Epi 10_Thurathum Nizhalgal_Jansi

ரிஷாவும், இந்தரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ரிஷா தான் பதிலளித்தாள்.

“இல்லை ரிஷி எனக்கு இன்றைக்குத் தான் இப்படி ஒரு இக்கட்டான சூழலை அனுபவித்து இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்? என்றே புரியாத நிலை, இந்தர் சொன்னதும் உங்களை தேடி வந்தோம்.”

“ஓ, அதற்கென்ன பரவாயில்லை, பொதுவாக எல்லோரும் போலீஸிடம் செல்வார்கள் தானே? அதனால் கேட்டேன்.”

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “சரி வாங்க இரண்டு பேரும், போகிற வழியில் உங்களை ஹோட்டலில் விட்டு விட்டு இவனை என்னோடு கூட்டிச் செல்கிறேன். மணி பத்தே முக்கால் ஆயிற்று. வாய்ப்பிருந்தால் போகும் வழியில் இரவு உணவை முடித்துக் கொள்ளலாம்” தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நான் கேமராவை ஏற்கெனவே பார்த்து விட்டேன். செக்யூரிட்டியிடமும் கேட்டுவிட்டேன் இந்தப் பக்கம் யாரும் வித்தியாசமாக வரவில்லை என்றார். ஒன்றும் பயமில்லை பாதுகாப்பாக சென்று விடலாம் என்று அறையைத் தாண்டி, கதவைத் திறந்து ரிசப்ஷனுக்கு வந்தான். 

டேபிளுக்கு கீழே இருந்த ரிஷாவின் பெரிய பையை குனிந்து எடுத்துக் கொண்டு சற்றுப் பின்னாக இந்தர் ரிஷியைத் தொடர்ந்தான்.

அவனைத் தொடர்ந்து ரிஷா பின்னே வந்தாள்.

“பீஸ் எவ்வளவுன்னு கேளு இந்தர்”

இருவரும் பேசிக் கொண்டு பின்னால் நின்றனர். 

“கேஸ் முடிந்ததும் பீஸ் கேட்டு வாங்கிக்கிறேன் ரிஷா”, முன்னால் சென்ற ரிஷி பதில் கூறினான்.

“உன் ப்ரெண்டுக்கு பாம்புக் காது”என இந்தரிடம் முணுமுணுத்தாள் ரிஷா, இந்தர் புன்னகைக்க,

“ஆமாம், எல்லோரும் அப்படித்தான் சொல்லிக்குவாங்க ரிஷா”, பின் திரும்பி அவர்களைப் பார்க்காமலேயே ரிஷாவிற்கு பதிலளித்தான் ரிஷி.

ஆவென வாயைப் பிளந்தவள் இனி தான் பேசப் போவதில்லை என கைகளால் சைகைக் காட்டி, தலையில் அடித்துக் கொண்டு, தன் வாய்க்கு பூட்டுப் போட்டுக் கொள்ளுவதாக இந்தரிடம் கையால் அபிநயம் பிடிக்க இந்தர் அவளைப் பார்த்து சன்னமாய் சிரித்தான்.

முன் ரிசப்ஷன் அடைந்த ரிஷி தான் உள்பூட்டு போட்டிருந்ததை விடுவித்து, கைப்பிடி குமிழியை திருப்பி திறக்கவும், சட்டென்று “குப்ப்ப்..” என காற்றில் ஒலி எழுந்து அடங்கியது.

தன் மீதான தாக்குதலில் இருந்து தப்பிக்க ரிஷி அனிச்சையாய்  பின்னால் சரிந்து நிமிர்ந்தான்.

நிமிர்ந்த வேகத்தில் கதவை மறுபடி அடைத்து உள் பக்கம் கதவின் பின்னால் அணைவாக நிற்க முயன்றான்.

அவனது ஐம்புலன்களும் விழிப்படைந்திருந்தது. வாயிலின் அந்தப் பக்கம் யாரோ இருக்கிறார்கள், ஒருவேளை ரிஷாவை தேடிக் கொண்டு வந்திருக்கலாம்.

அப்படியே கதவை அடைத்து, கிடைக்கும் வாய்ப்பில் போலீஸின் உதவி நாடுவது அவன் திட்டமாக இருந்தது. தன் கிளையண்டுக்கு ஆபத்து வருவதை அவன் விரும்பவில்லை.

Pages: 1 2 3 4 5 6 7


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!