்கு சில முன் அனுமானங்கள் இருந்தன.
எதையோ எண்ணி ஆனந்த் எதை எதையோ முன்பு செய்திருக்க, அல்லது இப்போது வரை செய்து வர இதன் பிரதிபலிப்பு அல்லது விளைவு என்னாகும் என அறிவானா?
பெப்ருவரியில் ஃபேஷன் ஷோ முடிந்தாலும், அது சார்ந்த மேலும் பற்பல வேலைகள் முடிய மார்ச் மாதமாகி இருந்தது. இனி ஆனந்திற்கு அடுத்த ஃபேஷன் ஷோ நிகழ்வில் ஒரு சிறு நிகழ்வு அவனுக்கே அவனுக்காக அமையவிருக்க அதில் இன்னும் இன்னும் அதிகமாக அவன் ஈடுபாடு செலுத்தி உழைக்க வேண்டி இருந்தது. அதற்கு முன்னதாக மனதை சமன் செய்ய, நகர பரபரப்பில் இருந்து, வேலை மும்முரத்தில் இருந்து ஆசுவாசம் பெற அவனுக்கு ஒரு தூர பிரயாணம் தேவைப்பட்டது.
பல வருடங்களாக ஊர் பக்கம் செல்லாததாலும், தனது புது வீட்டின் கிரகபிரவேசத்திற்காக சென்றாக வேண்டும் என எண்ணி இருந்ததாலும் அந்த பயணம் அவனுக்கு தாய் நாட்டிற்கு பயணமாவதாக அமைந்திருந்தது.
விகாஷ் அவனுடன் டெல்லி வந்து அவனது வீட்டை பார்வையிட்டு விட்டு மும்பை செல்வதாகவும், மும்பையின் வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்தே மிலான் திரும்புவதாகவும் திட்டமிருந்தான்.
தனது டெல்லி வீட்டின் நிலையை தான் நேரில் சென்று பார்த்தால் தான் அங்கே தானோ மற்றவரோ தங்க உரிய வசதிகள் இருக்கின்றனவா? இல்லையாவென தெரியும். இந்நிலையில் ஆனந்த் விகாஷை டெல்லியில் தன்னுடன் தங்கிச் செல்லவெல்லாம் சொல்லவில்லை.
தான் டெல்லி சென்று ஹோட்டலில் தங்கினால் கணேசன் மாமாவிடம் ஏச்சு கேட்பதை விடவும் தனது தந்தையிடம் ஏராளமாக ஏச்சு கேட்க வேண்டி இருக்கும் என்பதை அறிந்ததாலும், தான் கணேசன் மாமா வீட்டிற்கு முதன்முறை சென்றதைப் போல இம்முறை அன்றைய தினமே திரும்பச் செல்வதாக இல்லை என்பதால் அவனது வீடு ஆயத்தமாகும் மட்டும் அல்லது கிரகபிரவேசம் முடியும் மட்டும் அவன் முதலில் சில நாட்கள் கணேசன் மாமாவின் வீட்டில் தான் தங்க வேண்டி இருக்கும்.
டெல்லியில் தானே கணேசன் மாமாவின் விருந்தாளியாக தங்கவிருக்க, தன்னோடு இன்னொருவனை தங்க வைப்பதும் மரியாதையாக இராது என எண்ணி இருந்த ஆனந்த், விகாஷிடம் பேச்சிற்கும் கூட டெல்லியில் தன்னுடன் தங்கும்படி சொல்லி இருக்கவில்லை.
ஒருவேளை விகாஷ் செல்லவிருக்கும் மும்பை வேலை தாமதமாகி டெல்லியில் ஓரிரு நாட்கள் தங்குவதானால் தான் ஹோட்டேலில் தங்கிக் கொள்வதாகவும் விகாஷ் ஏற்கெனவே அவனிடம் கூறி இருக்க, அது சரியான திட்டம் தான் என ஆனந்தும் ஏற்றிருந்தான்.

