ஆங்க்…
என்ன பார்க்குறன்னு கேட்டேன்?
“ஒன்னுல்ல” அங்கிருந்துச் சென்றாள். அவள் வருவதற்கு முன்பாக மொபைலை சார்ஜிங்கில் போட்டான். மொபைல் ஒளிர்ந்ததும், வால் பேப்பரில் அவள் படம் இருக்க அதை வருடினான். லாக் போடப்படாத அவளது மொபைல் “ஜீ பூம்பா” எனத் திறந்துக் கொள்ள ஏதோ ஒரு அல்பத்தனத்தில் அவளது கேலரிக்குள் நுழைந்தான்.
அவளது புகைப்படங்களை காண்பதற்காக சென்றவனுக்கு அங்கே தன்னுடைய புகைப்படங்களைக் கண்டு ஒரு நொடி இன்ப அதிர்ச்சியே. சில புகைப்படங்களினின்று அவன் பகுதியை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். சொல்லொண்ணா உணர்வில் இருந்தவன் அவள் குளியலறையை திறக்கும் சப்தம் கேட்கவும் மொபைலை அங்கேயே வைத்து விட்டு அவளுக்கு தனிமைக் கொடுத்து பால்கனியில் நின்றான். சற்று நேரம் கழித்து,
“வரட்டுமா?” அவளிடம் கேட்டே உள்ளே வந்தான். “ஆஃபீஸ்க்கு நீ லீவுன்னு சொல்லிட்டேன் சரியா?” ‘நான் ஆஃபீஸிற்கு லீவு என்று என் சார்பாக இவன் சொன்னானா? என்ன நினைத்தார்களோ?’ என்றொரு பக்கம் எண்ணம் சுழன்றாலும் ‘நேற்றைய தினம் மட்டும் அந்த ஆபத்தான நேரம் அவன் வராவிட்டால் அந்த குமரேஷால் அங்கு என்ன நிகழ்ந்திருக்குமோ?’ எனவும் தோன்றியது.
“நேத்திலருந்து உங்களுக்கு நிறைய தொல்லை கொடுத்துட்டேன்ல?” அவளது முட்டைக் கண் பரிதவிப்பில் சுழன்றதை கவனித்தான்.
“ஆமாமா, நீதானே என்னை கூப்பிட்டு உதவி கேட்ட?” அவன் பற்கள் நொறுங்கினவோ? “வாயப் பிடுங்காத, உன் மேல ரொம்ப கோபத்தில் இருக்கிறேன். கொடுக்க நினைச்சிருக்கிறதை கொடுத்திருவேன்.”
அவனது கோப முகம் கண்டு மிரண்டவள், “என்ன கொடுக்கப் போறீங்க?”
“வேறென்ன நேத்து நீ செய்த முட்டாள்தனத்துக்கு அங்கேயே கன்னம் கன்னமா அறையுறதா நினைச்சேன்.”
…….
“ஒரு பைத்தியக்காரன் கல்யாணம் செஞ்சுப்போமான்னு கொஞ்ச நேரம் முன்னாடித்தான் நம் கிட்ட கேட்டானே? ‘அவனுக்கு யோசிக்கணும், நாளைக்கு சொல்லுறேன்னு’ பதில் சொல்லிட்டு வந்தோமே கத்தி எடுத்து நம்மை நாமே குத்திட்டு செத்துட்டா அவனுக்கு என்னப் பதில் சொல்லுவோம்னு நினைச்சியா? இல்லை என்கிட்ட ஏதாச்சும் உதவி கேட்கணும்னு உனக்கு தோணுச்சா? நான் எல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லில்ல?”
அவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தலைக் குனிந்தாள்.
“அப்படின்னா நான் உன் வாழ்க்கையில எங்கேயுமே இல்லில்ல? ஒரு அவசரத்துக்கு கூட என்னை நினைக்கலை. இவன் ஏதோ பைத்தியக்காரன் சும்மா ப்ரபோஸ் பண்ணினான், நாம இல்லைனா எவளையோ கட்டிப்பான்னு தான நீ நினைச்சிருக்க?” அமைதியில் இத்தனை உக்கிரமா?
‘நேற்று அந்த நேரத்தில் பிரனீத்தின் நினைவே வரவில்லை தானே?’ அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலைக் குனிந்து நின்றாள்.
“பாவமா இருக்கியேன்னு விடுறேன், அது மட்டும் இல்ல இந்த போன் முழுக்க என் ஃபோட்டோவா வச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்தேனா? இந்த பைத்தியக்காரியை ஒன்னும் சொல்லறதுக்கில்லைனு கொஞ்சம் கோபம் குறைஞ்சுடுச்சு.”
அவனது அத்துமீறல்கள் அவளை சங்கடப் படுத்தின. ‘அதெப்படி அவள் அனுமதி இல்லாமல் அவள் ஃபோனை பார்க்கலாம்? ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகின்றானோ?’ மனம் நெருடியது.
“நானா நேத்து சொல்லலைன்னா நீ உன் மனசில் இருக்கிறதை சொல்லிருக்க மாட்டீல்ல?, சாகுற வரைக்கும் சொல்லிருக்க மாட்ட…” தங்களது காதலை எண்ணி எதையோ முணுமுணுத்தான் அவளுக்குப் புரியவில்லை.
‘இவனுக்கு நம்ம மொழி தெரியுது, நமக்குத் தெரியலை முதல்ல கன்னடம் கத்துக்கணும்’ மனம் அதன் போக்கில் சொல்ல அப்ப இந்த அதிகாரம் பிடிச்சவனை கட்டிக்க முடிவுக்கே வந்துட்டியா? உள்ளுக்குள் போராடினாள். அவன் உன் வாழ்க்கையில் இல்லைனு தானே ஒரு வாரமா சோகப் பாட்டு பாடின? இப்ப உனக்கு என்ன பிரச்சனை? அதட்டி அவளை மட்டுப் படுத்தியது மனது.
“ஏதோ நான் செஞ்ச புண்ணியம் உயிரோட இருக்க, நேத்து என்ன செய்யறதா இருந்தீங்க மேடம்?”
அவன் அன்னியமாய் அவளை மேடம் சொல்லவும் அதுவரை அவன் வேண்டுமா? வேண்டாமா? என போராடிக் கொண்டிருந்த மனது அதெப்படி அவன் என்னை இப்படிக் கூறலாம்? எனத் தவித்தது… அவள் கண்கள் சட்டென்று துளிர்த்து விட்டிருந்தன.


Leave a Reply