Epi 6_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 6_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 6

மறுநாள் காலை சம்பூர்ணா தூக்கம் கலைந்து எழுந்த போது என்னமோ காலச்சக்கரத்தில் திரும்பச் சென்று வந்தது போலொரு அயர்வு. சீக்கிரமே எழுந்து வேலைகளை முடித்து தனக்கான இஞ்சி டீயை எடுத்துக் கொண்டு அந்த டைனிங்க் டேபிளில் அமர்ந்த போது தன்னையறியாமல் மனதிற்குள்ளாக ‘ஆனந்த் அத்தான் அன்றைக்கு இந்த சேரில் தானே அமர்ந்திருந்தான்’ என மனம் முனகியது.

எத்தனை ஆசை ஆசையாக அவனை பார்க்க காத்திருந்தாள். அவன் வந்ததும் அவன் தோற்றத்தில் இவளுக்குள்ளாக ஏதோ ஒரு மாற்றம். அத்தனை ஆண்மை ததும்பும் தோற்றத்தில் இருந்தான் அவன். 

டிசைனராக என்ன? அவனே மாடலாக செல்லலாம் என்பது போலிருந்தான். பொதுவாக தனது அழகை பெரிது படுத்தாத ஆண்களின் தன்மை இன்னுமாய் ஆளுமை கூட்டும்.

அவனும் அப்படித்தான் இருந்தான்… தனது துறையில் மென்மேலும் கற்றுக் கொள்ள வேண்டும், சாதிக்க வேண்டும் என துறுதுறுவென பறவையில் இருக்கும் அவனது கவனம் பதின் வயதினளான இவளை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. ‘இது என் ஆனந்த் அத்தான்’ என பெண்ணவளின் மனம் கர்வப்பட்டுக் கொண்டது.

அவனைக் கண்டதும் பிரசன்னா அவனது தோளில் தொற்றிக் கொண்டான். என்னமோ மிகுந்த நாட்களாக பழகியவனைப் போல அவனிடம் சின்னவன் அத்தான் அத்தான் என செல்லம் கொஞ்சியதில் ஆனந்த் மகிழ்ந்தே போனான். 

சம்பூர்ணாவின் மனதிற்குள்ளாகவும் அத்தானின் தோளில் தொற்றிக் கொள்ளுமளவு ஆசை துறுதுறுத்ததுதான். ஆனால், அப்படி அவள் எதையாவது செய்து வைத்தால் அப்பா அடி வெளுத்து விடுவாரே?

ஆம், கணேசன் பிள்ளை வளர்ப்பில் அத்தனை கண்டிப்பானவராக இருந்தார். செல்லம் கொஞ்சி அன்பை காட்ட தெரியாவிட்டாலும் தாயற்ற பிள்ளைகள் என்பதாலோ என்னமோ மிக கண்டிப்பாகத்தான் வளர்த்தார். அதிலும் சின்னவன் பெரும் குறும்புக் காரனாக இருக்க அவர்களிடம் செல்லம் கொஞ்சி வளர்க்கும் படியான நிலைமையில் அவர் இல்லை.

மகளை பொருத்தவரையில் அவளது உடை முதல் செயல்பாடுகள் அத்தனையும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தன. அனாவசியமாக சிரிக்கக் கொள்ள கூட அவ்வீட்டில் அனுமதி கிடையாது என்பதே உண்மை. ஆனந்தை குறித்து இருந்த நல்ல அபிப்ராயம் மற்றும் அவனும் கூட அவர்கள் வீட்டின் ஓர் அங்கம் போன்ற வேறுபாடு காட்டாத மனப்பாங்கு இருந்ததால் அவனிடம் தன் பிள்ளைகள் பேசுவதில் எல்லாம் அவர் எந்த கண்டிப்பையும் காட்டி இருக்கவில்லை.

இதன் காரணமாகவே அத்தனை ஆசையாக ஆனந்த் அத்தானை எதிர்பார்த்து இருந்தவள் தொலைபேசியில் பேசுவது போலவே அவனிடம் கலகலப்பாக பேசினாள் எனினும் தகப்பன் குறைகாணாத வண்ணம் நின்றவளாக பெரிய மனுஷியை போல அவனிடம் இடைவெளி விட்டே பழகினாள். 

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!