அத்தியாயம் 8_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 8
சம்பூர்ணாவின் பணிக்காலம் முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் ஆனந்தின் வீட்டு வேலைகள் ஆரம்பித்து இருந்தன. இரண்டு ஃப்ளாட்டுகளை வாங்கி ஒன்றிணைத்து அவன் ஒரு வீடாக அமைத்த அந்த புத்திசாலித்தனத்தை சம்பூர்ணா வியக்காமலில்லை. ஆனந்த் ஏற்கெனவே காண்டிராக்டருடன் பேசி வீட்டின் அடிப்படை அமைப்பு எப்படி என விளக்கி இருந்தான்தான். ஆனாலும், வீட்டின் உள்கட்டமைப்பு எப்படி அமைய வேண்டும் என சம்பூர்ணா தீர்மானிக்க வேண்டும் எனச் சொல்லி அவன் அவள் கையில் பொறுப்பை ஒப்படைத்ததுதான் அவளை திணறடித்தது.
அதன் காரணம் என்னவென்றால் ஆனந்த் அனுப்பிய அத்தனை வீட்டின் உள்கட்டிட மாதிரிகளும் வெளிநாட்டு அமைப்பிற்கேற்றவை. அதில் எது சரி? எது தவறு? என அவளால் எப்படி முடிவெடுக்க முடியும்?
‘ஏறத்தாழ கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றவன் தன்னைப் போலொரு விஷய ஞானமில்லாதவளிடம் பொறுப்பை ஒப்படைத்தது எப்படி?’ என எண்ணி அவள் தனது தலையை முட்டிக் கொள்ளாத நிலைதான். பணம் அனுப்பிய அன்று ஆனந்துடன் அலைபேசியில் தகவல் மூலமாக பேசியது தான். அதன் பின்னர் அவர்களுக்கு இடையில் எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை.
‘ஆசிரியை பணி செய்கின்றவளை வலியுறுத்தி, இண்டீரியர் டிசைனிங்க் வேலை பார்க்க வைப்பவனுக்கு தான் குடைச்சல் கொடுக்க வேண்டாமா? என்னை நம்பியா இத்தனை பெரிய வேலையை கொடுக்கிறாய்? அத்தனையும் வீணடிக்கிறேன் பார்’ என்றெல்லாம் ஓரிரு நொடிகள் மனதில் தோன்றி மறைந்தாலும் அவளது ஆனந்த் அத்தானுக்கு விரோதமாய் அவளால் அப்படி சூழுரைக்கவெல்லாம் முடியவில்லை.
வீட்டின் உள்கட்டிட அமைப்பு குறிப்பாக மேற்கத்திய பாணியிலான உட்கட்டிட அமைப்பு குறித்து தனக்குத் தெரியாத பலவற்றையும் இயன்றவரையில் இணையத்தின் மூலம் கற்று, புரிந்துக் கொண்டு அவற்றுள் எது சரிப்பட்டு வரும் என பார்த்துப் பார்த்து அவற்றை அவள் செயல்படுத்தினாள். ஆனந்த் அனுப்பிய மாடல்களுள் இருந்தவற்றில் பலவற்றை அனுமதித்தவள் வீட்டினுள்ளே பார் இருக்கும் அமைப்பான வெட் பாரை மட்டும் முற்றிலுமாக அனுமதிக்கவே இல்லை.
காண்டிராக்டர் இவளிடம் வெட் பார் குறித்து ஓரிரு முறைகள் ஆனந்த் பெயரைச் சொல்லி வலியுறுத்தி பேசினாலும் கூட இவள் ஏற்றுக் கொள்ளவில்லை. காண்டிராக்டர் இது குறித்து எப்படியும் ஆனந்திடம் சொல்வார் எனும் அனுமானம் சம்பூர்ணாவிற்கு இருந்தது.
இருந்தாலும் கூட ‘சொல்லட்டுமே சொன்னால் என்னவாம்? சொல்லட்டுமே… அப்படியே அவர் சொல்லிய காரணத்தால் அத்தான் என்னிடம் பேச வந்தால் நீயாயிற்று உன் வேலையாயிற்று என அத்தானின் மூஞ்சிலேயே இந்த வேலையை விட்டெறிந்து விட்டு சென்று விடலாம்’ என இவள் தனது மனதில் கொக்கரித்துக் கொண்டு இருக்க, அவன் இவளை அழைக்கவும் இல்லை, செய்தி அனுப்பவும் இல்லை.

