8. Suvar_Short story_Jansi

அழுதுக் கொண்டிருந்தவளை வெறித்துக் கொண்டிருந்தவருக்கு ‘இத்தனை நேரமாய் கணவனின் குரலே கேட்கவில்லையே?’என தோன்றவும் 

“அழாதம்மா செல்வி, இதோ இப்ப உங்க மாமாவை பார்த்துட்டு திரும்ப வரேன்… நாம பேசுவோம்.”எனச் சொல்லி முன்னறைக்கு திரும்பியவரது சிந்தனைக்குப் பதிலாக அவரது கணவரின் வெறித்தப் பார்வை மட்டும் கிடைத்தது. நொந்த அந்த உடலை விட்டு கண் வழியாக உயிர் ஏகாந்த வெளியில் பயணப்பட்டு இருந்தது போலும். அடுத்தடுத்து அலைபேசி வழியாக செய்திகள் பறக்க, நிகழ வேண்டியவை நடைபெற ஆரம்பித்தன.

மாதா ஆலயத்தில் ஒற்றை மணி எனும் துக்க மணி அடிக்கவும் ஊரில் ஒரு சாவு நிகழ்ந்திருப்பதை அனைவரும் அறிந்துக் கொண்டார்கள். சுகந்தி வீட்டில் உற்றார் உறவினர்கள் ஒருவர் ஒருவராக வந்துச் சேர்ந்தனர்.

சுகந்தியின் மகள் தனது குடும்பத்தோடு வந்து இருந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தாள். சுகந்தியின் மருமகள் மல்லிகா மகன் ஜோனாவோடு வந்து வெறித்தப் பார்வையோடு அமர்ந்திருந்தாள்.

“குடிச்சிட்டு புருசன்காரன் கிணத்தில விழுந்து செத்ததில் இருந்து மல்லிகா இப்படியேதான் இருக்கா.ஆனால், முன்ன விட இப்ப அவ பரவாயில்லைனு தான் சொல்லணும்.”

“புருசன்காரன் செத்ததில் இருந்தா இல்ல முன்ன இருந்தா?” பெட்டியில் இருந்த கணவனின் பிரேதத்தின் மீது கவனம் பதிந்து இருந்த சுகந்தியின் மனம் முனகியது.

“புருசன் போனதும் மல்லிகா தன்னோட அண்ணன் வீட்டிலயே இருந்து போய் புள்ளையை வளர்த்தா. சும்மா சொல்லக் கூடாது சுகந்தி மருமகளுக்கும் பேரனுக்கும் ஒரு குறையில்லாம செலவுக்கும் படிப்புக்கும்னு பணத்தை வாரி இறைக்கப் போய்தான் அவன் இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்கான். ஜோனாக்கு அமெரிக்கால வேலை கிடைச்சிருக்கு அம்மாவை தன் கூடவே கூட்டிட்டு போறானாம் நல்ல பையன்.”

சுகந்தியின் குடும்ப விபரங்கள் துஷ்டி வீட்டிற்கு வந்தவர்களுக்கிடையே பகிரப்பட்டுக் கொண்டு இருந்தன.

சுகந்தியின் கணவனின் நல்லடக்கம் முடிந்து விசேசமும் முடிந்து அனைவரும் தத்தம் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

தங்களோடு வந்து இருக்கச் சொல்லி மகள் பலமுறை கேட்டும் தாய் மறுத்திருக்க, அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதாக கூறி விடைப்பெற்றுச் சென்றாள். ஜோனாவும் தனது அப்பம்மாவிடம் தன்னுடன் அமெரிக்கா வரச் சொல்லிக் கேட்டிருக்க சுகந்தி மறுத்து விட்டிருந்தார்.

“அப்பம்மா, இங்க எதுக்கு தனியா இருந்துக்கிட்டு, எங்க கூட வரலாம் தானே?”

“இப்ப வரைக்கும் அப்பம்மாவுக்கு நல்லா நடக்க முடியுது, நல்லா கண்ணு தெரியுது ஜோனா கண்ணா. முடியாதப்ப நீதானே வந்து பார்த்துக்கப் போற? இத்தனை வருசத்தில நான் வெளி உலகம் பார்த்ததே இல்ல கண்ணா இன்னும் கொஞ்ச நாள் இதை எல்லாம் பார்த்துக்கிறேனே?”

‘கடந்த பல வருடங்களில் கணவனின் சளி, மலம், சிறு நீர் இது தவிர்த்து தன் அப்பம்மா கண்டதும் என்ன?’அப்பம்மா குறித்து பேரனின் மனம் நெக்குருகியது.

வீட்டில் முழு நேரமும் துணைக்கு ஆள், டிரைவர் எல்லாம் வைப்பதாக ஜோனா சொல்லியும் கூட சுகந்தி மறுத்து விட்டார். முழு நேர வேலைக்கென்று இல்லாமல் அவ்வப்போது வந்து செல்லும் வண்ணம் ஆள் வைத்து, எப்போது வேண்டுமானாலும் அணுகும் வண்ணம் உள்ளூர் தெரிந்த வண்டிக்காரரிடம் சொல்லி வைத்து என பலபல ஏற்பாடுகள் செய்த பின்னரே ஜோனா தனது மாமா வீட்டிற்கு திரும்ப புறப்பட்டான். ஆமாம், அங்கிருந்துதான் அவனுக்கு தனது தாயுடன் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது.

தனது காலை தொட்டு வணங்கிய ஜோனாவின் நெற்றியில் சிலுவை வரைந்த சுகந்தி பேரனிடம் கேட்டார்.

“நான் சொன்னது ஞாபகமிருக்கில்ல கண்ணு?”

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!