அத்தியாயம் 14_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 14
இரவானதும் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். அடுத்த நாள் காலை வழக்கம் போல பிரசன்னா பள்ளிக்கு புறப்பட்டு சென்றிருக்க மற்றவர்கள் ஓய்வாகவே இருந்தனர். சம்பூர்ணா தம்பிக்கு காலை உணவு தயாரித்து கொடுத்து, மதிய உணவிற்கு சப்பாத்தி பாஜி தயாரித்து கொடுத்து அனுப்பி வைத்திருந்தாள்.
தங்களுக்கும் காலை உணவுக்கு தொட்டுக் கொள்ள சாம்பாரும் சட்னியும் தயாரித்து வைத்தாயிற்று. சூடாக தோசை சுட வேண்டி மாவு தோசை மாவு ஆயத்தமாக இருக்க, உளுந்து வடைக்காக உளுந்தை காலையே ஊற வைத்திருந்தாள். சற்று நேரம் கழித்து மாவு அரைத்து உடனே வடை சுட வேண்டியதுதான்.
மாவு அரைக்கவென குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்திருந்தவளிடம் நேரம் மீதமிருந்தது என்பதால் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மதியம் முத்துராஜ் மாமா வந்து விடுவார், அதற்காகவே அப்பா இன்றும் விடுப்பு எடுத்து விட்டிருந்தார். தனது அறையினின்று அவர் இன்னமும் கூட வெளியே வந்திருக்கவில்லை, சரி அப்பா ஓய்வெடுக்கட்டும் என எண்ணிக் கொண்டாள்.
வழக்கம் போல முத்துராஜ் மாமா இங்கே இருக்கும் நாட்களில் அவருக்கு பிடித்தவைகளை எல்லாம் சமைத்துக் கொடுக்க வேண்டும் என திட்டமிடலானாள். மாமா அவளுக்கு மிகவும் பிடித்த நபராயிற்றே?
இளவரசியாக கவலையற்று பட்டாம் பூச்சியை போல வாழ்ந்தவளை கொடிய கனவு போல திடும்மென சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தள்ளினாற் போல ஒரு வாழ்க்கை.
பத்து வயது வரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிராமத்தில் வளர்ந்தவளை பெரிய பெண்ணாக பாவித்து, பற்பல கட்டுப்பாடுகள் விதித்து, அவள் மிரள மிரள பாடம் எடுத்து ஒடுக்கி வைத்திருந்ததே?
பெண்குழந்தையை தாயில்லாமல் எப்படி வளர்க்க போகின்றோமோ? எதுவும் தவறாகி விடுமோ? என தனது அதீத பயம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வில் மகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றேன் எனும் பெயரில் கணேசன் செய்தவைகள் எல்லாம் அவளது இறக்கைகளை முறித்து போட்டதுதான். எதுவும் செய்ய தடை, சக பள்ளித் தோழர் தோழிகளுடன் பழக தடை, பள்ளி போட்டிகளில் விழாக்களில் பங்குக் கொள்ள தடை என எல்லாமும் தடைகள்தாம்.

