அத்தியாயம் 10_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 10
“நான் நான் இப்ப வீட்டுக்கு போகட்டுமா?” சிறுபிள்ளையாய தடுமாறியவளை வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா?” ஆம் என தலையாட்டினாள். ‘வீட்டிற்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும், இந்த மகிழ்ச்சியை துளித்துளியாக அனுபவிக்க வேண்டும்’ அவள் மனம் துள்ளாட்டம் போட்டது.
“சரி, மனசுக்குள்ள எதையும் போட்டுக் குழப்பிக்காதே, வீட்டுக்கு பத்திரமா போ, நாளைக்கு பேசலாம்” என்றதும் அவன் திரும்பச் செல்வது நினைவுக்கு வர கலங்கினாள்.
“உன்னை அழைச்சுட்டுதான் நான் ஊருக்குப் போவேன், அது எத்தனை நாளா இருந்தாலும் சரி… புரியுதா? ஒரு மாதிரி ஷாக்கில் இருக்க அதனால இன்றைக்கு ஒரு நாள் தான் உனக்கு யோசிக்க டைம் ஓகேவா ஆலிஸ்?” கேட்டவனுக்கு தலையாட்டினாள்.
“நேரமாச்சு ஆட்டோவிலேயே வீட்டுக்குப் போ” சொன்னவன் ஆட்டோக்காரரை நிறுத்தி “அண்ணா…. அட்ரஸ் போகணும்” என்றான். தனது அட்ரஸ் எப்படித் தெரியும்? என அவள் சிந்திக்கவே இல்லை.
அன்றைய நாளின் மயக்கத்திலேயே வீட்டிற்குச் சென்றவள் வழக்கத்திற்கு மாறாக கதவை உள்ளே தாழிட மறந்தாள். அம்மா அப்பாவின் புகைப்படத்தை மடியில் எடுத்து வைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு இன்னமும் நடந்தவற்றை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள்… மனம் நிறைந்துப் போக வாயினின்று வார்த்தைகள் எழாமல் மனதிற்குள்ளாக பெற்றோரின் புகைப்படம் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் கழிய, ஏதோ சப்தம் எழவே நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கே குமரேஷ் அவள் அறையினுள் நுழைந்து சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததைக் கண்டாள். மனதில் இருந்த அத்தனை மகிழ்ச்சியும் வடிந்துப் போக தற்போதைய ஆபத்தை உணர்ந்தாள். கதவைத் தாழிடாத தன்னுடைய மடத்தனத்தை நொந்துக் கொண்டாள். அவனது அதிகார தோரணையை பார்த்து ஆலிஸின் ரத்தம் கொதித்தது. கடந்த நாட்களில் அவன் பேசியவைகள் எண்ணி மனம் கொதித்தது.
‘இவ்வளவு கேவலமான பிறவியை அவள் பார்த்ததே இல்லை. என்ன திண்ணக்கம் இருந்தால் இவன் என் வீட்டிற்கு உள்ளேயே வந்து அமர்ந்திருப்பான்?’ கோபத்தில் அவனைப் பார்த்தவள் அவனைப் போகச் சொல்லி திட்டினாள். அவனோ அவளை சட்டையே செய்யாமல் திமிராக அமர்ந்திருக்க, சட்டென்று சமையல் டேபிளை அடைந்து அருகிலிருந்த ஸ்டாண்டிலிருந்து கத்தியை கைப்பற்றிய வண்ணம் அவனை நோக்கி அப்படியே திரும்பினாள்.
அக்கினி பார்வையோடு அவனை சுட்டெரிக்க முயன்றாள். சத்தம் எழுப்பி, பிரச்சனை உண்டாக்கி, அனைவர் கவனத்தை ஈர்க்க அவளால் இயலும். ஆனால், தற்போதைய நிலையில் அவள் அதை செய்ய முயலவில்லை.அதன் பின்னால் எழும் பிரச்சனைகளை அவள் ஏற்கெனவே கண்டிருந்ததால் பிரச்சனை இல்லாமல் பயமுறுத்தி அவனை எப்படி தன்னுடைய அறையில் இருந்து வெளியேற்றுவது என்ற சிந்தனையில் இறுகிப் போனாள்.
கத்தியோடு எதிரில் தன்னை பயமுறுத்த எண்ணி நின்று கொண்டிருந்தவளை இகழ்ச்சியாக பார்த்த குமரேஷ்,
“என்ன எனக்கு நீ கத்தி எடுத்து பயம் காட்டுறியா? இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நானில்ல. இப்போ நீ ஒருவேளை சத்தம் போட்டேன்னா நீதான் என்னை உன் ரூமுக்கு அழைச்சேன்னு நான் அடிச்சுச் சொல்லுவேன். இந்த ஊரும் என்னை தான் நம்பும், என் பொண்டாட்டியும் என் பேச்சை தான் கேட்பா… ஏன்னா அவளுக்கு நான் உசுரு”.
…..
“என்னவோ கடைசில கேவலப்படுறது நீயாதான் இருப்ப யோசிச்சுக்கோ”
அசராமல் பேசுகின்றவனுக்கு என்ன பதிலளிப்பது? இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளிவருவது? என செய்வதறியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவளிடம்,
“இங்க பாரு ரொம்ப பத்தினி மாதிரி வேஷம் போடாதே…உன்னை மாதிரி பொண்ணுங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆஃபீஸ்ல யார் கூட எல்லாம் பழக்கம் வச்சிருக்கிறியோ? ஞாயித்துக் கிழமை யார் கூட கூத்தடிக்க போறியோ? மத்தவங்க கூடச் சுத்துறவ கொஞ்சம் என் கூடவும் சுத்துறது?” வழக்கம் போல தன்னுடைய நாராச கற்பனையில் வார்த்தைகளை உதிர்த்தான்.
ஆலிஸின் கரத்தில் கத்தியின் கைப்பிடி இறுகியது.


Leave a Reply