அத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகச் சொல்லி தாய் அத்தை வீட்டிற்கு செல்ல வேண்டாமென தடுத்து இருக்க பக்கத்து வீட்டில் கேட்ட சத்தங்களில் சம்பூர்ணா அத்தை வீட்டிற்கு வந்தாள். அதற்குள்ளாக சாம்பவியின் தகனமும் நிகழ்ந்து முடிந்து இருந்தது.
வந்தவள் தனது அத்தையை தேடினாள்.அவரது படுக்கை வெறுமையுற்று இருக்க ஆனந்தும், முத்துராஜீம் வந்து நின்ற நிலையை பார்த்ததும் அவளுக்கு தனது அத்தை இனி இல்லை எனும் உண்மை புரிந்தது.
பார்வதி தனது வீட்டில் இருந்து போட்டு வந்த டீயை அங்கு இருந்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்க சொந்த பந்தங்கள் அங்கங்கே இருந்து ஏதேதோ நடைமுறைகளை சொல்லிக் கொண்டு இருந்தன.
உள்ளறையில் சுவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆனந்த் அத்தான் அருகில் சென்றவள் அவன் அருகில் அமர்ந்த வண்ணம் ஏனோ தனது நெஞ்சடைத்துக் கொண்டு வர அழுதாள். அவள் கண்ணீரை துடைத்து, தலையை வருடி விட்டவன் அவளிடம் எதுவும் சொன்னானில்லை.
பதினாறாம் நாள் கழித்து சொந்தங்கள் எல்லாம் அவரவர் வீடு திரும்ப வீடு வெறிச்சிட்டு இருந்தது. இத்தனைக்கும் நடுவில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துக் கொண்டிருந்த பிள்ளைத்தாய்ச்சியாய் இருந்த பார்வதியின் மனநிலையை எவரும் அனுமானிக்கவில்லை.
சாம்பவியின் இழப்பு அவரது மனதை பெரிதளவில் பாதித்து இருந்தது, ஓரிரு வாரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றிருக்க, இரண்டாவது குழந்தை பேற்றை பெரிது படுத்தாத மனநிலை கொண்ட மக்கள் வேறு. கணேசனும் நண்பனின் துயரத்தில் தோள் கொடுக்கவே நின்றார். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன எனும் எண்ணத்தில் தனது மனைவியின் பக்கம் அவரது கவனம் திரும்பவில்லை.
பதினாறாம் நாள் நிகழ்வுகள் முடிந்த இரவு அன்று பார்வதிக்கு வலி கண்டது. அவசரமாகத்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்தனர். எனினும், குழந்தையைப் பிரசவித்த போதே பார்வதிக்கு எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தம் அதிகரிக்க அதனால் ஏற்பட்ட இரத்தப் போக்கினால் அந்த மருத்துவர்களால் பார்வதியை காப்பாற்ற முடியவில்லை.
நண்பர்கள் இருவரது குடும்பமும் தங்களது இணையரை இழந்து நின்றனர். செவிலியர் பார்வதிக்கு பிறந்த ஆண் குழந்தையை கையில் ஏந்தி வர, இனி என்ன செய்யப் போகிறோம்? குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம்? என கணேசன் திகைத்து நின்றார்.
தனது தாயின் மரணத்தின் இழப்பில் இருந்தே வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த ஆனந்திற்கு பார்வதி அத்தையின் மரணம் இன்னும் பேரிடியாக இருந்தது.
ஒன்றும் புரியாமல் நாட்கள் கடக்க, கணேசனின் லீவு நாட்கள் முடியவர அவர் தனது வேலையில் சேர்ந்தாக வேண்டும். வெறுமையான வீடு, இங்கே யாரை நம்பி சில நாட்களே ஆன குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்வதாம்? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஊரார் அவர் உடனடியாக இரண்டாவது திருமணம் செய்வதுதான் நல்ல தீர்வு என அவருக்கு அறிவுறுத்த அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஏற்கெனவே இருக்கின்ற சிக்கல்களை எப்படி தீர்ப்பது என புரியாமல் இருக்க, புதிதாக ஒரு சிக்கலை சேர்ப்பதா?
என்னச் செய்வதென ஒன்றும் புரியாதவராக அந்த ஊரிலேயே ஒரு பெண்மணியை தங்கள் வீட்டில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் படி வேலைக்கு வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து வேலைக்கு சென்று மேலும் சில நாட்கள் விடுப்பு கேட்டு திரும்ப வந்தபோது அதற்குள்ளாக சம்பூர்ணா பாதியாக இளைத்து துரும்பாக மாறி இருந்தாள்.


Leave a Reply