8. Suvar_Short story_Jansi

தற்போது மணி ஏழாகி விட்டிருந்தது, திருப்பலி முடிந்து சரசரவென மக்கள் கூட்டம் தத்தம் வீட்டை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் சுகந்தியும் இருந்தார். சுகந்தி தனது ஐம்பத்தி சொச்ச வயதிற்கு மீறிய தள்ளாமையுடன், தளர்ந்த நடையுடன் தன் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தார். 

அவருக்கு இப்படி நிதானமாக காலை வேளையில் திருப்பலி காண்பதெல்லாம் பற்பல வருடங்களுக்குப் பின்னரே சமீபமாக வாய்க்கப் பெற்று இருந்தது. பத்து வருடங்களுக்கு மேலாக படுக்கையில் கிடந்த கணவரை கண்ணும் கருத்துமாக கவனிப்பதில் அவரது கடந்த பல வருடங்கள் அல்லது வாழ்க்கை கடந்திருந்தன.

“சுகந்தி நல்லாயிருக்கியாம்மா?”

சமீபத்தில் கணவரை இழந்தவர் எனும் வகையில் பரிவும், கனிவுமாக சில குரல்கள் அவரை விசாரித்து கடந்துச் சென்றன.

“சுகந்தியைப் போல பொறுமை யாருக்குண்டு?”

“சுகந்தி அண்ணிக்கு சிலை தான் வைக்கணும்”

“என்ன பொறுமை அக்கா, உங்க கிட்ட இருந்துதான் நாங்க கத்துக்கணும்”

ஏதேதோ நினைவுகளில் உழன்றவரை இருவரது பேச்சுக்கள் கலைத்தன.

“அவ அபார்சன் பண்ணிட்டாளாமே, ரொம்ப மன தைரியம் தான் போ”

“அப்படியா? அந்த ஊர்காரளுகளே அப்படித்தான், உனக்குத் தெரியாதா?”

“பொட்டிய தூக்கிக்கிட்டு பொறந்த வீட்டுக்கு போயிட்டாளாம் அந்த செல்வி”

“இந்த காலத்து பொண்ணுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பொறுமை இல்லை, நாம எல்லாம் அப்படியா சொல்லு பாக்கியமக்கா?”

“ஆமா லில்லிக்கா, சரி வாரேன்” அவரவர் வீட்டின் திருப்பம் வந்ததும் பிரிந்துச் சென்றனர். அவர்களோடு அந்த செல்வியின் கதையும் இரு தெருவிற்கும் பிரிந்தே சென்றது.

தன்னைக் கடந்துச் சென்றவர்களின் கூற்று யாரைப்பற்றி என மிகத் தெளிவாக சுகந்திக்குப் புரிந்தது. தற்போது தன்னை விடுத்து அந்த செல்வியைக் குறித்த எண்ணங்கள் அவரை சிலந்தியின் பின்னல்கள் போல சூழ ஆரம்பித்தது.

சுகந்தியின் கணவர் குடும்பம் சற்றுப் பெரியது. அருகருகில் ஒன்று விட்ட பங்காளிகளின் வீடு. அதாவது சுகந்தியின் மாமனாரும், மாமனாரின் சொந்த தம்பியுமாக அடுத்தடுத்த வீடும், பெரும் நிலங்களுமாய் இருந்தனர்.

இவர்களது வீட்டின் பின்கட்டிற்கு அடுத்த வளவு ( வீட்டிற்கு அடுத்த மீதி வெற்று இடம்) அதற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடுவில் உள்ளச் சுவர் நான்கே அடி உயரமானது. இரு குடும்பங்களும் கொடுக்கலும் வாங்கலுமாக உறவு பேணிய காலத்தில் அவரவர் வீட்டிலிருந்தே உறவாடியது உண்டு. அந்த சுவற்றின் வழியாகவே இங்கு சமைத்ததை அங்கு கொடுத்து, அங்குள்ளதை இங்கு பரிமாறி என அவைகள் அக்குடும்பங்களின் பொற்காலம்.

