Epi 10_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

ஆலீஸருகே வந்து நின்ற பிரனீத்தை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.அதுவரை நடந்தவை அனைத்தையும் ரெகார்ட் செய்துக் கொண்டிருந்ததை துண்டித்து, காணொளியை சேமித்து, தனது மொபைலை பேண்ட் பையில் வைத்த பிரனீத் சமையல் டேபிளில் ஒடுங்கி உறைந்து நின்றவளின் கையை ஏந்தினான்.

கத்தியை தன் போக்கில் இன்னும் இறுக்கப் பிடித்திருந்தவளின் கைப்பிடியை ஒவ்வொரு விரல்களாக நீக்கி அந்தக் கத்தியை அகற்றினான். ஏற்கெனவே, அவள் கையில் காயம் ஏற்பட்டிருந்ததை அவள் உணரவில்லை. அவன் வாய் தன் பாட்டில் peddhu (முட்டாள்) என முனகியது.

அவள் கை முட்டைத் தாண்டி கோடாய் வழிந்த இரத்தத்தை தண்ணீர் விட்டு கழுவியவன் அவளது உள்ளங்கையில் காயம்பட்டிருந்த இடத்தை தன் கர்ச்சீப்பால் கட்டிப்போட்டான்.

“யார் தம்பி நீங்க?” ஓனரம்மாள் பிரனீத்தை அக்கறையாய் விசாரித்தார்.

“இவ புருஷன்மா” இறுகி சிலையாய் நின்றவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் போலீஸ் அவ்வறையில் வந்து நின்றது. 

“இந்த தம்பி சொன்னதும் ஓடி வந்து பார்த்தா அந்த பொண்ணை மிரட்டிட்டு இருந்தான் சார்” பிரனீத் அழைத்ததைச் சொல்லி குமரேஷ் குறித்து தான் பார்த்ததைச் சொன்னார்.

வீட்டில் நிகழ்ந்திருந்த களேபரம் ஆலீஸின் கையிலிருந்து விழுந்திருந்த இரத்தத் துளிகள், குடிப் போதையில் வீட்டு ஓனரின் பிடியில் ஓடிச் செல்ல இயலாமல் இருந்த குமரேஷ் குறிப்பாக பிரனீத் ரெக்கார்ட் செய்திருந்த அந்த காணொளி அதை போலீஸிற்கு காட்டினான். அவன் பேசியதை மறுபடி கேட்கவும் ஆலீஸ் கதறி அழுதாள். அவளைத் தேற்ற தன்னோடு இறுக்கிக் கொண்டான் பிரனீத். அவன் தான் போலீஸிற்கு தகவல் கொடுத்திருந்தான். குமரேஷை போலீஸ் அழைத்துச் சென்றனர்.

இன்னும் கூட அழுதவளை “போதும், போதும்… அழாதே” தண்ணீர் பருக வைத்து அவளை சமாதானப் படுத்தியவன் “வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம், கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வருவோம்” என்றான்.

“எதுக்கு தம்பி பகை? உங்க பொண்டாட்டிக்குத்தான் சிரமம்.” என்றார் அந்தப் பெண்மணி.

“டிரான்ஸ்ஃபர் கிடைச்சுட்டுமா? இனி அவ தனியா இருக்க மாட்டா?” 

“அப்படின்னா வீடு காலியாக போகுதா?” தனது கவலை அவருக்கு…

“நாளைக்கு வந்து பேசுரேன்மா”

“சரி” என்றவராக அவர் செல்ல அவளை அமர வைத்து விட்டு, தரையில் இருந்த அவளது இரத்தக்கறையை நீர் விட்டு துடைத்து துணியை குப்பையில் எறிந்தவன். அவளை வெளியே அழைத்து வந்து தானே வீட்டின் பூட்டுச் சாவியை எடுத்து வீட்டைப் பூட்டினான்.

போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆலிஸை கம்ப்ளெயிண்ட் கொடுக்க வைத்தவன் அடுத்த வாரம் தாங்கள் ஊருக்கு திரும்ப இருக்கும் விபரத்தைக் கூறி என்ன செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டான்.

லாக்கப்பில் அடைப்பட்ட குமரேஷ் இன்னும் போதையில் எதையோ உளறிக் கொண்டு இருக்க அங்கிருந்து ஆலிஸை அழைத்துக் கொண்டு உணவகத்தை அடைந்தான்.

Pages: 1 2 3 4 5 6 7 8


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!