ஓய்வில் பலதும் எண்ணிக் கொண்டு இருந்த ஆனந்தின் அலைபேசி இசைக்க எடுத்து பேசினான்,
“….”
“நல்லா இருக்கேன்பா. நீங்க நல்லா இருக்கீங்களா?”
“…”
“என்னது நான் இந்தியா வந்த இரண்டு நாள் கழிச்சுதான் நீங்க டெல்லி வர்றீங்களா?”
“….”
“சரிப்பா, கிரகபிரவேசத்துக்கு நீங்களே நாள், நேரம் எல்லாம் பார்த்துட்டு வாங்க, இன்னும் என்னென்ன செய்யணும்னு விபரம் சொல்லுங்க. நான் செய்றேன்.”
“….”
“என்னது? கணேசன் மாமா எல்லாம் பார்த்துக்கிறதா சொல்லிட்டாங்களா?”
“…”
“சரிப்பா.”
“…”
“எனக்கும் உங்களை நேரில பார்க்க ரொம்ப ஆசைப்பா.”
“…”
“பொய்லாம் சொல்லலை, வேற நாட்டுக்கு வந்தாலும் உங்களை மறப்பேனா என்ன?”
“…”
“சரிப்பா, சரிப்பா உடம்பை நல்லா பார்த்துக்கோங்கப்பா.”
“….”
“சரிப்பா நானும் வச்சுடறேன்.”
தகப்பனுடன் பேசிய மனநிலையோடு இந்தியாவிற்கு செல்ல மனநெகிழ்ச்சியோடு ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
ஆனந்தும், விகாஷீம் மகிழ்ச்சியோடு தங்களது பெட்டிப் படுக்கையோடு விமான நிலையத்திற்கு வந்துச் சேர்ந்தனர். அந்நேரம் விகாஷின் முகம் ஏனோ மாறியது.
“காய் ரே?” (மராத்தியில் என்னடா?) ஆனந்த் கேட்க,
“லிண்டாக்கும் ஆல்ஃபீக்கும் இந்த டெர்மினல்ல என்ன வேலை?”
“என்ன லிண்டாவும் ஆல்ஃபீயுமா?” எட்டிப்பார்க்க லிண்டா எனும் அந்த மாடல் அழகி ஆல்ஃபீ எனப்படும் ஆல்ஃப்ரெட்டுடன் வெகு காஷீவலாக இயல்பாக வந்து நின்றாள்.
“ஹே ஆல்ஃபீ” ஆனந்தும் விகாஷீம் அவனுக்கும் லிண்டாவிற்கும் கை கொடுத்துக் கொண்டு நின்றனர்.
விகாஷ்தான் முதலில் கேட்டான், “லிண்டா நீ எப்படி இங்கே?”
“ஏன் இந்தியாவிற்கு நான் வரக் கூடாதா என்ன? நாங்கள் வழக்கம் போல சுற்றிப் பார்க்கப் போகின்றோம். இம்முறை இந்தியாவிற்கு பயணம்.”
“ஓ…” என்ற விகாஷின் முகம் இன்னும் சரியாகவில்லை. ஆனந்த் சம்மந்தப் படாதவன் போல புன்னகைத்து நின்றான்.

