Epi 14_Thurathum Nizhalgal_Jansi

ரிஷா மீது இருந்த காதல் அனைத்தும் இப்போது வெறுப்பாக மாறி இருந்தன. அவனுடைய வெறித்தனமான எண்ணங்கள் அவனை கண்மூடித்தனமாக நடந்து கொள்ள செய்தது. அவனால் ரிஷாவை மற்றொருவனோடு சேர்த்து கற்பனை செய்து பார்க்கவும் இயலவில்லை.

அவள் என்னுடையவள், அவனை இன்னொருவன் தீண்டவும் நான் எப்படி விட முடியும்? ஒன்று அவள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவள் யாருக்குமே கிடைக்காமல் போக வேண்டும், என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.

செல்வி கூறிய வார்த்தைகளை அதாவது 18 வயதானதும் அவள் விருப்பத்திற்கு ஏற்ப கேட்டு அவளை அவனுக்கு மணமுடித்து தருவதாக அவர் சொன்ன வார்த்தைகளை அவன் முற்றிலுமாக நம்பவே இல்லை.

அவர் தன்னை ஏமாற்றுவதற்காக அப்படி பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டான். மற்றவரைப் பற்றி எண்ணாமல் தான் தோன்றித்தனமாக தன்னுடைய சிந்தனைக்கு ஏற்பவே ஆரம்பம் முதலே செயல்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு வழி நடத்துவார் எவரும் இல்லை. யாரும் வழி நடத்தினாலும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு கேட்கும் நிலையிலும் அவன் இல்லை.

தன்னுடைய முட்டாள்தனமான சிந்தனைகளில் ஊறிப்போய் இருந்தவன் அவன். அதனால்  தான் செய்வது என்னவென்று அறியாத ஒரு மடமை தனத்தை அடைந்து இருந்ததால், அவனுக்கு தான் செய்வது எல்லாமே சரியானதாகவே பட்டது.

அவனைப் பொறுத்தவரையில் அவனுடைய காதல் உண்மையானது. அது ஜெயிக்கவேண்டும். ஒன்று இருவரும் சேர்ந்து வாழ வேண்டும், அல்லது இருவரும் சேர்ந்து சாக வேண்டும், அப்படி இருந்தால் அதுவல்லவோ காவியக்காதல் ஆகும்?!

என்னோடு அவளுக்கு வாழ விருப்பம் இல்லை என்றால் என்னோடு சேர்ந்து சாவது அவளுக்கு விதியாக இருக்கட்டும் என்று அவன் தீர்மானித்தான். 

ஆனால் உலகத்தில் மனிதன் எண்ணுவது அனைத்தும் ஈடேறாது. அனைத்திற்கும் மேலானவன் ஒருவன் இருக்கிறான். அவனே அனைத்தையும் தன்னுடைய கண் அசைவிற்கேற்ப நடத்துகின்றான் என்பதை அவன் உணராமல் போனான்.

ஆரம்பம் முதல் தன்னுடைய உணர்வுகளுக்கு ஏற்ப மட்டுமே செயல் பட்டுக் கொண்டிருந்த சுந்தர் தான் எடுத்த அத்தனை முடிவுகளும் தவறானவை என்பதை உணர்ந்து கொள்ளவே இல்லை. தன்னுடைய செயல்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும், தான் செய்வது சரியா? தவறா? என்று பரீட்சித்துப் பார்க்கவும் அவன் முயலவில்லை. 

கண்மூடித்தனமான அவன் செயல்கள் எங்கு கொண்டு போய் விடுமோ?

இந்தப் பிரச்சனைகள் தீரும் முன்பே சண்முகத்தின் கார்மெண்டில் பார்ட்னர்களுக்குள்ளான பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன. 

அவருடைய பார்ட்னர் கனகவேல் தன் பங்குகளை பிரித்துக் கேட்டார். அவர் கேட்ட காரணம் நியாயமாக இருக்கவே அதற்காக தற்போதைய கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்ட பொழுது ருத்ரபாண்டி பண விஷயத்தில் முறைகேடாக நடந்திருப்பது வெளிவந்தது. கனகவேலும், சண்முகமும் நிகழ்ந்த நம்பிக்கை துரோகம் கண்டு அதிர்ந்தனர்.

கனகவேல் அதை முற்றுமாய் எதிர்க்க, சண்முகமோ எங்கே இந்தப் பிரச்சனையை வளரவிட்டால் தங்களுடைய வருடக்கணக்கான உழைப்பான இந்த கார்மெண்ட் அழிந்து போய் விடுமோ? எனும் எண்ணத்துடன் ஒரு புறம் கனகவேலை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாரென்றால், மறுபுறம் ருத்ரபாண்டியிடம் பேசி அவர் கையாடல் செய்த பணத்தை திரும்ப வாங்க அலைந்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால், ருத்ர பாண்டி பணம் ஏற்பாடு செய்து தராதவரை கனகவேலின் பங்கை பிரிப்பது சாத்தியமில்லை. 

இன்றைய காலக் கட்டத்தில் நியாயமே இல்லாமல் பணத்தை கையாடல் செய்திருந்தாலும், பணத்திற்கு உரியவர் கெஞ்சி கூத்தாடி தான் வாங்க வேண்டிய நிலை. தர முடியாது என்று எடுத்தவர் முரண்பட்டால் பணத்தை பறிக் கொடுத்தவர் என்னதான் செய்ய முடியும்? அதிகபட்சம் போலீஸிடம் அடி வாங்கிக் கொடுப்பது வரைதான் போகும். இத்தனை காலம் நட்பு காரணமாய் அவரால் போலீஸ் அடிதடி பிரச்சனை எனும் விஷயத்திற்குள்ளேயே செல்ல முடியவில்லை.

இப்படி உள்ளுக்குள் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால் வேலைக்கான ஆர்டர்கள் வருவதும் கூட நின்று விடலாம் எனும் பயமும் இருந்தது.

பலத்த போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் மேலும் மேலும் பிரச்சனைகள் இல்லாமல் தங்கள் நிறுவனத்தை கொண்டுச் செல்லவே சண்முகம் முயன்றார்.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!