ஒரு கட்டத்தில் சொத்துப்பிரச்சனைகளில் சுகந்தியின் மாமனார்கள் இருவரும் முறைத்துக் கொள்ள, வீட்டின் பெண்டிரும் தள்ளி நிற்க வேண்டியதாயிற்று. சுகந்தியின் சின்ன மாமனார் அதுதான் பக்கத்து குடும்பத்தின் மருமகள் மரியாவும், சுகந்தியும் பேணிய நட்பும் அவரவர் குடும்பத்தினரை பகைத்துக் கொள்ளா வண்ணம் பேச்சுக்கள் நின்று போய், பார்வையில் மட்டுமே தொக்கி நின்றது.

அங்கு பேசுவது இங்கு கேட்கும், இங்கு பேசுவது அங்கு கேட்கும் வகையான வீட்டு அமைப்புத்தான் அவர்களது. பல நேரங்கள் இரு வீட்டுப் பெரியவர்கள் மாமனார் மாமியார்கள் அந்த குட்டைச் சுவற்றின் இங்குமங்கும் இருந்தவர்களாக சாடையிலும் நேரிலும் திட்டிப் பேசிக் கொள்வார்களே தவிர அந்தச் சுவரை யாரும், எப்போதும் உயர்த்திக் கட்டவில்லை. பிறர் தன் பேச்சை கேட்டுவிடக் கூடாதெனும் முனைப்பில் ஒளிந்து மறைந்து பேசவும் இல்லை. அந்தச் சுவரானது சுவராக நில்லாமல், இரு குடும்பங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக மாறி ஒரு வகையான மறைமுக உரையாடல் அங்கு நிகழ்ந்துக் கொண்டே இருக்க தான் காரணமாக இருந்தது.

மரியா இறந்துபட்ட போது, மரியாவின் குடும்பத்தினரின் அழுகைக் குரல்கள் அந்தச் சுவர் வழியாகவே இவர்களை வந்தடைந்திருந்தது. அன்றைய தினமெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாத துயரம் தீர சுகந்தி அந்த சுவற்றின் அருகில் நின்று அழுது தீர்த்து இருந்தாள். 

அடுத்தடுத்து வருடங்கள் கடக்க, அந்த வீட்டின் பெரியவர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் போய் சேர, சுகந்தியின் மாமனார் மாமியாரும் போய்ச் சேர, இரு குடும்பத்திற்குமான பகைமை அந்த குட்டைச் சுவற்றைப் போலவே இருந்தும் இல்லாததாக தொடர்ந்தது.

பின்னர் சில காலம் மரியாவின் கணவரும் இரு மகன்களும் இருந்த அந்த வீட்டின் பின் வாசல் பெரும்பாலும் திறக்கப் படவே இல்லை. அங்கிருந்த மரங்களின் கனிகளை அணில்கள், பறவைகள் என தின்றுத் தீர்க்க அந்த பெரிய வீட்டின் பின்பக்கம் கலைந்த ஓவியமாய் தூசி மண்டிப் போய் கிடந்தது.

மரியாவின் மூத்த மகனுக்கு திருமணமான போது இவர்களுக்கு அழைப்பு வைக்கப் படவில்லை. சுகந்தியின் மகளுக்கும், மகனுக்கும் திருமணமான போது இவர்களும் அழைப்பு விடுத்திருக்கவில்லை அல்லவா? 

திருமணம் முடிந்து பேண்ட் வாத்தியத்தோடு பக்கத்து வீட்டிற்கு வருகை தந்த புதுப்பெண்ணை சுகந்தி விழியகலாமல் பார்த்து இரசித்து இருந்தார்.பேச்சு வார்த்தை தற்போது இல்லாவிட்டால் என்ன? மரியாவின் மகன் ராஜன் அவருக்கும் மிகப் பிரியமானவன் தான். அவனது மனைவியை கண்டு இரசிப்பதில் சுகந்திக்கு அலாதி ஆனந்தம். அவரது அந்த சற்று நேர கவனத்தை வீட்டின் உள்ளே இருந்து வந்த குரல் கலைத்தது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!