அவனது உடன் பிறப்புகள் அவன் இவ்வாறு நடந்துக் கொள்வான் என எதிர்பார்க்காததால் அவனைக் காண முடியாமல் திகைத்துப் போயினர். சண்முகமும் செல்வியும் கூட அவனது இந்த செயலை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு முறையில் அவனை அவர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் அவனைக் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
ரிஷாவின் மனதில் சுந்தரின் செயல்கள் காரணமாக ஆண்கள் மீதான வெறுப்புணர்வு வேர் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.சுந்தர் காணமல் போனதை எண்ணி அவள் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. நம்மை கண்ட கண்ட இடத்தில் தொடுபவன், கடிதம் கொடுப்பவன், அடிப்பவன் தொலைந்துப் போனான். தொல்லை விட்டது, நல்லதாகிப் போயிற்று என தன் பள்ளிப் படிப்பிலும், பென்சில் டிராயிங்குகளிலும் அவள் ஆழ்ந்துப் போனாள்.
அவள் வயதிற்கு அவளிடம் இதைவிட அதிகமாகவும் எதிர்பார்க்கவும் எதுவும் இல்லையே.
அரங்கநாதனும், சந்திரனும், மைதிலியும் அவர்கள் குடும்பத்தினரும் முன் போல இல்லாவிடினும் அவ்வப்போது மாமாவின் வீட்டிற்கு வருவதும் போவதுமாக தங்கள் போக்குவரத்தை வைத்திருந்தார்கள். குழந்தைகள் இப்போதெல்லாம் அடிக்கடி ரிஷாவுடன் விளையாட வருவதில்லை.
தங்கள் தம்பியை காணவில்லையே? இதற்கு காரணம் இந்த மாமா வீட்டினர் தானே? மாமா மகள் தானே? என அவர்கள் மனதில் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து இருந்தன.
வெளிப்படையாக இல்லாவிடினும் பெரிதளவில் உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
முன் போல வெளிப்படையான பகிர்தலும், கலகலப்பும் அவர்களிடம் காணப் படவில்லை. மாமாவிடம் காட்டும் பவ்யம், பயம் மற்றும் பணிவையும் இருவரும் வேலை இடத்தில் தொடர்ந்து காட்டி வந்தனர்.
ரிஷாவோ சுந்தர் செய்து வைத்த செயல்களால், வெறுப்பில் தானாகவே எல்லா ஆண்களிடமும் விலகி இருக்க, அதில் அரங்கநாதனும் சந்திரனும் அவளிடம் காட்டிய ஒதுக்கத்தை அவளுக்கு பிரித்து பார்க்கவோ, உணரவோ தெரியவில்லை.
சுந்தர் வீட்டை விட்டு சென்று நாட்கள் கடந்து மாதங்கள் ஆகின. அவன் எங்கே சென்றான்? என்பது யாருக்குமே தெரியவில்லை. மல்லிகா ஊரிலிருந்து சென்னை வந்து ஒருபாட்டம் அழுது தீர்த்துவிட்டு சென்றார். மற்றவர்களோ அழாமல் அத்தனையையும் தங்கள் மனதில் சேமித்து வைத்தனர்.
கால் போன போக்கில் சென்ற சுந்தர் தன்னை தரக்குறைவாக பேசிய பேசிய தமக்கையையும், அவ்வாறு அவள் பேசும் போது அங்கிருந்தும் கூட அவளை தடுத்து பேசாத அண்ணன்களையும் முற்றிலும் வெறுத்தான்.
தனக்கு தெரிந்த வேலைகளை எங்கெங்கோ அலைந்து திரிந்து செய்து கொண்டு உணவு உண்டு வந்தான். நாடோடிப் போன்ற தன் வாழ்வில் மனதிற்குள்ளாக நாளுக்கு நாள் ரிஷா மீது வெறுப்பு படர்ந்து கொண்டிருந்தது.
ரிஷா வீட்டினர் அவளை தனக்கு தராமல் வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள் என்பதே அவனுடைய சிந்தனையாக இருந்தது.
தான் கிராமத்தான் இவர்கள் நகரத்தை சார்ந்தவர்கள் என்கின்ற ஆரம்ப கால தாழ்வு மனப்பான்மை மறுபடியும் மனதில் குடியேறி விட்டிருந்தது. ஒருவேளை அதனால் தான் பெண் தர மறுக்கிறார்களோ? என தான் எண்ணிக் கொண்டிருந்த தப்பிதங்களில் இவற்றையும் சேர்த்துக் கொண்டான்.
அவளை என்னுடைய மனைவியாக மனதில் வரித்துக் கொண்டு நான் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்க, இவர்கள் அவளை படிக்கவைக்கவேண்டும். 18 வயதான பெரிய பெண்ணாக வேண்டும் என பல காரணங்கள் சொல்லி என்னிடமிருந்து பிரித்து மற்றொருவனுக்கு திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று மனதிற்குள் வெகுண்டான்.


Leave a Reply