“முடிஞ்சா ஒரு பத்து லட்சம் பொண்ணு பேர்ல பேங்க்ல போட்டு கொடுத்துட்டீங்கன்னா அவங்க வாழ்க்கையும் நல்லா போகும். பின்ன ஒரு காலம் பெத்தவங்க எதுவும் செய்யலைனு நினைச்சுர கூடாதில்லையா?”
இப்படியாக தாங்கள் பேரம் பேச பயிற்சி பெற்று வந்ததற்கான பயிற்சியின் ஆற்றல் குறையாமல் பேசி முடித்தனர். சற்று நேரத்தில் அனைவரும் கலைந்து சென்று விட அந்த முன்னறை வெறிச்சென்று இருந்தது. பெண் பார்க்க வந்தவர்கள் பேசியவைகள் எல்லாமும் ஆனந்தின் காதில் விழுந்திருக்க கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம் என உணர்ந்தான். மாமாவிடம் இதைக் குறித்து பேசலாமாவென எண்ணினால் அவருக்கு இவன் சொல்ல வருவது புரியுமா? என்றே தெரியவில்லை.
அவர் தான் பல வருடங்களுக்கு முன்பாக கிராமத்தை விட்டு எப்படி வெளியே வந்தாரோ அதே மன நிலையில் தான் இன்னும் இருந்தார்.
சம்பூர்ணா சற்று முன்பாக அத்தனையையும் அவசரமாக ஒதுக்கி வைத்து விட்டு அப்போதுதான் தனது அறைக்கு சென்றிருந்தாள். அனேகமாக உடை மாற்றுவாளாக இருக்கும், வரட்டும் அவளிடம் பேச வேண்டும் என்றிருந்தான்.
அக்காவை தனியே விடாமல் பிரசன்னாவும் அக்காவிற்கு கூடமாட உதவிக் கொண்டிருந்தது பார்க்க இவனுக்கு இதமாக இருந்தது.
சம்பூர்ணா தனது அறையினுள்ளே நடமாடுவதைக் கண்டு ஆனந்த் அங்கே சென்று நின்றான். பிரசன்னாவும் அங்கிருக்க முகம் கழுவி வந்திருந்தவள் இன்னும் அதே பட்டுச் சேலையில் இருந்தாள்.
பின்னி இருந்த சடை கலைத்து உயர்த்தி கொண்டை போட்டிருந்தாள். இவனை கண்டதும் இயல்பாக புன்னகைத்தாள்.

