அவள் அவன் அருகில் இருந்து என்னென்னவோ பேசிக் கொண்டு இருந்தாள். அவள் கேட்டதற்கெல்லாம் அவன் தவறாது பதில் சொல்லிக் கொண்டும் இருந்தான்.
“அத்தைக்கு காய்ச்சல், நலமாகி விடும்” என்பதாக மகளிடம் பார்வதி சொல்லி இருக்க, அவரது நோயின் தீவிரம் தெரியாது. அவளது வயதிற்கு மரணம் என்றால் என்னவென்று புரியாது. அது மட்டுமல்லாது அவளிடம் அங்கே இருந்த மற்றவர்களின் மௌனம், துயர முகம், சோகம் புரிந்துக் கொள்ளும் நுட்பமில்லை. அங்கே அந்த நேரம் அந்த வீட்டின் துயரம் படியாத பளிங்குக் கல் போல சம்பூர்ணாவின் இதயம் இருந்தது.
ஆனந்த் அத்தானிடம் பள்ளியில் தன்னை சீண்டிய பெண்ணை தான் எப்படி விளையாட்டுத் திடலில் கீழே தள்ளி விட்டு பழி வாங்கினேன் என தீவிரமாகச் சொல்லிக் கொண்டு இருக்க, அவனோ அவள் சொன்ன எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு கேட்டுக் கொண்டு இருந்தான். வந்தது முதலாக இறுகிப் போயிருந்த மகனை தற்போது இலகுவாக பார்த்த சாம்பவிக்கும் சற்று ஆசுவாசம்.
சின்னவள் அவனோடு இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசிக் கொண்டு இருக்கட்டும் என அவர் எண்ணிய போதுதான் அவள் அதனை செய்தாள்.
ஆனந்தின் தலையை எதேச்சையாக கவனித்து பார்த்த சம்பூர்ணா தன்னிச்சை செயல் போல அருகில் இருந்த சீப்பை எடுத்து அமர்ந்துக் கொண்டு இருந்த அவன் முன் நின்று அவனுக்கு வகிடு எடுத்து, தலை வாரி விடலானாள்.
அவனுமே அவளிடம் தலையை குனிந்து கொடுத்துக் கொண்டு இருந்தான்.வெகு சிரத்தையாக அவனுக்கு தலை வாரி முடித்தவள்.
“முகம் கழுவி வாங்க அத்தான், என்னமோ போல இருக்கு” எனவும் அவனுக்கு உத்தரவிட்டாள்.
வந்தது முதலாக அத்தனை நேரம் அவன் எப்படி இருந்தானோ அறியான். ஆனால், சம்பூர்ணா சொல்லவும் சாவி கொடுக்கப் பட்ட பொம்மையைப் போல எழுந்து முகம் கழுவி, அங்கிருந்த துண்டால் முகம் துடைத்து வந்தான்.
“கொஞ்சம் வெளியே போய் வரேன்மா” என அவன் வெளிக்காற்றை தேடிச் செல்ல சம்பூர்ணாவை அருகில் அழைத்த சாம்பவி,
“அத்தானை நல்லா பார்த்துக்குவியா?” எனக் கேட்டார்.
“அத்தானுக்கு என்ன அத்த?” புரியாமல் விழித்தவளிடம்,
“அத்தானுக்கு ஒன்னுமில்ல, அவனுக்கு தலை சீவி விட்ட இல்லியா அப்படி தலை சீவுறது. சாப்பிடச் சொல்லுறது இப்படி எல்லாம் அவனை நல்லா பார்த்துக்குவியா?” கேட்டவரிடம் பொருள் புரியாமல் சரி என தலையசைத்தவள் சற்று நேரத்தில் அங்கிருந்து சென்றாள்.
சற்று நேரத்தில் வெளியில் இருந்து திரும்பி வந்த ஆனந்த் தாயின் அருகில் அமர்ந்து அவரது கரத்தை பற்றிக் கொண்டான்.


Leave a Reply