Epi 15_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 15_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 15

சம்பூர்ணாவை பொறுத்தவரையில் ஆனந்தின் இந்திய வருகைக்கு முன் வருகைக்கு பின் என இரண்டு வேறு மனநிலைகள் இருந்தன. அவனை நேரில் காணும் வரையில் ஏதோ ஒரு வீம்பை பிடித்து வைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவனை கண்ட பின்னர் அந்த வீம்பு பொருளற்றதாக தெரிந்தது. குறிப்பாக விகாஷ் சில விஷயங்கள் பகிர்ந்ததில் இருந்து அவளது மனம் அவளுக்கெதிராகவே ஏதேதோ எண்ண… ம்ம்.

ஆனால், ஆனந்தின் மனநிலை முன் போலவே எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது அல்லவா? அவன் இந்தியா வந்தது அதற்கு முன்பாக இந்த வீட்டின் வேலையை அவளது கையில் ஒப்படைத்தது எல்லாம் அவளுடனான முன் போன்ற நட்பை தொடர வேண்டும் என்பதால்தானே? தங்களுக்கு இடையே இருக்கும் தவறான புரிதலை தகர்த்து விடவேண்டும் என முனைப்பில் தான் சம்பூர்ணாவுடனான தனிமையில் இருக்கும் போது தனது மனதை திறந்து பேச ஆரம்பித்து இருந்தான்.

“மன்னிச்சுக்கோ பாப்பு, நான் கொஞ்சம் முன் யோசனையோடு இருந்திருக்கணும். அன்னிக்கு நான் அப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.”

“….”

“அந்த வயசில் உனக்கு அது எவ்வளவு பாதிப்பாக இருந்திருக்கும் என்று புரியுது. ம்ப்ச்ச்… என்னைதான் உனக்கு முன்னுதாரணமா வச்சிருப்ப இல்லை? … உன் பார்வையில் என்னை நானே கீழிறக்கின உணர்வு… என் வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப அவமானமா உணர்ந்த நேரம் அது பாப்பு. இப்ப கூட ஏதோ போலத்தான் இருக்கு. இருந்தாலும் கூட என்னோட பாப்பு என்னை தவறாக நினைத்துவிடக் கூடாதெனும் ஒரு பதைபதைப்பு…”

“…”

பெருமூச்செறிந்தான்… “நீ எனக்கு முக்கியம் பாப்பு, உன்னை வருத்தப்படுத்தி எனக்கு என்ன இருக்கு? உலகத்தில யாருக்கு வேணா விளக்கம் சொல்லாமல் என்னால கடந்து போக முடியும். ஆனால் உனக்கு பதில் சொல்லாமல் ம்ம்ம்… சத்தியமா முடியலை. நீ என்னோட பேசாமல் தவிர்த்தது முள் போல குத்திக்கிட்டே இருந்தது. அதனாலத்தான் உனக்கு விருப்பம் இல்லாத போதும் இந்த வேலையை உனக்கு கொடுத்தேன்” என்றவன் இந்த வீட்டை வாங்கியதே உன்னுடன் சமாதானம் ஆவதற்குத்தான் என்பதை சொல்லாமல் மறைத்தான்.

“நான் லிண்டாவை திருமணம் செய்துக்கிறதாகத்தான் இருந்தேன், லிவின்ல இருந்ததும் அதற்காகத்தான்…. மற்றபடி நீ நினைக்கிறாப் போல நான் பெண்பித்தன் இல்லை பாப்பு.”

மூச்சு திணற திணற தனது தொண்டையில் சிக்கிக் கொண்டதை துப்பி விட்ட ஆசுவாசம் அவனிடம். குனிந்தே அமர்ந்திருந்தான்.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!