அத்தியாயம் 20_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 20
முன் பின் அறியாதவரை மணம் முடிக்க கேட்பதென்பது வேறு அது வெள்ளைப் புத்தகத்தில் வரைவது போல மிக எளிது. ஏற்கெனவே உறவினளாய், நட்பாய் இருந்தவளை மணமுடிக்க கேட்பதென்பது வேறு அதில் ஏற்கெனவே வரைந்த ஓவியம் சிதைவுறாமல் மென்மேலும் அழகுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.
தனது முகம் மலர்ந்து ஒளி வீச, தன்னை சீண்டிக் கொண்டு இருந்தவளை பார்க்க அவனது மனம் சொன்னாலும் ஏனோ அவனுக்குள்ளாக ஒரு கூச்சம். இதுவரையிலும் அவளை விளையாட்டாக எத்தனை முறைகள் தலையில் தட்டி இருப்பான்? சிறுவயதில் அவளை எத்தனை முத்தங்கள் இட்டிருப்பான்?, சீண்டி கூட பேசி இருப்பான். ஏன் சற்று முன்பாகக் கூட காதை பிடித்து இழுத்தான் அல்லவா?
ஆனால், இப்போது அவள் அவனின் எதிரில் இருக்கின்றாள். அவன் அவளது கைப்பற்றலாம், விரல்களை சோதித்தறியலாம். ஆனால், ஏதோ ஒரு பனித்திரை அவனுக்கும் அவளுக்கும் ஊடாக இருந்தது.
அவளின் மனநிலையோ வேறாக இருந்தது, திருமணத்தை நிறுத்த வேண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என அவள் சொன்னவைகள் அனைத்தும் சாக்கு போக்குகள் தான். ஆனால், எதிர்பாராத விதமாக அவளிடம் அத்தான் வந்து திருமண விஷயம் பேச மற்ற எல்லாமும் பின்னால் நின்று போயின. அவன் திருமணத்திற்கு கேட்டதும் தன் போல தலையசைத்து சம்மதம் தெரிவித்து நின்றாள்.
அதன் பின்னும் அவர்கள் பேசியவை காதல் மொழிகளல்ல, அவளுடைய பொறுப்புகளை, தயக்கங்களை அவள் சொல்லச் சொல்ல, இவன் தீர்வுகள் தேடிக் கொண்டு இருந்தான்.
“சரி வா சொல்லிடலாம்” என அவன் முன்னாக நடக்க இவளும் கால்கள் பின்ன பின்னே நடந்தாள்.
இவர்கள் வரும் சப்தம் கேட்டு இருவரின் தந்தையரும் ஆர்வமாக பார்த்திருக்க, அவன் சென்று இருக்கையில் அமர்ந்தான்.
“நீ உட்காரம்மா” மருமகளை முத்துராஜ் தன்னருகே அமர்த்திக் கொண்டார். தனக்கு வில்லன் தனது அப்பாதான் என்றவனாக மனம் பொசுங்கினாலும் கூட மாமா மற்றும் அப்பாவிற்கு பொதுவாக பார்த்த வண்ணம்,
“பாப்புக்கும் சம்மதம் தான், ஆனா ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்”

