ஆனந்திற்கு நிகழுவன எதுவுமே உவப்பாக இல்லை, எதற்காக உள்ளூரில் ஏதோ படித்தோம் என்றிராமல் இத்தனை தூரம் படிக்கச் சென்றோம்? என மனதிற்குள்ளாக சலித்துக் கொண்டான்.
சில மாதங்கள், சில நாட்கள் என தனது தாயின் வாழ்நாட்கள் எண்ணிக்கையில் இருக்க எல்லாவற்றையும் தூரப் போட்டுவிட்டு அம்மாவின் அருகில் இருக்க மனம் ஏங்கியது. அருகில் இருந்தாலோ அவர் படும் துயரம் கண்டு மனம் நொந்தது. “நீ படி படி” எனச் சொல்லும் தாயிடம் படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உன் அருகிலேயே இருந்துக் கொள்கிறேன் எனச் சொல்லும் துணிவும் அவனிடம் இல்லை.
வீட்டு நிலைமையைச் சொல்லி இரு வாரங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்துச் சென்றான். சென்ற பின்னர் விட்ட பாடங்களை கற்க மிகவும் சிரமமாக இருந்தது. வெகு கொடுமையான காலக்கட்டத்தை அந்த குடும்பமே கடந்துக் கொண்டு இருந்தது.
சம்பூர்ணாவை இப்போதெல்லாம் அந்த வீட்டிற்கு வர பார்வதி அனுமதிப்பதில்லை. சாம்பவியின் நிலையை தன்னாலே பார்க்க முடியாமல் இருக்க, சின்னக் குழந்தை அவள் மனம் என்னவாகும்?
நலிந்து சோர்ந்த அந்த உயிர் மகனை பார்க்கையில் எல்லாம் அவரது கண்கள் ஒளிரும். தனது படிப்பைக் குறித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது தாயிடம் சொல்லுவான். நான் நல்லா படிப்பேன்மா என மாறி மாறிச் சொல்ல தாயின் கண்களின் ஒளி கூடும்.
நாளும் பொழுதும் சுருங்கிக் கொண்டே வந்த தாயின் நிலையை அவனால் கண்ணால் காண இயலவில்லை. மனதெல்லாம் வலி வலி வலி மட்டுமே. தான் அனுபவித்த வலிகளில் எல்லை முடிந்து போன நாளொன்றில் அந்த உயிர் சப்தமின்றி பிரிந்தது.
மாதக்கணக்காக மரண துக்கம் கொண்டாடிய அந்த வீட்டில் யாரிடமும் அழும் தெம்பு கூட இல்லை. மனமெல்லாம் மரத்து இறுகிப் போனவர்களாக தகப்பனும் மகனும் ஒருவரை அணைத்துக் கொண்டு குலுங்க கணேசனும் பார்வதியும் அரவணைத்துக் கொண்டனர்.
மோசமான நோய் என்பதால் உடனே உடலை தகனம் செய்ய வேண்டுமெனச் சொல்ல சில மணி நேரங்களிலேயே திருமதி சாம்பவி அம்மையார் உடல் தகனமானது.


Leave a Reply