Epi 14_Thurathum Nizhalgal_Jansi

அத்தியாயம் 14_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 14

இருவர் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த  ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூட தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சில விபரங்கள் இப்போது புரிய வந்துக் கொண்டிருந்தன.

சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த அந்த நாளில், தான் ஒரு போதும் அதட்டியும் இராத தன் செல்வ மகளை இவன் அடித்து விட்டானே? எனும் பொருமல் மனதில் இருந்தாலும் கூட சண்முகம் அந்த பிரச்சனையை சுமூகமாகவே முடிக்க எண்ணினார்.

இந்த வயதில் இப்படிப்பட்ட சலனங்கள், தீவிரங்கள் வருவது தான் என எண்ணியவராக, அவனிடம் சரியாக பேசி புரிய வைத்துவிடும் எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தார். 

அவனிடம் பலமுறை பேசவும் முயற்சித்து இருந்தார். ஆனால், அவர் சொல்வதை கேட்டும் கேளாமல் இருப்பவனிடம் அவரால் ஒன்றும் வலியுறுத்தி பேச முடியவில்லை. இது பெண் பிள்ளை விஷயம் என்று பெரும்பாலும் யாருமே வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளிப்படையாக அணுகவில்லை. எல்லாம் சரியாகிவிடும் எனும் பொத்தாம் பொதுவான சிந்தனை எல்லோரிடமுமே இருந்தது.

செல்வி தான் அவனிடம், ரிஷாவுக்கு 18 வயதாவது ஆகட்டும், அதன் பின்னர் அவள் விரும்பினால் உனக்கு கட்டித் தருகிறோம் எனச் சொன்னதாக கணவரிடம் சொல்லி இருக்க, தான் பேசுவதைக் கேட்காவிட்டாலும், தன் மனைவி சரியாகவே பேசியிருக்கிறாள், அதை அவனும் கேட்டிருக்கிறான் என அறிந்து அவர் திருப்தியோடு இருந்தார். 

அவருக்கும் தன் தமக்கையின் பிள்ளைகள் எல்லோரையுமே மிகவும் பிடிக்கும். சந்திரன் தன் தமக்கைக்கு முன்பே காதலித்து திருமணம் செய்துக் கொண்டிருந்தாலும் அவனையும் ஆதரித்தவர் தானே அவர். அவருக்கும் கூட உரிய காலத்தில் எல்லாம் சரியாக அமைந்தால் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தால் தான் என்ன? என்கிற எண்ணம்  இருந்தது.

ஆதலால், செல்வி பேசிய பின்னர் தற்போதைக்கு பிரச்சனை தீர்ந்ததென்று அவர்கள் எல்லோரும் இருக்க, அவன் தங்கள் கண் முன்பாகவே தன் மகளை அடிக்கும் வரைப் போவான் என்று அவரும் எண்ணி இருக்கவில்லை.

பொதுவாகவே பல நேரங்களில் எதிர்பாராமல் வரும் ஏதேனும் ஒரு பிரச்சனையை ஆண்கள் அணுகும் விதம் வேறாகவும், பெண்கள் அணுகும் விதம் வேறாகவும் இருக்கும். பெண் உணர்ச்சிகரமாக சிந்திப்பாள், முடிவுகள் எடுப்பாள். ஆனால், ஆணோ சற்று நிதானமாக சிந்தித்து செயல்படுவான். 

இங்கோ அது போலவே சண்முகம் தலையிடும் முன்னதாகவே மைதிலி சுந்தரை தன் இஷ்டம் போலவே தரக்குறைவாக பேசி, இனி இந்த வீட்டிற்குள் வரக்கூடாது எனச் சொல்லி விட்டிருக்க, சண்முகம் அங்கே செயலற்றுப் போனார்.

அங்கிருந்து புறப்பட்டு கோபத்தில் சென்றவனை அவர்களும் தேடவில்லை. எங்கே சென்று விடுவான்? தன் அறையில் தானே இருப்பான் என இவர்கள் அவனை கண்டுக் கொள்ளாமல் விட, அவன் தான் தங்கியிருந்த அறையையும் காலி செய்து விட்டு அன்றே காற்றாய் மறைந்து போயிருந்தான்.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!