அவர் சென்ற பின்னர் செல்விக்கு தனது வீட்டிலேயே இருக்க இடம் கொடுத்து, அவளுக்கு கிடைத்த பணத்தை வங்கியில் பத்திரப்படுத்தி, அவளுக்கு பிழைப்பிற்கும் ஒரு வழி செய்துக் கொடுத்து ஒரு நல்ல இடமாகப் பார்த்து திருமணம் செய்வித்ததில் சுகந்தியின் மனம் நிறைந்து விட்டிருந்தது.
இதற்கிடையில் ஓரிரு முறைகள் ஜோனா அப்பம்மாவை வந்து பார்த்து சென்றிருந்தான்.
பக்கத்து ஊரில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட செல்விக்கு இப்போது ஒரு குழந்தை இருக்கின்றது. சுகந்தியின் மகளோடு கூட இன்னொரு மகளாக அவ்வப்போது வந்து சுகந்தியை பார்த்துச் செல்வாள்.
அடுத்த சில வருடங்கள் கழித்து செல்வியின் மாமனார் வீட்டை வாங்கி இருந்த குடும்பத்தினர் அந்த வீட்டிற்கு குடி வருவதாக தெரிந்ததும் அன்று அந்த குட்டைச் சுவற்றின் அருகில்தான் சுகந்தி அமர்ந்திருந்தார் அவரது மனதில் ஏதோ ஒரு ஆவல்.
ஒரு வாரமாக சுத்தம் செய்யப் பட்ட அந்த பக்கத்து வீட்டில் ஒரு லாரி நிறைய பொருட்கள் வந்து இறங்கின. அந்த தம்பதிகளுக்கு ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள். வந்ததுமே துறுதுறுப்பாக இருந்த அவர்கள் வீட்டு வாண்டு ஒன்று சுவற்றின் இந்தப் பக்கம் தாவிக் குதித்து ஓடவும் சுவற்றின் அப்பக்கம் இருந்து தாயும் தகப்பனும் பதறினர்.
சுகந்தியும் அவசரமாக குழந்தை ஓடிய பக்கம் கவனம் செலுத்தி போய் நிற்க அந்த கிணற்றின் அருகே சென்று நின்றிருந்தது குழந்தை. குழந்தையை கையை பிடித்து அழைத்து வந்த சுகந்தியை பார்த்த அவன் பெற்றோருக்கு ஆசுவாசம்.
“பாட்டிம்மா இந்த நடு சுவரை கொஞ்சம் உயரமா கட்டப் போறோம், உங்களுக்கொன்னும் வருத்தம் இல்லையே?”மகன் அங்கிருந்து இங்கே சாடி வந்ததில் மனைவியின் பதட்டம் கண்டு அவளை ஆறுதலாக அணைத்து நின்ற அந்த கணவனின் கூற்றில் சுகந்தி மகிழ்ச்சியாக தலையசைத்தார்.
“அந்த கிணறு கூட முடிஞ்சா நல்லா மூடி வைங்க பாட்டி, உங்க வீட்டில கூட யாரோ? … கேள்விப் பட்டேன்”
“என் மகன் என் மகன்தான் விழுந்தது”
“ரொம்ப வருத்தம் மா”
“இனி கிணறு திறந்திருக்காது மேல அடைச்சிடுவேன்” மகிழ்ச்சியாக தலையசைத்தார் சுகந்தி.
புதிதாக வந்தவர்கள் கேட்ட கேள்விகளில் சுகந்தியின் மனதின் அடியாழங்கள் ஒரு நிமிடத்திற்கு திறந்து மூடின.
குடிபோதையில் கிணற்றின் அருகில் தடுமாறி நின்ற மகன் தன் கண் முன்னே உள்ளே விழுந்தது.
அந்த கிணற்றைத் தாண்டிய சுவற்றின் அப்பால் கடந்துச் சென்றவர்களுள் யாரோ சுகந்தியைப் பற்றி சொல்லிக் கொண்டு சென்றார்கள்.
“அந்த மனுசன் பக்கவாதம் வந்து படுக்கையில விழும் மட்டும் எவ்வளவு ஆட்டம் தெரியுமா? அத்தனை கொடுமை செய்த அந்த ஆள் பத்திருபது வருசம் படுக்கையில கிடந்தப்பவும் கூட முகம் கோணாம பாடு பார்த்திருக்காங்க அந்த அம்மா… அவங்க ரொம்ப பொறுமை”
அமைதியாக கேட்டபடி சுவரின் அருகே வந்து நின்றார் சுகந்தி.
சுவரின் அந்த பக்கம் குழந்தைகளின் சேட்டைகளும், தம்பதிகளின் அன்பான உரையாடலும் என பார்க்க கிடைக்கவும் பழைய நாட்கள் கழிந்து, புதிய நாட்கள் வந்து விட்டன. அவைகளில் இனி பதற்றமும், அழுகையும் சோகமும் இராது என ஆசுவாசம் எழுந்தது.
முற்றும்


Leave a Reply