Epi 15_Thurathum Nizhalgal_Jansi

அத்தியாயம் 15_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 15

அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே? ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டிருந்ததே?

சற்று முன்பு நிகழ்ந்தவையெல்லாம் கனவாக இருக்க கூடாதா? என அவரது மனதில் ஏக்கம் எழுந்தது. தன் தமக்கைக் குடும்பத்திற்காக தான் செய்த அனைத்தும் இப்போது மறைந்து, தான் செய்த ஒரே ஒரு செயல் மட்டுமே விமர்சிக்கப் படும் என்பதை அவர் உணராதவர் அல்லவே?

அன்று அவர் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்கு வந்து இருந்தார். அலுப்பில் கண்கள் மூடி படுத்திருந்தார். அதனால் தான் கார்மெண்ட் கணக்குகளை, சில விபரங்களை தெரிவிக்க அவரை சந்திப்பதற்காக அரங்கநாதனும், சந்திரனும் அவர் வீட்டிற்கு வந்து திரும்பினர். 

அதன் பின்னர் கடந்த மணித் துளிகளில் நிகழ்ந்தவை அவருக்கும் கூட மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தன. 

பல மாதங்களாக வீட்டுப்பக்கமே வந்திராத தன்னுடைய அக்காவின் மகன் சுந்தர், சற்று முன்பு தனது வீட்டின் எதிரே, அண்ணன்களால் அடையாளம் காணப்பட்டு, ஏதோ அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவருடைய கவனமும் அங்கே திரும்பி இருந்தது.

அவர்கள் சென்றதும்தான் சண்முகமும் எழுந்து புறப்பட்டு சென்றார். பொதுவாகவே தன் வாழ்வில் ஏராளமான ஏற்ற இறக்கங்களைக் கண்டதால், எதற்கும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் அவருடையது.

அதனால் தான் சுந்தர் இத்தனை மோசமாக தன் மகள் விஷயத்தில் நடந்தும், சரியாகிவிடும் என பெரிதுப் படுத்தாமல் அவரால் இருக்க முடிந்தது.

சுந்தர் முன்பைப் போல குடிவெறியில் அந்த திண்டில் அமர்ந்து இருந்திருப்பான், குடிபோதை தீர்ந்ததும் சரியாகி விடும், இதற்காகவா இத்தனை அவசரமாய் அவனை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும்? எனும் அலட்சியமான சிந்தனையே முதலில் அவர் மனதில் இருந்தது.

ஆனாலும் கூட தன் அக்கா மகன்களுக்கு துணையாக செல்ல வேண்டும் என எண்ணியதாலேயே அவர் புறப்பட்டது.

போகும் வழியில் ஏனோ அவருக்கு சுந்தர் அமர்ந்திருந்த திண்டை எட்டிப் பார்க்க தோன்றியது. அந்த மங்கலான வெளிச்சத்தில் திண்டில் ஏதோ ஒன்று இருப்பதை அவர் கண்டுக் கொண்டார். 

நல்ல வேளை அதுவரையிலும் யாருக்கும் கிடைக்காதிருந்த அந்த கத்தி அவர் கையில் கிடைத்தது. பார்த்ததும் கத்தியின் விளிம்பில் இருக்கும் ரத்தத் துளிகள் அவரை மிகவே கலவரப்படுத்தியது.

அவசரமாக தன்னுடைய கைகுட்டையை அதன் மேல் போட்டு மறைத்தார். அதை ஒளித்தவாறு எடுத்துக்கொண்டுச் சென்று, தங்கள் வீட்டில் மரத்தின் கீழே வைத்து, சிறிது மண்ணால் மூடிய வண்ணம் வைத்துவிட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!