நொடி வேகத்தில் மூளையை செயல்படுத்தியவன், அந்த மூன்றாம் மாடியில் இருந்த மற்ற அலுவலகங்கள் ஏற்கெனவே அடைக்கப் பட்டு இருந்ததால் உடனடி உதவி எதுவும் கிட்டாது என்பதை உணர்ந்தவனாக அவசரமாய் இந்தரை நோக்கி கத்தினான்.
“இரண்டு பேரும் ஆபீஸ் அறைக்குள் போங்க, உள்ளுக்குள் அடைத்துக் கொள்ளுங்க”, சொல்லும் போதே அவனை எதிர்த்து வாயிலில் வந்து நின்ற அந்த ஆஜானுபாகுவான மனிதன் ரிஷியின் கதவை அடைக்கும் முயற்சியை முறியடித்தான்.

அலேக்காக ரிஷியை அவனது சட்டையைப் பிடித்து தூக்கி வெளியில் வீசினான், ரிஷி படிகளில் உருண்டு விழுந்தவன் சில படிகள் கடந்ததும் சட்டென்று வில்லாய் எழுந்து நின்றான்.
ரிசப்ஷனைத் தாண்டி உள்ளறைக்கு செல்ல முயன்ற இந்தர் மற்றும் ரிஷாவை தபதபவென மேல் மாடியிலிருந்து பாய்ந்து இறங்கியவர்கள் தடுத்தனர்.
அவர்களைச் சுற்றி வளைத்தனர். இந்தர் தாக்குதலை ஆரம்பிக்க இரண்டாவது முறை கையை ஓங்கும் போதே அவனை இருக்கப் பிடித்து, அவனது கையை முறுக்கி, அவன் கழுத்தோடு சேர்த்து அணைத்து பிடித்திருந்தான் ஒருவன்.
வெளியே படிகளில் உருண்டு எழுந்த ரிஷி தன்னை சமாளித்துக் கொண்டு குனிந்து எழும்பிய வண்ணமே தன்னைத் தாக்கியவனை நோக்கி பாய்ந்து வயிற்றில் தன் தலையை ஆயுதமாக்கி மோதினான்.
ரிஷியின் மோதலில் “கும்க்க்” வினோத ஒலி எழுப்பியவன் வயிற்றைப் பிடித்த வண்ணம் பின் சாய்ந்து விழ, மேல் மாடியிலிருந்து ஒருவன் படிச்சுவற்றில் இருந்து தாவி ரிஷியின் பின்னதாய் படிக்கட்டில் சூறாவளி போல நொடியில் இடம் மாறி நின்றுக் கொண்டு ரிஷியின் பின்னங்கழுத்தில் வலுவாக தன் கையை பாய்ச்சினான்.
ரிஷி அந்த தாக்குதலின்று தப்பிக்க தன்னை முன்பாக உந்தியவனாய் குனிந்து முன் நோக்கி நகர, அதற்குள் வயிற்றில் அடிப்பட்டவன் நிமிர்ந்து நின்று தன் இரண்டுக் கைகளால் ரிஷியின் தலையைப் பற்றிக் கொண்டு சுவற்றில் மோத முயன்றான்.
ரிஷி தன் ஒற்றைக்காலை சுவற்றில் பதித்து உந்தி எழும்பி மற்றொரு காலால் தன் தலையை பிடித்திருந்தவனுக்கு ஒரு உதையை பரிசளித்தான்.
பின்னாலிருந்தவனோடு இன்னொருவனும் வந்துச் சேர, மாற்றி மாற்றி அந்த மூவரோடு சுழன்று சுழன்று ரிஷி பதில் தாக்குதல் கொடுத்துக் கொண்டே வர, இப்போது அவர்களுக்குள் சண்டை தீவிரமடைந்திருந்தது.
தன் வலதுக் கை தன் கழுத்தையே அழுத்தி இருக்க இன்னொருக் கை பின்பக்கம் முறுக்கி இருக்க வலுவான பிடியில் திமிறிக் கோண்டு இருந்தான் இந்தர்.
ரிசப்ஷனுக்கடுத்த அறையின் உள்ளே செல்லாதவாறு தடுத்து நின்ற இரண்டு தடியர்கள் முன்னால் ரிஷா நின்றுக் கொண்டு இருந்தாள்.
அவளது இரண்டுக் கைகளும் பின்னால் நின்றவனால் கட்டப் பட்டு இருந்தது. இப்போது ரிஷி சண்டையிட்டவாறே தன் அலுவலகத்தின் வாயிலில் வந்து சேர்ந்து இருந்தான்.
தான் நினைத்த படி போலீஸ் உதவியை நாட இயலாவிட்டாலும், எப்படியாவது இந்தர் மற்றும், ரிஷாவை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்து விட வேண்டுமென்பதே அவன் நோக்கமாக இருந்தது.


Leave a Reply