Epi 4_Thurathum Nizhalgal_Jansi

இத்தனை பரபரப்பிலும் பேஸ்புக்கில் சமூக விழிப்புணர்வு போஸ்ட் போட்டு பிடித்தவரை கொண்டாடுவதும், பிடிக்காதவரை நையாண்டி பேசி நகருவதும், வார இறுதியில் ஏதாவது ஒரு மலையுச்சியில் ட்ரெக்கிங்கோ, இல்லை கடற்கரையில் காற்று வாங்குவதோ, மாலில் படமோ பார்த்து தவறாமல் சிக்கனை ஒரு வெட்டு வெட்டி, வார இறுதி நாளையும் ஜாலியாகவும் கழிப்பதுவும், திருவிழாக்களை ஒன்றையும் விடாமல் ஆரவாரமாக கொண்டாடுவதுவும், வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடாமல் இறைவனையும் விட்டு விடாமல் பூஜிப்பதுவும் இன்னும் மும்பை மற்றும் மும்பைக்கர் குறித்து என்னென்ன சொல்வதாம்?

அந்த இரயில் நிலையத்தில் சுற்றும் முற்றும் தூரத்தில் பலர் போவதும் வருவதுமாக…

ரிஷாவை கவனிக்கவும் நேரமில்லாமல் அவரவர் வேலையில் மூழ்கியவர்களாய் இயந்திரத்தனமாய் நகர, ரிஷாவிற்குதான் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

அவள் மனக்கண்ணில் சில மணி நேரம் முன்பு ஷாரதா இரெயிலிலிருந்து பாய்ந்தது ஒன்றே சுழன்றுக் கொண்டிருந்தது.

“இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும்…” 

ஷாரதாவின் வார்த்தை காதுக்குள்ளாக ரீங்கரித்தது.

‘அவர் சொன்னதன் அர்த்தம் இதுவா? எத்தகைய ஒரு ஆபத்து அது?’

அவரைச் சுற்றி நின்றவர்களின் உடல்வாகை எண்ணியதும் பயத்தில் சிலிர்த்தாள் அவள். அத்தனை பேரையும் எதிர்த்து நின்ற ஷாரதா கண்ணுக்குள் வந்தார்.

அவர்கள் அவரிடம் என்ன கேட்டிருப்பார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் பிடிக்குள் ஆட்படாமல் அவர் நகர்ந்த லாவகம்.

தனக்கு புர்கா அணிவித்து பாதுகாத்து வைத்து விட்டு அவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தது கண்டும் அவளுக்கு புரியாமலிருக்க அவள் குழந்தையா? நிச்சயம் அது அவளை ரிஷாவை தேடி வந்த நபர்கள். ஷாரதா சண்டையிட்டது தனக்காக அல்ல ரிஷாவிற்காக, அவளை பாதுகாக்க நிகழ்ந்த போராட்டம் அது.

வெளி உலகம் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாளே?

எல்லாம் இதற்காகத்தானா? கழிவிரக்கத்தில் கண்கள் கசியவா? என அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது.

தான் இத்தனைக் காலம் வெறுப்போடு அணுகிய ஷாரதாவின் செயல்கள்தான் தன்னை இத்தனை நாட்கள் பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கிறது என்று எண்ணியதும் மனதிற்குள் குற்றவுணர்ச்சி எழுந்தது. தான் அவரை மனதிற்குள்ளாக கரித்துக் கொட்டியதனைத்தும் அவளை கொடுக்காய் கொட்டிக் கொண்டிருந்தது.

மறுபடி அவரைப் பார்க்க மனம் ஏங்கியது.

 மறுபடி அவரைப் பார்ப்பேனா? விடைத் தெரியாத கேள்விகளுள் அதுவும் ஒன்றாகி விட்டது

‘தனக்கு மட்டும் ஏன் இப்படி?’

அம்மா அப்பாவிற்கு உடல் நலக் குறைவு என்ற தகவல் ஒரு பக்கம். கடந்த சில நாட்களாக அவரை தொடர்புக் கொள்ள இயலாத நிலை வேறு. முன்பே எத்தனையோ பதில் தெரியாத கேள்விகளால்  மனம் அலை பாய்ந்துக் கொண்டிருக்க, இப்போதோ முன் பின் தெரியாத இந்த நகரத்தில் வந்து சேர்ந்து விட்டாள்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!