“அன்னிக்கு பார்த்துட்டு போன பையனை உனக்கு பிடிக்கலைதானே?” என மாமா கேட்க அன்றைக்கு வந்தவர் யாரென்றே பாராமல் நேரம் போக்கி இருந்தவளுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் நினைவில்லை.
“அப்படி இல்ல மாமா, எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேண்டாம். நான் வேலை செஞ்சு ஒரு வருசம் கழிச்ச பிறகு வேணும்னா கல்யாணம் செய்துக்கிறேன்.”
“அதெல்லாம் அப்புறம்… இப்ப உனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கலைதானே? அதுக்கு பதிலை சொல்லு.”
தடுமாறியவளாக தலையசைத்தாள். “ம் பிடிக்கலைதான் மாமா”
“இப்ப நான் உங்கப்பன் முன்னால இதை கேட்பேன் வந்து சொல்லணும் என்ன புரியுதா?”
“மாமா… நீங்க இன்னும் நான் உங்க கிட்ட சொன்னதை அப்பா கிட்ட சொல்லவே இல்லையா? போங்க மாமா. நேத்து நாங்க யாரும் இல்லாதப்ப சொல்லி இருப்பீங்கன்னு நினைச்சேன்” முகத்தை சுருக்கினாள்.
“அதெல்லாம் நேரம் பார்த்துதான் சொல்லணும்… நான் பாட்டுக்கு நீ இல்லாத நேரம் எதையாவது கேட்டு வைக்க, அவன் உனக்கு போன் செய்வான். ஊர் சுத்த போறவங்களை எதுக்கு தொந்தரவு செய்வானேன்னு சொல்லல.”
“ம்ம் சரி” ஒருவாறாக ஏற்றுக் கொண்டாள்.

