தான் வைத்த அலாரம் ஒலிக்கவும் அவசரமாக எழுந்த சம்பூர்ணா முகம் கழுவி வந்தவள் ஹாலில் இருந்தவர்களை சாப்பிட அழைத்தாள்.
“மாமா… அத்தான் இன்னும் வரலையா?”
“வரலையேமா”
“நேரமாச்சே, பொறுங்க அவங்களுக்கு கால் போடறேன்”
இவள் அழைக்க அவன் அதை எடுக்காமல் வெறித்துக் கொண்டு இருந்தான்.
அப்பாவுக்கும் மாமாவுக்கும் வேண்டியதை பார்த்து கொடுத்தவள்,
“நீங்க சாப்பிடுங்க நான் என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்றவளாக புறப்பட்டாள்.
போய் ஆனந்தின் வீட்டின் வாயில் மணியை அடிக்க அடுத்த இரண்டு நிமிடத்தில் ஆனந்த் கதவை திறந்து நின்றான். வாசலில் நின்றவள்,
“போன் அடிச்சேன் அத்தான்”
“ம்ம்…”
“இன்னுமா தூக்க கலக்கம் தீரலை?”
“ம்ம்”
“வாங்க சாப்பிட வாங்க”
“வர்றேன் நீ போ”
மேலும் கீழுமாக அவனை பார்த்தவள்
“வாங்க சேர்ந்து போகலாம்” அங்கேயே நின்றுக் கொண்டாள்.
வேறு வழியில்லாமல் உள்ளே சென்று தான் அணிந்திருந்த உள்சட்டை மேல் டீ சர்ட் ஒன்றை அணிந்த வண்ணம் புறப்பட்டு வந்தான், கதவை அடைத்து அவளுடன் நடந்தான்.
“மாமா கூட சண்டையா?”
“உனக்கெப்படி தெரியும்?” ஆச்சரியமாக அவளை பார்க்க,
“அப்பா கூட கோபமா இருந்தா பிரசன்னா கூட இப்படித்தான் இருப்பான்… உர்ர்ருன்னு…” பக்கென்று சிரித்து வைத்தாள். திருமணம் நின்ற சந்தோஷத்தில் இன்றைக்கெல்லாம் அவளால் மனம் திறந்து சிரிக்க முடிந்தது.

