Epi 4_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 4_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 4

வழக்கம் போல ஊருக்கு வரும் மகிழ்ச்சியோடு தான் ஆனந்த் வந்திருந்தான். அம்மாவிடம் உடல் நலனை விசாரிக்கும் போதெல்லாம் அதெல்லாம் பரவாயில்லமா என அவர் அந்த பேச்சை தள்ளிப் போடுவதை கூட புரியாத முட்டாளாக தான் இருந்ததை எண்ணி ஆனந்த் தன்னை நொந்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

நோயுற்று படுத்து கிடக்கும் அன்னையை பார்க்கையில் அந்த வீடு அவர் முன்பு  சுறுசுறுப்பாக வளைய வந்த போது இருந்த உயிர்ப்பில்லாமல் இருண்டு கிடந்தாற் போலிருந்தது.

தாய் பேசப் பேச உணர்வற்றவன் போல அதற்கேற்ப அவன் பதில் பேசிக் கொண்டு இருந்த போதுதான் அந்த அறையில் சட்டென்று வெளிச்சம் பரவியது. அவர்களின் வீட்டுக் கதவை திறந்து உள்ளே வந்த பார்வதியின் வயிறு இப்போது நன்றாக பெரிதாகி இருந்தது.

அவர் சமீபத்திய வழக்கம் போல அவர்கள் அனைவருக்கும் மதிய உணவை அவர் சமைத்து கொண்டு வந்திருந்தார். அவர் பின்னாக சம்பூர்ணாவும் அவரை வால் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள். அவளது கையில் ஏதோ ஒரு சின்ன பாத்திரம் அதில் கூட்டு இருந்தது.

அந்த வீட்டின் அமைதியை யாரும் கலைக்க விரும்பாதது போல சத்தம் இன்றி பார்வதியும், சம்பூர்ணாவும் கொண்டு வந்த உணவை உண்டனர். சாம்பவிக்கு உணவை உண்டதே பெரும் களைப்பாக இருக்க இப்போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தார்.

பார்வதி அவர் அருகில் இருந்து ஏதோ மாத்திரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

“இதை தின்னு என்ன ஆகப் போகுது பார்வதி? … ம்ப்ச்ச்” சாம்பவி சலித்துக் கொண்டாலும் தோழியின் இதமான பேச்சில் அத்தனையும் விழுங்கி வைத்தார். பகலும் இரவுமாய் வலியில் துடிக்கும் அவரது உடலின் வலி போக்க அந்த மாத்திரைகளும் தேவையாகத்தான் இருந்தன.

நாட்கள் கடக்க கடக்க சாம்பவி உள்ளூர நலிந்து மெலிந்துக் கொண்டே இருந்தார். அவ்வப்போது இரத்த வாந்தியும், வயிற்று பிரட்டலும் என நோய் அவரை உயிருள்ள பொம்மையாய் மாற்றி இருந்தது.

அதுவரை அங்கிருந்த முத்துராஜ் மனைவியின் சலிப்பும் துயரமும் காண சகிக்காதவராக எழுந்து வெளியே சென்றார்.

சாம்பவியின் அருகில் சென்ற சம்பூர்ணா அவரது வலது கையை எடுத்து அதில் சாமி கயிறை கட்டினாள். தான் கொண்டுவந்த திருநீற்றை அவரது நெற்றியில் பூசினாள்.

“அத்தை உங்களுக்கு சீக்கிரமா சரியாகிடும்”, என்று சொல்லியவள் ஆனந்த் அத்தான் அருகில் வந்து அமர்ந்தாள். அவன் எதுவுமே பேசாதிருக்க அவனது கையில் ஒரு சாக்லேட்டை திணித்தாள்.

“என் பொறந்த நாள் சாக்லேட் அத்தான், உங்களுக்காக பத்து சாக்லேட் வச்சிருந்தேன்… நீங்க வர நாளாகவும் ஒவ்வொன்னா தின்னு தின்னு இப்ப ஒன்னுதான் மிச்சம் இருந்தது” தனது செயலில் சங்கோஜமாய் நெளிந்தாள்.

“ஹாப்பி பர்த்டே பாப்பு” அவள் கையை பற்றி குலுக்கிய ஆனந்த் இலேசாய் புன்னகைத்தான்.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!