“ம்ம்”
“இராத்திரி எல்லாம் என் பேசினன்னு டார்ச்சர் செஞ்சுட்டு பகலானா என் கிட்ட ஏன் பேச மாட்டேங்கிற? ன்னு கேட்கிறது… நீங்க ஏன் என்னை அப்படிச் சொன்னீங்கன்னு கேட்டா… கண்ணை பிடுங்கிடுவேன்னு தானே சொன்னேன் நிஜமா கண்ணை பிடுங்கினேனா? இல்லில்ல? இப்படி மாத்தி சொல்லுறாங்க. ஒன்னுமே நடக்காத மாதிரி பேசுராங்க. இவங்க பைத்தியம் மாதிரி என்னை ஆக்க பார்க்குறாங்களா? இல்லை அவங்களுக்குத்தான் எதுவும் பிரச்சனையா? குடிச்சா எல்லாரும் இப்படித்தான் செய்வாங்களா? குடிச்சிட்டா இப்படித்தான் நடந்துக்கணுமா? இவங்களை நம்பி தானே எங்க வீட்டில கட்டிக் கொடுத்தாங்க? அப்படி இருக்க பொண்டாட்டிக்கிட்ட நல்லா இருக்கவெல்லாம் கூடாதா?”
“…”
“இந்த வீட்டில வந்ததில் இருந்து இராத்திரியானா அவங்க மிரட்டுறதில என்னை எதுவும் செஞ்சிருவாங்களோன்னு பயந்து நான் தூங்கினதே இல்லை மாமி…”
“…”
“சின்ன வயசிலயும் எங்கம்மாவை அப்பா ஏதாச்சும் செஞ்சிடுவார்னு பயந்து நான் தூங்கினது இல்ல, இப்பவும் தூங்க கிடைக்கலை. நிம்மதியா நல்லா தூங்க ஆசையா இருக்கு மாமி. இந்த தூங்குற ஆசையெல்லாம் கட்டக் கடைசியா போய் சேருற கல்லறையிலதான் கிடைக்குமோ? என்னமோ?”
“இப்படி பேசாதடாம்மா…”
“மீதியும் சொல்லுறேன் மாமி… இவங்க இப்படி செய்யுறாங்கன்னு பெரியவங்க கிட்ட சொன்னா ஒருவேளை கேட்பாங்கன்னு நினைச்சு மாமா கிட்ட போய் சொன்னனா… அன்னிலருந்து என்னை கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்டு” இப்போது விக்கி விக்கி அழ ஆரம்பித்து இருந்தாள்.
“…”
“இவங்க பேசினதை எல்லாம் என்னாலயே காது கொண்டு கேட்க முடியலை, பெரியவங்க அவங்க என்னச் செய்வாங்க சொல்லுங்க? என் அப்பா மாதிரி அவங்க அவங்க கூட என்னை சேர்த்துப் பேசி….”அழுகை அவளை விடவே இல்லை.
“…”
“அப்புறம் மாமாவும், கொழுந்தனும் வேற வீடு பார்த்து போயிட்டாங்க. அத்தனையும் இவங்க செஞ்சுட்டு ஊரெல்லாம் நான் ஒழுங்கா சோறு பொங்கிப் போடாததாலத்தான்னு எங்களை மாமா தனிக்குடித்தனம் வச்சதாக இவங்களே எல்லார் கிட்டயும் சொல்லிட்டாங்க.”
“…”
“அப்புறம் என் வயித்தில பாப்பா வந்துச்சா, நான் கூட இனி நமக்கு வாழறதுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சுட்டுன்னு நம்பிட்டேன் மாமி” பிள்ளையை இழந்தவளின் துயரத்தை சுவற்றின் இப்பக்கம் இருந்து இவரால் வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது.


Leave a Reply