குடிகாரன் வீட்டில பொண்ணு எடுக்க கொடுக்க கூட மாட்டான். இது எல்லாம் வெளி உலகத்தில குடிகாரன் குடும்பம் அனுபவிக்கிற துயர்னா…வீட்டின் உள்ள ஒரு அறைக்குள்ள குடிகாரனோட வாழறது இருக்கே மாமி அது நரகம். அவன் எந்த நேரம் சிரிப்பான்? எந்த நேரம் அழுவான்? எப்ப என்னது செய்வான்னே தெரியாம அழுந்தி சாகணும்.”
“….”
“சின்ன வயசில இருந்தே நான் எங்க வீட்டில கண்டது எல்லாம் எப்பவும் வீட்டுக்குள்ல ஒரு இறுக்கமான சூழ்நிலைதான் இருக்கும். இன்னிக்கு என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை ஆகுமோ? நிம்மதியா சாப்பிட முடியுமா? இல்ல தூங்க முடியுமா? இதெல்லாம் தினம் தினம் விடை தெரியாத கேள்விகளா இருக்கிறதால எப்பவுமே திக்கு திக்குன்னு பயத்தோடவே இருப்போம்.”
“…”
“என்னிக்காவது ஒரு நாள் எங்கப்பா குடிக்காம வந்திட்டார்னா… அன்னிக்கு எங்க கிட்ட பாசமா இருப்பார். சிரிக்கச் சொல்லுவார், விளையாடுவார் எதையாவது வாங்கித் தந்து தின்னு தின்னுன்னு திணிப்பார். வருசம் முழுக்க கொடுமைப் படுத்திட்டு ஒரு நாள் நல்லா பேசிட்டா எங்களால பேச முடியுமா மாமி? எங்களுக்கு உடனே சிரிப்பு வருமா மாமி?”
“…”
“வராதுல மாமி…ஆனாலும் நாங்க பேசுவோம், சிரிப்போம் மாமி, அப்பதானே அன்னிக்கு எங்கம்மாவை அப்பா அடிக்க மாட்டார். தினம் தினம் அப்பாக்கிட்ட அடி வாங்கியே அம்மா உடல் நொந்து போயிட்டாங்க… அப்புறம் அப்பா ஒரு நாள் இறந்ததும் நிம்மதியா இருந்துச்சு.”
“…”
“ஒருத்தர் செத்தா யாரும் சந்தோசப்பட மாட்டாங்கல்ல மாமி. ஆனா குடிகாரன் வீட்டில கேட்டுப் பாருங்க, அதுவும் குடும்பத்தை நிம்மதியா வாழ விடாத குடிகாரன் வீட்டில கேட்டுப் பாருங்க அவன் செத்த அன்னிக்கு ஓருபக்கம் அவங்க அழுதாலும் கூட, இனி அவனால பிரச்சனை இல்லைனு வீட்டில இருக்கிறவங்க மனசில ஒரு நிம்மதி வரும் மாமி.”
“…….”
“முதல்ல அப்பா இப்ப அம்மாவும் என்னை விட்டு போயிட்டாங்க. அப்பாவோட கொடுமைகளால எனக்கு இருக்க ஒரே ஒரு தம்பி அவனும் இருந்தும் இல்லாதது போல மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியா இருக்கான். பொறந்த வீட்டில தான் குடி குடின்னு அந்தக் கொடுமையெல்லாம் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தேன்னா… இங்கயும்…”அழுதுக் கொண்டு இருந்தவளை வெறுமனே பார்த்து நின்றார்.
“என் வீட்டுக்காரங்க மத்த நேரம் சிரிக்கச் சிரிக்கப் பேசுராங்க, என்னையும் சிரிக்க வைக்குறாங்க. வீட்டில வேண்டியதெல்லாம் நல்லா வாங்கி தராங்க.ஆனால் குடிச்சிட்டா மட்டும் அப்பப்பா நரகம் நரகம்.”
“…”
“கல்யாணம் ஆன ஆரம்பத்தில் நல்லாதான் இருந்தாங்க அப்புறம் என்னாச்சோ தெரியலை. அதுவும் எங்கம்மா தவறினதுக்கு அப்புறம் ஆறுதலா இருப்பாங்கன்னு நினைச்சேன் மாமி, ஒருவேளை என் அம்மா இறந்ததும் இவளுக்கு ஏதும்னா கேட்க யாரிருக்கான்னு அலட்சியமா தோணிடுச்சோ என்னமோ?”
“ம்ம்”
“பகல்ல நல்லா பேசுறது, என்னையும் பேச வைக்குறது அப்புறம் இராத்திரி குடிச்சுட்டு வந்து பகல்ல நான் பதிலுக்கு எதையாச்சும் விளையாட்டா சொல்லி இருப்பேன்ல அதையே பிடிச்சிட்டு நீ அப்படி எப்படிச் சொன்னன்னு தூங்கவே விடாம கேள்விக்கு மேல கேள்வி கேட்குறது.”
“…”
“குடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் பதில் பேசலைன்னா உனக்கு அவ்வளவு திமிரா? ன்னு அடிக்க வராங்க, பதில் பேசினா எதிர்த்துப் பேசுர உனக்கு அவ்வளவு கொழுப்பா? ன்னு திட்டுராங்க”
“…”
“பேசினாலும் தப்பு, பேசாட்டாலும் தப்பு”விசும்பினாள்.
“…”
“ராத்திரி எல்லாம் என்னை தன் கைக்குள்ளயே இறுக்கிப் பிடிச்சு வச்சுக்கிட்டு, என்னை முறைச்சுப் பார்த்துட்டே என்னையா மரியாதைக் குறைவா பேசுன? இப்ப உன் மூஞ்சை இப்ப பிய்க்கட்டுமா?, இல்ல உன் கண்ணு இரண்டையும் நோண்டவா? உன் காதை பிய்ச்சுட்டேன்னா இனி ஒரு தடவை பேச மாட்டில்லன்னு மிரட்டுறாங்க.. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?”
“…”
“அப்படில்லாம் மிரட்டும் போது எங்கயாவது ஓடிப் போயிரலாம்னு தோணும்.. மனசுக்கு ரொம்ப பயமா இருக்கும் மாமி”


Leave a Reply