ஒரு இளைஞனை அவன் முன் நெற்றிப் பகுதியை மட்டும் தான் புகைப்படத்தில் கண்டது அவள் நினைவிற்கு வந்தது. அவள் அதனை சட்டைச் செய்யும் நிலையில் இப்போது இல்லை. எனவே, அவற்றை மேலும் தேடலானாள்.
அந்த புகைப்படத்தை அகற்றியவள் தாளை விரித்துப் பிடித்தாள். அது ஒரு மின்னஞ்சலின் பிரதி. எழுதியவர் பெயரை புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு ரகசியமான மின்னஞ்சல் முகவரியாக இருந்தாலும் என் மகள் என் மகள் என்று பலமுறை ரிஷாவைக் குறித்து குறிப்பிட்ட விதத்தில் அது தன் அப்பாவின் கடிதம் என்று ரிஷாவிற்கு புரிந்தது.
ஷாரதாவிற்கு இந்த மின்னஞ்சல் அப்பா அனுப்பி இருந்திருக்க வேண்டும்.
மின்னஞ்சலை வாசித்தில் அவளுக்கு புரிய வந்தது இவைதான் குறிப்பிட்ட பையனை தாங்கள் ரிஷாவிற்கு வாழ்க்கை துணையாக தெரிந்தெடுத்திருப்பதாகவும், அவளின் படிப்பு முடிந்ததும் திருமணமாகி அவனோடு ரிஷா வெளிநாட்டிற்கு பயணமாக வேண்டுமென்று விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.
அதை வாசித்ததும் சட்டென்று ரிஷாவின் மனதில் பெற்றோர் செயல்கள் மீதான விரக்தியும், வெறுப்புமான தளைகள் சூழ்ந்துக் கொண்டன. என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் தன் பெற்றோர்கள் தங்களோடு தன்னையும் வைத்துக் கொண்டு பாதுகாக்காமல், இத்தனை வருடங்கள் பிரித்து வைத்ததுமில்லாமல், படிப்பு முடிந்ததும் தாய் தகப்பனோடு தான் நாட்களைக் கழிக்க எண்ணியதையும் மாற்றும் விதமாக, தன் விருப்பம் கேட்காமலேயே தனக்கு உடனே திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்திருப்பதை நினைத்து மனம் வெதும்பினாள்.
‘என்ன பிரச்சனையென்று என்னிடமே சொல்லாமல் மறைத்து வைக்க தான் என்ன இன்னும் 13 வயதுப் பெண்ணா?’
‘என்னைச் சுற்றியுள்ள ஆபத்தை எனக்கேச் சொல்லாமல் எத்தனை நாட்கள் மறைப்பதாக இவர்களுக்கு எண்ணமாம்?’ மனதிற்குள் பொருமினாள்.
‘எவன்டா அவன் அந்த மிலிட்டரி கட் பையன்?, அவன் நேர்ல கிடைச்சா செத்தான்’ யார் மேலுள்ள கோபத்தையோ அவன் மீது காட்டி கருவிக் கொண்டாள்.
’இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு அவனைக் கொடுமை செஞ்சு கதற விடல என் பேரு ரிஷா இல்ல’ மனதிற்குள்ளாக சூளுரைத்துக் கொண்டாள்.
பையனின் பயோடேட்டா என ஒரு தாள் இருக்க அதுவும் தண்ணீரில் நனைந்து பரிதாபகரமாக இருந்தாலும் பிரபாகரன் என்று மட்டும் அதில் பெயர் தெரிந்தது.
அவளுக்கு மீதியை வாசிக்கும் ஆர்வமில்லை. உடனடியாக ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்காக ப்ரீபெய்ட் டாக்ஸி கிடைக்குமிடம் முதலில் தேட வேண்டும் என எண்ணியவளாய் விலாசம் தேட,
அந்த தாள்களுக்கிடையில் ஒரு விசிட்டிங்க் கார்ட் கிடைத்தது. அதில் இருந்த மும்பை விலாசம் “சாத் பங்களா, அந்தேரி“
அப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்தாள், தான் இருக்கும் ஸ்டேஷன் பெயர் “Bandra” என்றிருக்க அது பழங்கால கட்டமைப்பில் இருப்பதைக் கண்டு…
சுற்றும் முற்றும் பார்த்தவள் கைப்பையை தோளில் போட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த தன் துணிகள் இருந்த பையை குனிந்து எடுத்து நிமிரவும் “விஷ்க்: தோட்டா ஒன்று அவளருகே இருந்து பாய்ந்துச் சென்றது.
அருகில் இருந்த இருக்கை ஒன்றில் பாய்ந்து வெடித்து அதனை சற்றே சிதிலமாக்கியது.
அவள் சற்று நேரம் முன்பு நிமிர்ந்திருந்தால் அவள் முதுகிலோ, நெஞ்சிலோ பாய வேண்டிய தோட்டா அல்லவா அது, உண்மை உணர்ந்ததும் வெகுவாக மிரண்டாள். திடீரென வயிற்றுக்குள் பயப்பந்தொன்று கலவரமாய் சுழல, தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் இரு பைகளோடும், எங்கே செல்கின்றோம் என்று இலக்கில்லாமல் தலை தெறிக்க ஓடினாள். அவள் பின்னால் தபதபவென்று ஆட்கள் துரத்துவது கேட்டது.
அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் என்ன நடக்கின்றது என்று கவனிக்க, பாதுகாப்பிற்கு இருக்கும் போலீசார்கள் அருகே சென்று விட்டால் போதும் என்று எண்ணியவளாய் தன் கண்களை சுறற்றி விட்டுக் கொண்டே அவள் ஓடிக் கொண்டிருக்க சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தது ஒரு கரம்.
அதுவரை அவள் ஓடிக் கொண்டிருந்த திசைக்கு மாற்றாய் ஓடி, ஜனத் திரளுக்குள்ளாக அவளை இழுத்துச் சென்று படிகள் ஏறி திசையறியாமல் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தாள் அவள்.


Leave a Reply