Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

மறுபடி முன்னறைக்கு சென்றவரோ “பாப்பாக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை போலிருக்குடா” என கொழுத்திப் போட,

கணேசன் நெற்றிச் சுருங்கினார், “சம்பூ அன்று அமைதியாகத்தானே இருந்தாள் முத்துராஜ்? அவள் என்னிடம் ஒன்றும் சொல்ல வில்லையே?”

“என் கிட்ட சொன்னாளே டா”

“சம்பூ”

அப்பா அழைத்ததும் என்னவென்று வந்து நின்றவளிடம்,

“உனக்கு அந்த மாப்பிள்ளையை மணம் முடிக்க விருப்பமில்லையா சம்பூ?”

“அப்பா எனக்கு வேலை…” என அவள் ஆரம்பிக்க முத்துராஜோ “அப்பா கேட்டதுக்கு பதில் சொல்லம்மா?” என இடைமறித்தார்.

‘எது எப்படியோ திருமணம் நின்றால் சரிதான்’ என எண்ணியவளாக துணிவை கூட்டிக் கொண்டு “இல்லப்பா எனக்கு பிடிக்கலை” என்றாள்.

“சரிம்மா… முன்பே எனக்கு சொல்லி இருக்கலாமே?” என முனகியவராக “சரி நீ போ” என அனுப்பி விட்டார்.

“அம்மாடியோ நான் பிழைச்சேன்” என்றவளாக முகம் மலர தனது அறைக்குள் சென்று ஆசுவாசமாக அமர்ந்தாள். அதுவரையிலும் எதையோ சுமந்துக் கொண்டிருக்க அதை இறக்கி வைத்தது போலொரு இலகு உணர்வு.

கொஞ்ச நேரம் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்திருக்க, மீதமிருந்த முன்தின களைப்பில் அப்படியே கண்ணயர்ந்தாள்.

“பொண்ணுக்கு வயசு கூடிட்டே போகவும், அவளுக்கு நல்லதா ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்காமல் போயிடுவோமோன்னு தினம் மனசு திக்கு திக்குன்னு இருக்குதுடா. இந்த மாப்பிள்ளையை ரொம்ப கஷ்டப்பட்டு தேடினேன்டா முத்துராஜ்…”

“ம்ம் உன் கவலையும் புரியுது.”

Pages: 1 2 3 4 5 6 7 8 9

error: Content is protected !!