“நீங்க சொல்றதை போல நான் நல்லா படிப்பேன் அம்மா, கவலைப் படாதீங்க” என அவரை ஆசுவாசப்படுத்தினான்.
“ஒருவேளை உங்கப்பா உனக்கு படிக்கிறதுக்கு பணம் தரலைன்னா என் நகை எல்லாம் வித்துடு சரியா?” மகனுக்கு ஆலோசனை சொல்ல,
“என்னம்மா அவர் நம்ம அப்பாம்மா, அவரைப்பற்றி எதுக்கு உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கை? அவர் நமக்கு இத்தனை காலம் ஏதாச்சும் குறை வச்சிருக்காரா? இனியும் குறை வைக்க மாட்டார்மா.”
“ஆம்பளைங்களையே நம்ப முடியாது சாமி, எத்தனை வயசானாலும் பொண்டாட்டி செத்ததும் புது மாப்பிள்ளை ஆகிடுவாங்க. அவங்களே ஆகலையினாலும் அக்கம் பக்கம் இந்த ஊர்காரங்க இருக்காங்களே பொல்லாதவிங்க. ஏதேதோ பேசிப் பேசி இரண்டாவதா ஒருத்தியை கட்டி வச்சிருவாங்க. அப்புறம் என் புள்ள வாழ்க்கை என்னாகும்?.”
சொன்னவர் தனது நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காதும்மா.”
“என் புள்ளையை நட்டாத்துல விட்டுட்டு போறேனேன்னு கெதக்கு கெதக்குன்னு இருக்கய்யா. இந்த நோயி இன்னும் கொஞ்சம் வருசம் கழிச்சு வந்திருக்கக் கூடாதா?”
அவர் அழ, அவனும் அழுதான். தன்னை சற்று தேற்றிக் கொண்டவன்,
“அதெல்லாம் நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்காதும்மா. நீங்க இப்படி பேசினா அப்பாக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா.”
“இல்லடா போன வருசம் தான் அந்த மேலத்தெரு வனஜா…. அவ புள்ளைங்க அவ இருக்குமட்டும் என்ன அழகா வளர்த்தா தெரியுமா? இப்ப பாரு …….. பரிதாபமா என்னமோ போல….. அப்புறம் கொஞ்ச நாள் முன்னால அந்த செல்லி….” ஏதேதோ அக்கம் பக்கத்து நிகழ்வுகளை எல்லாம் சொல்லிச் சொல்லி புலம்ப அவரை சமாதானப் படுத்தி உறங்க வைக்கவே அவனுக்கு நேரமாகிற்று.
தாயும் மகனும் பேசிக் கொண்டு இருந்ததை முத்துராஜீம் கேட்க நேர்ந்தது. அவர் ஒரு முடிவிற்கு வந்து விட்டிருந்தார். கணேசன் இரண்டு நாட்கள் முன்புதான் லீவில் வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு சில பல வேலைகளை முடித்து வந்தார்.
மகன் லீவு முடிந்து மும்பை திரும்புவதற்கு ஒரு நாள் முன்பாக மனைவி முன்பாக மகன் கைகளில் அவன் பெயரில் மாற்றிய பெரும்பாலான சொத்து பத்திரங்களை கொடுத்தார்.
“சாம்பவி உன் மனசில இருக்கிற பயத்தை எப்படி போக்குறதுன்னு எனக்கு தெரியலை. இந்த வீடும், நம்ம வயலும் தவிர்த்து மற்ற எல்லா நிலங்களையும், தோட்டத்தையும் ஆனந்த் பேருக்கு நான் மாற்றி எழுதிட்டேன். அவன் இதை எல்லாம் என்ன வேணா செய்துக்கலாம். அவன் படிப்பு இனி தடைபடாதுன்னு உனக்கு நம்பிக்கை இருக்கில்ல?” கேட்ட முத்துராஜின் கையை பிடித்துக் கொண்டு ஏங்கி அழுதார் சாம்பவி.
தாயும் தந்தையும் சொத்து பத்து அது இது என தன்னை பிரித்து நிறுத்தி விட்டதாக மனதிற்குள்ளாக குமுறிய ஆனந்தை அவனது பெற்றோரின் கரங்கள் தழுவின.


Leave a Reply